
நமக்குப் பிறகு 1948-ம் ஆண்டு சுதந்திரம் வாங்கிய மியான்மரில் அரசாங்கத்தைவிட ராணுவத்துக்குச் செல்வாக்கு அதிகம்.
நம் ஊரில் ஆட்சியாளர்களுக்கு யார்மீதாவது கோபம் வந்தால், உடனே வீட்டில் சோதனை நடத்தி, கஞ்சா வைத்திருந்ததாகக் ‘கண்டுபிடித்து’ சிறையில் தள்ளுவார்கள். மியான்மர் இன்னும் அந்த அளவுக்கு வளரவில்லை. ஜனநாயகரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைமை ஆலோசகராக இருந்த ஆங் சாங் சூகி வீட்டில் சோதனை நடத்தி, ‘இறக்குமதிச் சட்டத்துக்கு விரோதமாக வீட்டில் வாக்கி டாக்கி வைத்திருந்தார்’ என்று குற்றம்சாட்டி வீட்டுக்காவலில் வைத்துவிட்டனர். ‘கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்தார்’ எனக் குற்றம்சாட்டி, ஜனாதிபதியாகப் பதவியேற்கவிருந்த வின் மியின்ட்டையும் கைதுசெய்துள்ளனர். மியான்மரில் ஜனநாயக முறைப்படி தேர்தலில் ஜெயித்து, புதிய அரசு பதவியேற்கவிருந்த பிப்ரவரி 1-ம் தேதி அதிகாலையில் இந்த அரண்மனைக் கலகம் நடத்தி, அங்கு ஆட்சியைப் பிடித்திருக்கிறது ராணுவம். என்ன நடக்கிறது மியான்மரில்... அதனால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
நமக்குப் பிறகு 1948-ம் ஆண்டு சுதந்திரம் வாங்கிய மியான்மரில் அரசாங்கத்தைவிட ராணுவத்துக்குச் செல்வாக்கு அதிகம். 150-க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள், அவர்களுக்குள் அடிக்கடி நடக்கும் மோதல்கள் என அமைதியற்ற சூழல் இருப்பதால், எப்போதுமே அரசாங்கம் ராணுவத்தைச் சார்ந்திருக்கும். இதனால், ஆட்சி செய்யும் ஆசை ராணுவத்துக்கு இயல்பாகவே வந்துவிட்டது. அப்படித்தான் 1962-ம் ஆண்டு ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் அதிகாரத்துக்கு வந்தது. ஜனநாயகத்துக்காக மக்களும் மாணவர்களும் நடத்திய பல போராட்டங்கள் இரக்கமின்றி நசுக்கப்பட்டன.

அந்தப் போராட்டங்களின் அடையாளமாக உருவெடுத்தவர், ஆங் சாங் சூகி. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் அவரை வீட்டுக்காவலில் வைத்திருந்தது ராணுவம். அந்த நேரத்தில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. 1990-ம் ஆண்டு ராணுவம் மனம் மாறி தேர்தலை நடத்தியது. அந்தத் தேர்தலில் ஆங் சாங் சூகி கட்சியே வெற்றி பெற்றது என்றாலும், அவர்களிடம் ஆட்சியைக் கொடுக்க மறுத்துவிட்டது ராணுவம்.
2008-ம் ஆண்டுதான் ஓரளவுக்கு ஜனநாயக உரிமையை மக்களுக்குக் கொடுக்க ராணுவம் முன்வந்தது. புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. 2010-ம் ஆண்டு வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார் சூகி. ஆனால், புதிய அரசியல் சட்டத்தை ஏற்காமல், அப்போது நடந்த தேர்தலை அவரது தேசிய ஜனநாயக லீக் கட்சி புறக்கணித்தது.
உலகிலேயே விநோதமான அரசியல் சட்டத்தை உருவாக்கிவைத்திருக்கிறது மியான்மர் ராணுவம். ஆங் சாங் சூகி கையில் நாட்டின் அதிகாரம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே வடிவமைக்கப்பட்ட அரசியல் சட்டம் அது! அதன்படி, தேர்தல் மூலம் ஜனாதிபதி பதவியை அடைய விரும்பும் ஒருவர், ராணுவ அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அவரோ, அவரின் வாழ்க்கைத்துணையோ, பிள்ளைகளோ வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றிருக்கக் கூடாது. (சூகியின் இரண்டு மகன்களும் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர்கள்!)
அதுமட்டுமல்ல, பாதுகாப்பு மற்றும் உள்துறை என ராணுவத்தையும் போலீஸையும் கட்டுப்படுத்தும் இரண்டு அமைச்சகங்களும் ராணுவத் தளபதியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அரசாங்கம் அதில் தலையிட முடியாது. நாடாளுமன்றத்தில் மொத்தம் 664 உறுப்பினர்கள். இதில் 25 சதவிகிதம் - அதாவது 166 இடங்கள் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும். அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டுமென்றால், 75 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஒப்புதல் தேவைப்படும். திருத்துவதை ராணுவம் எதிர்க்கும் என்பதால், எப்போதுமே அரசியல் சட்டத்தைத் திருத்த முடியாது.
ராணுவமே தனது பினாமியாக ஒரு கட்சியை வைத்திருக்கிறது. யூ.எஸ்.டி.பி (Union Solidarity and Devepolment Party) என்ற இந்தக் கட்சி தேர்தலிலும் போட்டியிடும். மற்றவர்கள் ஆட்சி அமைக்க வேண்டுமென்றால், 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஜெயிக்க வேண்டும். ஆனால், இந்தக் கட்சி கால்வாசி இடங்களை ஜெயித்தாலே போதும்... ராணுவ உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்துவிடலாம்.

இவ்வளவு நெருக்கடிகளை விதித்தாலும், 2015-ம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாய லீக் கட்சி வெற்றிபெற்றது. ஆனால், சூகி ஜனாதிபதி ஆக முடியவில்லை. எனவே, அவர் மியான்மர் நாட்டின் தலைமை ஆலோசகர் ஆனார். அவரது கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார். மக்கள் செல்வாக்கு இருந்தாலும், ராணுவத்தை மீறி சூகியால் ஏதும் செய்ய முடியவில்லை. ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் தாக்குதல் தொடுத்து, அதன் விளைவாக ஏழு லட்சம் பேர் அகதிகளாக வெளியேற நேர்ந்தபோதும், சூகி அந்த நடவடிக்கைகளை ஆதரிக்க நேர்ந்தது.
ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் கடந்த நவம்பரில் தேர்தல் நடைபெற்றது.
80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளுடன், முன்பைவிட அதிகமாக 396 இடங்களைப் பெற்று மீண்டும் வென்றது சூகி கட்சி. ராணுவத்தின் ஆதரவைப் பெற்ற யூ.எஸ்.டி.பி கட்சிக்கு வெறும் 33 இடங்களே கிடைத்தன. ‘என்ன செய்தாலும் சூகிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை வீழ்த்த முடியாது. ராணுவத்தின்மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பை அகற்ற முடியாது’ என்பதை உணர்ந்துகொண்ட ராணுவத் தலைமை, ‘தேர்தலில் ஆளுங்கட்சி மோசடியில் ஈடுபட்டது’ எனக் குற்றம்சாட்டியது. தேர்தல் ஆணையம் இதை விசாரித்துவிட்டு, ‘மோசடி எதுவும் நடக்கவில்லை’ என்று சொல்லிவிட்டது.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றம் கூடி, புதிய அரசை அமைக்க வேண்டிய நேரத்தில் ராணுவக் கலகம் நடந்திருக்கிறது. நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் அதிகாரம், ராணுவத் தலைவர் ஜெனரல் மின் ஆங் லெய்ங்கிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்துள்ளன. ஆனால், ஐ.நா சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் எவையும் மியான்மர்மீது நடவடிக்கை எடுக்க முடியாதபடி சீனா தடுக்கிறது. மியான்மரில் பெருமளவு முதலீடு செய்திருக்கும் சீனா, அந்த நாட்டு ராணுவ அரசைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறது.
இந்தியா இந்த விஷயத்தில் அவசரப்பட்டு கருத்து சொல்லாமல் நிதானம் காக்கிறது. இதற்குக் காரணம் இருக்கிறது.

இந்தியாவுக்கும் மியான்மருக்கும் 1,468 கிலோ மீட்டர் நீள எல்லை இருக்கிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கும் பல பயங்கரவாத அமைப்புகள், தங்கள் பயிற்சி முகாம்களை மியான்மர் எல்லைக்குள் வைத்திருக்கின்றன. அவர்களுக்கு சீனா மறைமுகமாக உதவி செய்கிறது. இந்த அமைப்பினர் அங்கிருந்து கிளம்பிவந்து இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்திவிட்டு, திரும்பவும் மியான்மருக்குள் பதுங்கிவிடுவார்கள். கடந்த 15 ஆண்டுகளாக மியான்மருடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டு, இந்த பயங்கரவாத முகாம்களை அழித்துவருகிறது இந்தியா. மியான்மர் ராணுவத் தளபதிகளும் ஒரேயடியாக சீனாவைச் சார்ந்திருக்க விரும்பாமல், இந்தியாவுக்கு இந்த விஷயத்தில் உதவி செய்கின்றனர்.
இதைத் தொடர்ந்து மியான்மரில் துறைமுகம், வீட்டு வசதித் திட்டங்கள் எனப் பலவற்றை இந்தியா செய்துவருகிறது. இதற்கெல்லாம் முட்டுக்கட்டை போட சீனா பல தந்திரங்களைச் செய்கிறது. இந்த நேரத்தில், சீனா பக்கம் மியான்மர் ஒரேயடியாகச் சாய்ந்துவிட்டால், இந்தியாவின் வடகிழக்கு எல்லை கொந்தளிக்க ஆரம்பிக்கும். ஏற்கெனவே, சீனா செய்யும் வேலைகளால் நேபாளம் நமக்கு நேசமற்ற அண்டை நாடாக மாறிய நிலையில், மியான்மரும் அந்த வரிசையில் சேர்ந்துவிடக் கூடாது. இந்தியாவின் மெளனத்துக்கு இதுவே முக்கியக் காரணம்.
அரசியல் சட்டத்தை மாற்றாமல், மியான்மர் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாது என்பது மட்டுமே உண்மை!