
பாரபட்சம் காட்டுகிறாரா முதல்வர்?
“எவ்வளவு பேர் எதிர்த்தாலும் வளர்ச்சியைக் காரணம் காட்டி எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அவருடைய கட்சிக்காரர் ஒருவர் தொடுத்திருக்கும் வழக்கால் முடங்கிக்கிடக்கும் மேட்டூர் அரசு கலைக் கல்லூரியை முன்னேற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்” என்று புகார் வாசிக்கிறார்கள் மேட்டூர்வாசிகள்.
என்ன பிரச்னை? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மேவை சண்முகராஜாவிடம் பேசினோம். ‘‘மேட்டூரில் இப்போது உள்ள அரசு கல்லூரி, எங்களின் 20 ஆண்டு கால போராட்டத்துக்குக் கிடைத்த பலன். 2005-ம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியாகத் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி, 2010-ம் ஆண்டு வரை மேட்டூர் மேல்நிலைப்பள்ளிக் கட்டடத்தில் இயங்கிவந்தது. 2010-ம் ஆண்டு 16 ஏக்கர் பரப்பளவில் கல்லூரிக்கென சொந்தக் கட்டடங்களைக் கட்டியது பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம். இதனால், மேட்டூர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்து மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நிலைக்கவில்லை. புதிதாகக் கல்லூரி கட்டப்பட்ட நிலம் தொடர்பாக செல்வக்குமார் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க, பிரச்னையில் தவிக்கிறது இந்தக் கல்லூரி.

வழக்குத் தொடுத்த பிறகு, கல்லூரியில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவில்லை. உயரும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டடங்கள் கட்டப்படவில்லை. நூலகம், ஆய்வுக்கூடம், மைதானம் என எந்த அடிப்படை வசதியும் கல்லூரியில் இல்லை. அவ்வளவு ஏன்... ஏராளமான புதிய பாடப்பிரிவுகளைக் கொண்டிருந்த கல்லூரியில் இப்போது வெறும் ஏழு பாடப் பிரிவுகள் மட்டுமே இருக்கின்றன. இந்தச் சூழலில்தான் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் இது பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியிலிருந்து அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது. அரசு கல்லூரியாக மாறிய பிறகாவது பிரச்னைகள் சரியாகிவிடும் என்று நம்பினோம். ஆனால், முன்பைவிட நிலைமை மோசமாகிவிட்டது. அரசும் இந்தக் கல்லூரியைக் கண்டுகொள்ளாததால் இருக்கும் கட்டடங்களும் பாழடைந்து விட்டன. வளாகம் முழுக்க புதர் மண்டி, அங்கே சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து விட்டன.
இந்தக் கல்லூரிக்குப் பின்பு எடப் பாடியில் தொடங்கப்பட்ட அரசு கலைக்கல்லூரி சர்வ வசதிகளுடன் சிறப்பாகச் செயல்படுகிறது. சேலத்துக் காரரான முதல்வர் ஒரு கண்ணில் சுண்ணாம்பு, ஒரு கண்ணில் வெண்ணெய் என்பதுபோல செயல்படக் கூடாது. எடப்பாடியைப் போல, மேட்டூர் கல்லூரியின் வளர்ச்சியிலும் அக்கறை காட்ட வேண்டும்” என்றார்.

மேட்டூர் அரசு கலைக் கல்லூரியின் எம்.காம் மாணவரான சக்திவேல், ‘‘இப்போதெல்லாம் புதுவிதமான படிப்புகளையே மாணவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், எங்களின் கல்லூரியில் அதற்கான வாய்ப்புகளே இல்லை. மிகவும் குறைவான பாடப்பிரிவுகளே இருக்கின்றன. முதுகலையில் வணிகவியல் துறை மட்டுமே இருக்கிறது. எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடையாது” என்று வெம்புகிறார்.
சேலம் எம்.பி-யான பார்த்திபனிடம் பேசினோம். ‘‘தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி ஆரம்பத்தில் சிறப்பாகத்தான் செயல்பட்டு வந்தது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் இந்தக் கல்லூரியைக் கண்டு கொள்ளவில்லை. நான் மேட்டூர் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது அந்தக் கல்லூரிக்குச் சுற்றுச்சுவர் கட்டிக்கொடுக்க முயன்றேன். ஆனால் அ.தி.மு.க-வைச் சேர்ந்த செல்வக்குமார் கல்லூரி நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பதால், புதர்களைக்கூட அகற்ற அனுமதிக்கவில்லை. முதலமைச்சர்தான் இந்த விவகாரத்தில் தலையிட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வேண்டும்’’ என்றார்.
தற்போதைய மேட்டூர் எம்.எல்.ஏ-வான செம்மலை, ‘‘எங்கள் கட்சிக்காரர் ஒருவர்தான் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு வழக்கை வாபஸ் வாங்க பேசிவருகிறோம்” என்றார்.

கல்லூரி நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள செல்வக்குமாரிடம் பேசினோம். ‘‘எங்கள் முன்னோர் காவிரி ஆற்றங்கரையில் குடியிருந்தார்கள். மேட்டூர் அணை கட்டுவதற்காக அவர்களை அந்த இடத்திலிருந்து காலிசெய்த அரசு, இப்போது கல்லூரி இருக்கும் இடத்தை எங்களுக்குக் குத்தகைக்குக் கொடுத்தது. நான்கு தலைமுறையாக அந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். எங்கள் முன்னோரின் சமாதி, குலதெய்வம் அனைத்தும் அங்குதான் இருக்கின்றன. எந்தவித முன்னறிவிப்பு நோட்டீஸும் கொடுக்காமல், அந்த இடத்தைப் பறித்துவிட்டனர். அதனால்தான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். ஆனால், இதுநாள் வரை இந்தப் பிரச்னை குறித்து என்னிடம் யாரும் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை’’ என்றார்.
மாணவர் நலனைக் கருத்தில் கொண்டு பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.