
விளக்கும் எம்.ஜி.ஆர் பேரன்
‘அ.தி.மு.க-வினர் அனைவரும் ஒன்றுபட வேண்டும்’ என்று சசிகலா அழைப்பு விடுத்துக்கொண்டிருக்க... சசிகலாவை முன்வைத்து எம்.ஜி.ஆர் குடும்பத்துக்குள்ளேயே குழப்பங்கள் கும்மியடிக்க ஆரம்பித்திருக்கின்றன. ‘‘சசிகலாவின் திட்டமிட்ட அரசியலுக்குத் துணைபோய்விட்டார் எம்.ஜி.ஆர் பேரன் குமார் ராஜேந்திரன்’’ என்று குற்றம்சாட்டியிருக்கிறார் எம்.ஜி.ஆரின் மற்றொரு பேரனும், அ.தி.மு.க-வைச் சேர்ந்தவருமான ராமச்சந்திரன். இதையடுத்து, எம்.ஜி.ஆரின் பேரனும் ‘எம்.ஜி.ஆர் நினைவு இல்ல நிர்வாகி’யுமான குமார் ராஜேந்திரனிடம் பேசினோம்...
‘‘எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில், ‘அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா’ என்று அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது பலத்த சர்ச்சையாகியிருக்கிறதே?’’
‘‘இது அ.தி.மு.க பொன்விழா ஆண்டு. எனவே, ‘நினைவு இல்லத்துக்கு வந்து கொடியேற்றுகிறோம், புதிதாக அடிக்கல்லும் நாட்டுகிறோம்’ என்று சசிகலா தரப்பிலிருந்து அனுமதி கேட்டார்கள். நாங்களும் ஒப்புக்கொண்டோம். ஆனால், சசிகலாவைப் பிடிக்காத அவருடைய அரசியல் எதிரிகள்தான் இதைச் சர்ச்சையாக்கிவருகிறார்கள்.’’
‘‘அ.தி.மு.க பொதுச்செயலாளர் யார் என்பது குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, இப்படியோர் அடிக்கல் நாட்டுவதற்கு நீங்கள் எப்படி அனுமதி அளித்தீர்கள்?’’
‘‘இதே கேள்வியை அ.தி.மு.க தலைமையிலிருந்தே ஒருவர் என்னிடம் கேட்டார். அவரிடம் ‘சசிகலா, அ.தி.மு.க பொதுச்செயலாளர் அல்ல என்பதற்கான நீதிமன்றத் தீர்ப்பு ஏதேனும் இருந்தால் கொடுங்கள்’ என்று கேட்டேன். ‘அப்படி எதுவும் இல்லை... வழக்கு நீதிமன்றத்தில்தான் இருக்கிறது’ என்று பின்வாங்கிவிட்டார். ஆனால், சசிகலா தரப்பிலோ, ‘அ.தி.மு.க பொதுச்செயலாளராகத் தலைமைக் கழகத்துக்குச் சென்று, அங்குள்ள மேலாளரிடம் கணக்குகள் பற்றிக் கேட்டறியும் உரிமை சசிகலாவுக்கு உண்டு’ என்பதற்கான இடைக்காலத் தீர்ப்பைக் காட்டினார்கள். பொதுச்செயலாளர் பதவி குறித்து இப்போது ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் யாரும், மேற்கண்ட தீர்ப்புக்கு எதிராக ஏன் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை? நானும் ஒரு வழக்கறிஞர்தான். நீதிமன்றத் தீர்ப்பை ஒருபோதும் நான் அவமதிக்க மாட்டேன்.’’
‘‘ `அ.தி.மு.க-வைத் துண்டாட நினைக்கும் சசிகலாவுக்கு எம்.ஜி.ஆர் குடும்பத்தினரே துணைபோயிருப்பது மாபெரும் குற்றம்’ என்று உங்கள் சகோதரர் ராமச்சந்திரனே குற்றம்சாட்டுகிறாரே?’’
‘‘எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்துக்கு சசிகலா வந்து சென்றதில் எந்தவித அரசியலும் கிடையாது. கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது, நினைவு இல்லத்துக்கு வருமாறு இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரையும் அழைத்திருந்தேன். ஆனால், இருவருமே வரவில்லை. இந்த நிலையில்தான், சசிகலா அவராகவே எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்துக்கு வந்தார். அவரும்கூட எங்கள் சித்தியும், ராமச்சந்திரனின் அம்மாவுமான சுதா அழைத்ததன் பேரில் முதலில் ராமாபுரம் தோட்டத்துக்குச் சென்றுவிட்டுத்தான் இங்கே வந்திருந்தார். ஆக, ராமாபுரம் தோட்டத்துக்கு வரச் சொல்லி சசிகலாவை அழைத்ததே என் சித்தி சுதாதான். ஆனால், சித்தியின் மகனும், என் தம்பியுமான ராமச்சந்திரனோ அ.தி.மு.க-வில் இருப்பதால் சசிகலாவுக்கு எதிராகப் பேசுகிறார்.’’
‘‘அப்படியென்றால், ராமச்சந்திரனை அரசியல்ரீதியாக யாரேனும் பின்னிருந்து இயக்குவதாகச் சந்தேகப்படுகிறீர்களா?’’
‘‘ராமச்சந்திரன் இப்போதுதான் அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்துகொண்டிருக்கிறார். எனவே, இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கவேண்டிய நிர்பந்தம் ஏதேனும் அவருக்கு இருந்திருக்கலாம். அது குறித்தெல்லாம் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தனிப்பட்ட வகையில் எனக்கும் ராமச்சந்திரனுக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை. குடும்பரீதியாக அனைவரும் பாசத்தோடுதான் பழகிவருகிறோம்.’’
‘‘ஆனால், எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்துக்காகப் பலரிடமும் நீங்கள் நிதி வசூல் செய்துவருவதாக உங்கள் சகோதரர் ராமச்சந்திரன் புகார் கூறுகிறாரே?’’
‘‘இதுவரையிலும் அப்படி எந்தவொரு நிதி வசூலும் நான் செய்தது கிடையாது. ‘எம்.ஜி.ஆர் நினைவு இல்லப் பராமரிப்புக்கு ஆலந்தூரிலுள்ள மீன் மார்க்கெட் வாடகை வருமானத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு’ எம்.ஜி.ஆரே உயில் எழுதிவைத்திருக்கிறார். ஆனால், அந்த வாடகை வருமானம் மிக மிகச் சொற்பமான தொகையாக இருப்பதால், எங்கள் குடும்பத்தினரே சொந்தமாகக் கைக்காசைப் போட்டுத்தான் பராமரித்து வருகிறோம். மற்றபடி யாரிடமும் ஒரு பைசாகூட நாங்கள் கையேந்தி வாங்கியதில்லை. போகிறபோக்கில் ஒருவர்மீது புகார் சொல்லிவிடுவது ரொம்பவும் எளிது. அப்படியல்லாமல், ‘நாங்கள் யாரிடம், எவ்வளவு தொகை வாங்கினோம்’ என்பதைப் புகார் கூறுபவர்கள் ஆதாரபூர்வமாகச் சொல்லட்டும்.’’

‘‘அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் குடும்ப வாரிசுகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று அண்மையில் ஆதங்கப்பட்டிருக்கிறீர்களே?’’
‘‘முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவரதனுக்கு எதன் அடிப்படையில் எம்.பி சீட் கொடுத்தார்கள்... வாரிசு அடிப்படையில்தானே? ஆனால், எம்.ஜி.ஆர் குடும்ப வாரிசுகளுக்குக் கட்சியில் எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது உங்களுக்கே தெரியும். அண்மையில், என் தம்பி ராமச்சந்திரன் குறித்துப் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது, அதற்கான பதிலாகத்தான், ‘எம்.ஜி.ஆர் குடும்ப வாரிசான ராமச்சந்திரன் அ.தி.மு.க-வில் எம்.எல்.ஏ சீட் கேட்டு மனு கொடுத்தும்கூட அவருக்குக் கிடைக்கவில்லை’ என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தேன். அதுவும்கூட ஏற்கெனவே செய்தித்தாள்களில் வெளிவந்தவைதானே தவிர, என்னுடைய தனிப்பட்ட கமென்ட் எதுவும் கிடையாது.’’