கொரோனாவால் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை தமிழ்நாடு, தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் முழுமையாக ரத்து செய்திருக்கின்றன. முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் மற்றும் வருகைப் பதிவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும் என்றும் அனைவருமே தேர்ச்சி பெற்றதாகவும் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முந்தைய அறிவிப்பு
சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த மாதம் அறிவித்தது. மேலும், மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதியும் தேசிய அளவில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வான ஜே.இ.இ (JEE) முதன்மைத் தேர்வு ஜூலை 18 முதல் 23-ம் தேதிகளுக்குள் நடத்தப்படும் எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
இந்தச்சூழலில், நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் இந்தத் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

``பல்வேறு மாநில அரசுகளும் தேர்வு நடத்துவதற்கு எதிராக இருக்கின்றன. மீதமிருக்கும் தேர்வுகளை முந்தைய தேர்வுகளின் சராசரி மற்றும் பள்ளிகளில் மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவே பரிந்துரை செய்துவருகின்றன. கொரோனா பரவல் அதிகம் இருப்பதால், மாணவர்களை தேர்வு மையங்களுக்கு வரவழைப்பதில் இருக்கும் ஆபத்தை உணர்ந்தே மாநில அரசுகள் பல இந்த முறையில் மதிப்பெண்கள் வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கின்றன.
இந்தச்சூழலில், தேர்வுகளை நடத்த மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகமும் தயாராக இல்லை. எனவே, தேர்வுகளை ரத்து செய்துவிடலாம் என்ற முடிவில் இருக்கிறது. ஆனால், இதுதொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை’’ என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சி.பி.எஸ்.இ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மகாராஷ்டிரா, டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசை ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தன.
மேலும், ``பெருந்தொற்றுக்கு எதிராக உலகமே போரிட்டுக்கொண்டிருக்கும் சூழலில் நமது நாட்டின் சூழ்நிலையையும் கருத்தில்கொள்ளும்பட்சத்தில் தேர்வுகளை ரத்து செய்வதே சிறந்த முடிவு என்பதையும் மத்திய அரசு உணராமல் இல்லை. அதேநேரம், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளைத் தேர்வு செய்ய லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை நீட் மற்றும் ஜே.இ.இ போன்ற தேர்வுகள் நிர்ணயிக்கும். அந்த அளவுக்கு முக்கியமான தேர்வுகள் இவை என்பதையும் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
அதனால், தேர்வுகளை நடத்துவது குறித்தும் ஆலோசனை நடக்கிறது. ஆனால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் எப்படி தேர்வை நடத்துவது’’ என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்தத் தேர்வுகள் தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை (NTA) தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருசில நாள்களில் முடிவு?
அதேநேரம், நீட் தேர்வை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில், உரிய சமூக இடைவெளி விட்டு குறைவான எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டு நடத்துவது குறித்தும் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. ஆனால், இதுகுறித்து எதுவும் இறுதி செய்யப்படவில்லை. அடுத்த சில நாள்களில் இதுதொடர்பான முடிவு எடுக்கப்பட்டு முறையான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.