லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

‘போதும்’ இதுவே இனி நாம் அடிக்கடி உச்சரிக்க வேண்டிய வார்த்தை!

மினிமலிஸம்
பிரீமியம் ஸ்டோரி
News
மினிமலிஸம்

இதுதாங்க மினிமலிஸம்

திருமணமான பத்து நாள்களுக்குள் அமெரிக்கா கிளம்பிவிட்டேன். முதல் குடித்தனமே, தனிக்குடித்தனம். புதிய தேசம், அங்கிருக்கும் சுதந்திரம் என்பதாக எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்த காலம் அது. ஆரம்பத்தில் பொருள்களின் டாலர் விலையை இந்திய ரூபாய்க்கு மாற்றி மிரட்சி யடைந்துகொண்டிருந்தாலும், சீக்கிரமே அதிலிருந்து மீண்டு, ‘ஆங்.. இங்கே எல்லாமே தரமான பொருள்கள். அதான் அந்த விலை’ என்று மூளையைச் சரிகட்டிவிட்டேன். போதும் போதாததற்கு எப்போதும் SALE பலகைகள் கடைகளில் தொங்கிக்கொண்டே இருக்கும். வீட்டுக்கும் கத்தை கத்தையாக கூப்பன்கள் வரும். அவற்றைவைத்து சகாய விலையில் எதையாவது வாங்கலாம் என்று கையைப் பிடித்து இழுப்பார்கள்.

ஒருநாள் கணவரின் அலுவலக நண்பரான இந்தியர் ஒருவரின் வீட்டுக்கு விருந்துக்காகச் சென்றிருந்தோம். அவர்கள் அமெரிக்கப் பிரஜையாகி பல வருடங்கள் ஆகியிருந்தன. பிரமாண்டமான அந்த வீட்டை , கலைநயத்துடன் அலங்கரித்துவைத்திருந்தார்கள்.

சோபாக்களில் மனிதர்களுக்குக் கொஞ்சமாக இடம்விட்டு, பல வண்ண குஷன்கள் ஒய்யாரமாக இடம்பிடித்திருந்தன. ஒவ்வொரு ஜன்னல்களுக்கும் ஆளுயர பட்டுத் திரைச்சீலைகள் இரு வேறு வண்ணங்களில் தொங்கின. எல்லா சுவர்களும் புகைப்படங்கள், கலைப்பொருள்கள், ஓவியங்கள் என்பதாக நிரம்பியிருந்தன. எங்களை மிகச்சிறப்பாக வரவேற்று, பெருமையாக வீட்டைச் சுற்றிக்காட்டினார்கள். உடனே, நானும் இதேபோல வீட்டை அலங்கரித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டேன்.

எவர்சில்வர் பாத்திரங்களிலிருந்த உணவுகள், பரிமாறுவதற்காக பீங்கான், கண்ணாடிப் பாத்திரங்களுக்கு மாற்றப்பட்டன. அந்த மிகப்பெரிய சமையலறையிலிருந்த பாத்திரங்களைக்கொண்டு நம்மூரில் ஒரு கல்யாணமே செய்துவிடலாம். வந்திருந்த அனைவரும், சாப்பிட்ட பிறகும் பிரமிப்பில் வாயை மூடாமல் வைத்திருந்தோம்.

இந்த விருந்துக்கு கிராமத்திலிருந்து வந்திருந்த தன் அம்மாவையும்  நண்பரொருவர் அழைத்துவந்திருந்தார். அந்த மூதாட்டி, வீட்டைச் சுற்றிப்பார்த்துவிட்டு, `என்ன... வீடே இப்படி அடசலா இருக்கு. கைய கால வீசி நடக்க முடியல. இத்தனையும் தூசி தட்டி வெச்சிட்டிருந்தாலே, பொழுதுபோயிடும் போலயே!' என்று சலித்துக்கொண்டார்.

மினிமலிஸம்
மினிமலிஸம்

அன்று, `பட்டிக்காட்டிலிருந்து வந்து நாகரிகத்தோடு ஒன்றமுடியாமல் புலம்பும் முந்தைய தலைமுறை' என்கிற அளவிலேயே அவரையும் அவர் வார்த்தைகளையும் புறந் தள்ளினேன். வீட்டு அலங்காரப் பொருள்கள் வாங்குவதையோ, ஆடை அணிகலன்கள் வாங்குவதையோ மகிழ்ச்சியின் அடையாளமாக, ஸ்டேடஸ் சிம்பலாக நம்பியிருந்த வயது அது. விருந்தாளிகளே அதிகம் வராத அமெரிக்க வீட்டில், விருந்துக்கான பாத்திரங்களை வாங்கிக் குவித்தேன். திரும்பிய பக்கமெல்லாம் பூ ஜாடிகளும், பிளாஸ்டிக் பூக்களுமாகப் பார்ப்ப தற்கு ஆள்கள் வருவார்களெனக் காத்திருந்தன.

`இந்த பூமியால் எல்லா தேவைகளையும் நிறைவேற்ற முடியும். பேராசைகளை அல்ல!' என்றார் மகாத்மா. எளிமையான உடையும் வாழ்க்கை முறையும் எவ்வகையிலும் அவர் பெருமையை குறைத்துவிடவில்லை.

நான் மட்டுமல்ல... நாங்கள் சென்ற அத்தனை வீடுகளும் பொருள்களால் நிறைந்திருந்தன. வீட்டுக்கென்று ஒரு ஜோடி செருப்பு, வெளியே நடந்து செல்ல வேறு வகை. பேண்ட் அணிந்தால் போடவேண்டிய ஷூ, ஏனைய உடைகளுக்கு வேறு காலணி, பருவநிலை மாற்றத்துக்கேற்ப உடைகள் என்பதாக அனைவருமே பொருள் களுக்குப் போக, மிச்சமிருக்கும் இடத்தில் வாழ கற்றிருந்தோம். 

ஆறு வருட விசா முடிந்து, ஒருவழியாக நாங்கள் இந்தியாவுக்குத் திரும்பி வருகையில், பல பொருள்களை போன விலைக்கு விற்றும், நண்பர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தும் மாளவில்லை. குறைந்த காலகட்டத்தில் சேர்த்த பொருள்களையே கப்பலில் பணம் செலுத்தி கொண்டுவர வேண்டியதானது. அப்படி கொண்டுவந்த பொருள்களில் பலதும் இங்கே தேவைப்படாமல் போனது அடுத்த துயரக்கதை.

அந்தக் கிராமத்து பெண்மணி சொன்னதன் பொருள் இப்போது மெதுமெதுவாக புரிகிறது. ஓரளவுக்கு மேல் பொருள்களை சேர்த்துவிட்டால், அதைப் பராமரிக்கும் பணியாளாக மாறிவிடுகிறோம். சாமான்களைச் சேர்த்துவைத்துவிட்டு, அவற்றைப் பாதுகாப்பதற்காக வெளியூர் பயணத்தையே தவிர்த்துவிடும் மனிதர்களை அறிவேன். இதுவும் அடிமைத்தனம்தான்; பணக்கார அடிமைத்தனம். `நமக்காகத்தான் பொருள்களே அன்றி, பொருள்களுக்காக நாம்' என்று வாழ்வது எத்தனை துரதிர்ஷ்டவசமானது?! 

இன்று எங்கள் சம்பாதியத்தைவிட பல மடங்கு குறைவாக ஈன்ற எங்கள் பெற்றோர் செம்மையாக வாழ்ந்ததெப்படி என்று யோசிக்கிறேன். அன்றைக்குத் தேவைகளே குறைவு என்பது பளிச்சென்று புரிகிறது. தீபாவளிக்கும் பிறந்தநாளுக்கும் மட்டும் புத்தாடை எடுத்ததால், அவற்றை நீண்ட நாள்கள் அணிந்திருந்தோம். ஒரே அலமாரி அடுக்கில்  நானும் எனது தம்பியும் பாதி பாதி பிரித்துக்கொண்டதைப்போல இன்று என் குழந்தைகளால் செய்ய முடியாது.

இந்தியில் ஷாருக் கான், அலியா பட் நடிப்பில் வெளிவந்த வெற்றிப்படமான ‘டியர் ஜிந்தகி’யில் நாயகிக்கு உளவியல் பிரச்னை இருக்கும். உள்ளூர தனிமையும் மனச்சோர்வையும்கொண்ட இளம்பெண் கதாபாத்திரத்தில் அலியா சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார். அவருடைய பிரச்னையின் தீவிரத்தைக் காட்டுவதற்காக, ஆன்லைனில் சதா பொருள்களை வாங்கிக் கொண்டே இருப்பதாக அந்தக் கதாபாத்திரம் காட்சியமைக்கப்பட்டிருக்கும். அவற்றில் பலவற்றை அவர் பேக்கிங்கூட பிரிக்காமல் வைத்திருப்பார். வாங்குவதோடு அவர் ஆர்வம் வடிந்துவிடும். திரைப்படத்தின் முடிவில், அவர் மன அழுத்தத்திலிருந்து வெளியே வந்துவிட்டதாகக் காட்ட, பொருள்கள் வாங்குவதை நிறுத்திவிட்டதாகக் காட்டியிருப்பார் இயக்குநர்.

தேவையில்லாமல் பொருள்களை வாங்கி குவிக்கும் வழக்கம் இருப்பவர்கள், உளவியல் சிக்கலில் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். அதிலிருந்து வெளியே வருவதற்கு முதல்படியாக, அல்லது அத்தகைய சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, கொஞ்சம் முயன்றால் இந்த கம்பல்சரி ஷாப்பிங் (கட்டாய நுகர்வு) மனநிலையிலிருந்து விடுபட்டுவிடலாம்.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் அச்சுறுத்த லாக கான்ஸ்யூமரிஸத்தைப் பார்க்கலாம். நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை விதமான விளம்பரங்கள்... ஒரு விளம்பரத்தைக்கூட பார்க்காமல், நகரத்தில் பத்தடி நடந்துவிட முடியாது. அரைமணி நேரம் எந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் பார்த்துவிட முடியாது. இணையத்தில் நீங்கள் எந்த மாதிரியான நுகர்வோர் என்று தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறீர்கள். அதற்கேற்ப விளம்பரங்கள் அவ்வப்போது பளீரிடுகின்றன.

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளின் பின்னாலும், இயற்கை மீதான சுரண்டல் இருக்கிறது. சர்வ அலட்சியமாக நாம் வாங்கும் ஓரு புடவையைத் தயாரிக்க எத்தனை லிட்டர் தண்ணீரும், எவ்வளவு மின்சாரமும் செலவாகியிருக்கும் தெரியுமா... மேலும், உடைகளுக்கான சாயக்கழிவு, பல உயிர்களின் வாழ்வாதாரமான ஏதோ ஓர் நீர்நிலையை மாசுபடுத்திக்கொண்டிருப்பதை யோசித்திருக்கவும் மாட்டோம்.

மறைநீர் (virtual water) என்று தலைப்பிட்டு இணையத்தில் தேடினால் மலைத்துப் போவீர்கள். ஒரு டி-ஷர்ட் தயாரிக்க, மொத்தமாக 2,700 லிட்டர் தண்ணீர் தேவைப்படுமாம். அதில் எத்தனை எத்தனை உயிரினங்கள் தாகம் தீர்க்கலாம்? ஆறே மாதத்தில் வாங்கிய துணியை தூக்கி எறியும்முன் இதையும் ஒரு முறை யோசிக்கலாம்.

இந்த அளவு சுரண்டல் செய்யும் ஒருவர் நம் வீட்டுக்கு விருந்தாளியாக வந்து, உள்ளவற்றை எல்லாம் அளவுக்கு மீறி அனுபவித்து அழித்தால், ஒரே நாளில் துரத்திவிட்டிருப்போம். இந்த பூமிக்கு விருந்தாளியாகிய நாம், ஒவ்வொரு நாளும் அன்னையின் பொறுமைக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கின்றோம்.

ஒற்றை ஆடை மட்டும் அணிந்தால் போதும் என்று வாழ்ந்துகாட்டிய காந்தி பிறந்தநாளுக்கு, துணிக்கடைகள் தள்ளுபடி அறிவிக்கின்றன. மூன்று வாங்கினால், ஒன்று இலவசம். ஐந்து வாங்கினால் இரண்டு இலவசம். இன்னும் பல விளம்பரங்கள்... `என்ன பொருள் இருந்தால், நீங்க என்னவாக மதிக்கப்படுவீர்கள்' என்று பாடம் எடுக்கின்றன. குறிப்பிட்ட கைக்கடிகாரம் அணிந்தால், கம்பீரம் வரும் என்கிறார் உலக அழகி. `இந்தக் கடையில் புடவை வாங்கினால், என்னைப்போல மிளிரலாம்' என்கிறார், அதிகபட்சம் ஐந்து ஆண்டுக்கால மின்மினி புகழ் கிடைத்த சினிமா நடிகை. `100 நாள் 100 புடவை சேலஞ்ச்' என்கிறார், வலைதள பிரபலம்.

இத்தகைய ராட்சத கரங்களால் வளைக்கப்பட்ட காலகட்டத்திலும், ஓர் உண்மையை யாராலும் மறுக்கவோ, மாற்றவோ முடியாது. அது, தேவையின் அளவைத் தீர்மானிப்பது அவரவர் மனநிலை மட்டுமே என்பதுதான்.

கம்பீரம் என்பது எனது நடத்தையில் இருக்கிறது என்று தெளிவாக இருக்கும் பெண்தான் உலக அழகி. அவருக்கு ஒரு கைக்கடிகாரமே போதும். குறைவான எண்ணிக்கையில் வைத்திருந்தாலும், தூய ஆடைகளே அவர் கம்பீரத்தைக் காட்டும்.

சில பொய்களை உடைத்து, உண்மையைத் தேடினால், நுகர்வு வெறியிலிருந்து மீண்டு விடலாம். நாம் வைத்திருக்கும் பொருள்களால் நம் பிம்பம் கட்டமைக்கப்படுவதாகச் சொல்வது பொய். அவ்வகை பிம்பம் சீக்கிரம் கலைந்துவிடும். சமூகம் ஒருவரை நிரந்தரமாக மதிப்பீடு செய்வது அவர் சொற்களையும் செயல்களையும் வைத்துத்தான். 

மினிமலிஸம்
மினிமலிஸம்

நம் அன்புக்குரியவர்களுக்கு விலைமதிப் பில்லாத நேரத்தைப் பரிசளிப்போம். ‘எந்தையும் தாயும் கூடி குலாவி மகிழ்ந்த’ என்றான் பாரதி.

`என் அன்னைக்கு பிளாட்டினம் பரிசளித்த தந்தை' என்று பாடவில்லை. மகிழ்ச்சிக்கும் உடைமைகளுக்கும் பெரிய சம்பந்தமில்லை. கோடியில் புரளும் ஒருவர், மனநிம்மதிக்காக தினம் மதுவை நாடுவதாக நிறைய  கேள்விப்படுகிறோம். குறைவான வருமானம் கொண்ட ஒருவர் அதே இரவில் குடும்பத்தோடு உணவருந்தி, நிம்மதியாக தூங்கப்போகலாம்.

நிறைய உபகரணங்கள் இருந்தால், நிறைய நேரம் மிச்சப்படுத்தலாம் என்பது உண்மையல்ல. அவற்றைப் பராமரிக்கும் நீண்ட நாள் நோக்கில் யோசித்தால், அவற்றால் நேர விரயமே!

போதாமை எனும் எண்ணம்தான் ஒருவரின் ஏழ்மை. மனநிறைவுதான் இங்கே வளமை. நம்மை நாமே ஏழ்மைக்குள் தள்ள வேண்டுமா என்று சிந்திப்போம்.

இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் சென்றாலும், `ஆசையே துன்பத்துக்குக் காரணம்' என்று புத்தர் சொன்னது செல்லுபடியாகும். `இந்த பூமியால் எல்லா தேவைகளையும் நிறைவேற்ற முடியும். பேராசைகளை அல்ல!' என்றார் மகாத்மா. எளிமையான உடையும் வாழ்க்கை முறையும் எவ்வகையிலும் அவர் பெருமையை குறைத்துவிடவில்லை.

மேற்கத்திய நாடுகளை பார்த்து நாம் நுகர்வு கலாசாரத்தை கற்றுக்கொண்டுவிட்ட நேரத்தில், அவர்கள் கீழைநாட்டு ஜென் வாழ்க்கை முறைக்குத் திரும்பலாம் என்று வருகிறார்கள். தொழில்நுட்பத்தில் 16 அடி பாய்ந்துக்கொண்டிருக்கும் நாளைய தலைமுறைக்கு நம் வாழ்வியலைத் தவிர, வேறு என்ன கற்றுத்தந்துவிட முடியும்? வாழ்வியல் என்பது பார்த்து, உணர்ந்து, அனுபவித்துக் கற்பது. நம்மிடமிருந்து எளிய வாழ்க்கை முறைக்குப் பழகிய இளம் தலைமுறையினரால், எந்த ஊரிலும், எந்த நாட்டிலும் தம்மைப் பொருத்திக்கொண்டுவிட முடியும்.

வேண்டும் என்பது ஒரு போதை. அதன் பிடியில் இருக்கும்வரை மகிழ்ச்சியாக இருப்பது போல `தோற்ற மயக்கம்' காட்டிக்கொண்டே மன அழுத்தத்தில் தள்ளிவிட்டுவிடும். ‘போதும்’ என்பதே இனி நாம் அடிக்கடி உச்சரிக்க வேண்டிய வார்த்தை. இருப்பது போதும் என்ற மனநிலைக்கு வந்தபின் பொருளீட்ட 

அதிகபடியாக ஓட வேண்டியதில்லை. பொருள் களின் மீதான மோகம் குறையக் குறைய நேரம் நம் வசப்படுவதை அதிசயத்தோடு பார்ப்போம்.

இன்று கன்ஸ்யூமரிஸத்துக்கு மாற்றாக ‘மினிமலிஸம்’ முன்வைக்கப்படுகிறது. குறைவான பொருள்கள், நிறைவான வாழ்க்கை என்பதே இதன் அடிப்படை. இவையெல்லாம் இன்றும் பழங்குடியினரிடம் பார்க்கலாம். எங்கு சுற்றினாலும், தொடங்கிய இடத்துக்கு வந்து சேர்வதே சிறந்த பயணம். எளிமையான பழங்குடி வாழ்க்கை முறையை நோக்கி நகரத்தொடங்குவதே கடைசியாக நம்மை காப்பாற்றும் தாய்மடியாக இருக்க போகிறது!