அரசியல்
அலசல்
Published:Updated:

நெல்லை கனிம வள கொள்ளை சர்ச்சை! - அது வேற லாரி... இது வேற லாரி...

நெல்லை
பிரீமியம் ஸ்டோரி
News
நெல்லை

பிடிபட்ட லாரியைக் காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்து விசாரணை நடத்திய போலீஸார் லாரியையும், அதன் ஓட்டுநரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துவிட்டார்கள்

நெல்லை மாவட்டத்தில், கல்குவாரி விபத்தில் நான்கு அப்பாவி உயிர்கள் பலியான பின்னரும் கனிம வளக் கொள்ளை நிற்காமல் தொடர்கிறது. அம்பாசமுத்திரம் அருகே இருக்கும் அணைந்தநாடார்பட்டி கிராமத்தில் அனுமதி இல்லாத கல்குவாரியிருந்து நள்ளிரவில் எம் சாண்ட் ஏற்றிச் சென்ற லாரியை கிராம மக்களே சிறைப்பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால், கடத்தல்காரர்களுக்கு உதவியாக காவல்துறையே எஃப்.ஐ.ஆரை மாற்றிப்போட்டிருப்பதாகக் கொதிக்கிறார்கள் பொதுமக்கள்.

நெல்லை கனிம வள கொள்ளை சர்ச்சை! - அது வேற லாரி... இது வேற லாரி...

இது குறித்து நம்மிடம் பேசிய இடைகால் பஞ்சாயத்து துணைத் தலைவரான தர்மராஜ், “அணைந்தநாடார்பட்டியில் இருக்கும் கல்குவாரி மூடப்பட்டிருக்கும் நிலையிலும், இரவு பகலாக லாரிகளில் எம் சாண்ட் கடத்தல் நடக்கிறது. கடந்த 29-ம் தேதி இரவு 1:30 மணிக்கு 16 டயர்கள்கொண்ட பெரிய டாரஸ் லாரியில், எம் சாண்ட் ஏற்றிச் சென்றபோது மறித்துப் பிடித்தோம். பாப்பாக்குடி காவல்துறைக்கு நாங்கள் தகவல் சொன்னதால் அங்கு வந்த எஸ்.ஐ சுப்பிரமணி, ‘லாரி கண்ணாடியை உடைத்தீர்களா... டிரைவரின் செல்போனைப் பறித்தீர்களா?’ என எங்களை மிரட்டும் வகையில் பேசியதோடு, வருவாய்த்துறையினர் வருவதற்கு முன்பாகவே எங்கள் எதிர்ப்பை மீறி லாரியை ஸ்டேஷனுக்குக் கொண்டுபோனார்.

அதிகாலை 1:30 மணிக்கு குவாரி கேட் அருகே பிடிபட்ட லாரியை, காலை 5:30 மணிக்கு வேறோர் இடத்தில் பிடித்ததாக முதல் தகவல் அறிக்கையில் பதிவுசெய்திருக்கிறார்கள். அதோடு, இன்வாய்ஸில் 49 டன் எம் சாண்ட் இருந்தது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், எஃப்.ஐ.ஆரில் 7 யூனிட் கிரஷர் ஜல்லி இருந்ததாகப் பதிவுசெய்திருக்கிறார்கள். லாரியை ஸ்டேஷனிலிருந்து வெளியே கொண்டுபோய், அதிலிருந்த எம்-சாண்டை எடுத்துவிட்டு, கிரஷர் ஜல்லிக் கழிவு ஏற்றப்பட்டிருக்கிறது. லாரியை வெளியே கொண்டுசென்றதற்கான சிசிடிவி ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. இந்த ஆதாரங்களை முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்” என்றார் படபடப்புடன்.

நெல்லை கனிம வள கொள்ளை சர்ச்சை! - அது வேற லாரி... இது வேற லாரி...

இந்தப் பிரச்னை பற்றி நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் கேட்டதற்கு, “அந்த குவாரியில் சட்டவிரோதமாக எம் சாண்ட் ஏற்றிச் சென்ற லாரி பிடிபட்டதாகத் தகவல் வந்ததுமே, இது பற்றி விசாரித்து அறிக்கை அளிக்குமாறு சேரன்மகாதேவி சப் கலெக்டருக்கு உத்தரவிட்டிருக்கிறேன். அவரது விசாரணை முடிவு வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தர்மராஜ் - விஷ்ணு - சரவணன்
தர்மராஜ் - விஷ்ணு - சரவணன்

குற்றச்சாட்டு தொடர்பாக நெல்லை மாவட்ட எஸ்.பி-யான சரவணனிடம் கேட்டதற்கு, “பிடிபட்ட லாரியைக் காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்து விசாரணை நடத்திய போலீஸார் லாரியையும், அதன் ஓட்டுநரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துவிட்டார்கள். அந்த லாரியை எடை போடுவதற்காக வெளியே கொண்டு சென்றார்களே தவிர எம் சாண்டை மாற்றுவதற்காக அல்ல. லாரி ஸ்டேஷனுக்குள் வரும்போது என்ன இருந்ததோ அதுவே இப்போதும் இருக்கிறது. ஆனால், அந்தப் பகுதி மக்கள் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்” என்று முடித்துக்கொண்டார்.

சப் கலெக்டர் அறிக்கையாவது உண்மையைக் கண்டுபிடித்துச் சொல்லுமா?!