அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

கோவணத்தையும் உருவிடாதீங்க... கெஞ்சும் சிறு, குறு நிறுவனத்தினர்!

சிறு, குறு தொழில் நிறுவனங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சிறு, குறு தொழில் நிறுவனங்கள்

ஆண்டுதோறும் 6 சதவிகித கட்டண உயர்வு என்பதெல்லாம் சிறு, குறு நிறுவனங்களை அழிவுப் பாதைக்குத்தான் கொண்டு செல்லும்

‘ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்தான் என் கனவு’ என்று மேடைதோறும் முழங்கிக் கொண்டிருக்கிறார் முதல்வர். ஆனால், தொழில் நகரான கோவையில், ‘சமீபத்திய மின் கட்டண உயர்வு அறிவிப்பால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அழிந்தே போய்விடும்’ என்று தீர்மானம் இயற்றி ‘ஷாக்’ கொடுத்திருக்கின்றனர் பல்வேறு தொழில் அமைப்பினர்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

கோவையில் பல்வேறு துறையில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனத்தினர் இது குறித்துப் பேசுகையில், “ஒரு யூனிட்டுக்கு 40 பைசாதான் உயர்கிறது எனச் சொல்கிறார் அமைச்சர். வீட்டு மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு பிரச்னை இல்லாமல் இருக்கலாம். நாங்கள் அதிக அளவு மின்சாரம் பயன்படுத்துவோம். எனவே, மின் கட்டண உயர்வு எங்களைக் கடுமையாக பாதிக்கும். நாங்கள் இன்னும் கொரோனா பாதிப்பிலிருந்தே மீளவில்லை. ஏற்கெனவே சொத்து வரி, தண்ணீர் வரி என்ற பெயரில் எங்களைக் கோவணத்துடன்தான் உட்கார வைத்திருக் கிறார்கள். இப்போது மின் கட்டண உயர்வு என்ற பெயரில், அந்தக் கோவணத்தையும் உருவப் பார்க்கிறார்கள்” என்றனர் விரக்தியுடன்.

கோவணத்தையும் உருவிடாதீங்க... கெஞ்சும் சிறு, குறு நிறுவனத்தினர்!

‘தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் சங்க’த்தின் (டேக்ட்) கோவை மாவட்டத் தலைவர் ஜேம்ஸ், “குஜராத் போன்ற மாநிலங்களில் இரவு நேர பயன்பாட்டுக்கு மின் கட்டணச் சலுகை இருக்கிறது. இதன் காரணமாக அங்கு உற்பத்தி யாகும் மோட்டார்கள், சந்தையில் 20 சதவிகிதம் குறைவான விலைக்கு விற்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உற்பத்திச் செலவு அதிகரித் திருப்பதால், கோவையிலுள்ள பம்ப் மோட்டார் உற்பத்தி யாளர்கள் குஜராத்துடன் போட்டி போட முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, தமிழ்நாடு அரசு எங்களுக்குச் சலுகை வழங்க வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். இந்த நிலையில்தான் சிறு, குறு தொழில்களுக்கு 25 சதவிகிதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்படவிருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. கூடவே, ஆண்டுதோறும் 6 சதவிகித கட்டண உயர்வு என்பதெல்லாம் சிறு, குறு நிறுவனங்களை அழிவுப் பாதைக்குத்தான் கொண்டு செல்லும்” என்றார்.

ஜேம்ஸ்
ஜேம்ஸ்

சிறு, குறு நிறுவனங்களின் குமுறல்கள் குறித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விளக்கம் கேட்ட போது, ‘‘நேரில் வாருங்கள் சொல்கிறேன்’’ என்றார். இதை யடுத்து அமைச்சரை நேரில் சந்திப்பதற்காக தொடர்ந்து மூன்று முறை அவரது அலுவலகத்துக்கே சென்று காத்திருந்தும் அவரைச் சந்திக்க முடியவில்லை. அமைச்சர் உரிய விளக்கம் தரும் பட்சத்தில், அதையும் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.