ஸ்டெர்லைட் பிரச்னை, ஹைட்ரோகார்பன் திட்டம், கூடங்குளம் அணுக்கழிவு மையம், நியூட்ரினோ ஆய்வு மையம் மற்றும் கொங்கு மண்டலத்தில் சாயக் கழிவு பிரச்னைகள் எனத் தமிழகத்தில் திரும்பும் திசையெங்கும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் தான். இந்தப் பிரச்னைகளால் தமிழகமே தனலாய்க் கொதிக்க, தமிழக சுற்றுச்சூழல் துறையின் அமைச்சர் கே.சி.கருப்பணனோ எதையும் அலட்டிக்கொள்ளாமல் மிஸ்டர் கூலாக வலம் வருகிறார். எந்தப் பிரச்னைக்கும் லேசில் வாயைத் திறக்காதவர், ஏதாவது பேசினால் அது வைரல் ஹிட்தான். நொய்யலாற்றில் மிதந்து வந்த சோப்பு நுரையே அதற்குச் சாட்சி. சமீபத்தில் இவரது பேச்சு, ஆளுநரிடம் சென்று புகார் கொடுக்கும் அளவுக்கு பரபரப்பாகியிருக்கிறது. அமைச்சரின் கடந்த கால மாஸ் சம்பவங்களைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தோம்.

`வைகை அணையைத் தெர்மாகோல் போட்டு மூடிய விஞ்ஞானி’ என செல்லூராரை தமிழகமே ஒருபுறம் வகையாக வைத்து செய்துகொண்டிக்க, சத்தமில்லாமல் அந்த புதிய விஞ்ஞானி உருவானார். `நொய்யலாறு சாயக் கழிவுகளால் நுரைத்துப் பொங்குகிறது!’ எனப் பத்திரிகையாளர்கள் பக்கம் பக்கமாக செய்திகளை எழுதினர். உடனே பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த அமைச்சர் கருப்பணன், `மக்கள் சோப்பு போட்டு குளித்த தண்ணீர், நொய்யலாற்றில் கலந்ததால்தான் நுரை வந்திருக்கிறது. மற்றபடி வேறெந்த குறையும் இல்லை’ என பேட்டியளித்து செல்லூராருக்கு அடுத்த விஞ்ஞானி நான்தான் என அழுத்தமாக முத்திரை பதித்தார். அந்த மாஸ் பேட்டிக்குப் பிறகு, `சோப்பு நுரை அமைச்சர்’ என்ற பட்டம் அவரைத் தேடி வந்தது தனிக்கதை.
இதேபோல ஈரோடு கவுந்தப்பாடியில் சமீபத்தில் `மழைக்காலங்களில் வாய்க்கால்களில் சாயக் கழிவுகள் திறந்து விடப்படுகின்றன!’ என அமைச்சர் கருப்பணனிடம் பத்திரிகையாளர்கள் குற்றச்சாட்டை வைக்க, `எந்த இடத்துல சாயக்கழிவு கலக்குதுன்னு சொன்னா சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவங்களை புடிச்சி `மிசா’வுல உள்ளே போடக்கூட நாங்க ரெடியா இருக்கோம்’ என அதிரவைத்தார். 1977-ல் நீக்கப்பட்ட மிசா சட்டத்தில் கைது செய்வோம் என அமைச்சர் பேசியதெல்லாம் அதிசயம்... அற்புதம்... யாரும் எதிர்பாராதவகையில் இப்படிக் கருத்தாய்ப் பேசுவதால் அவருடைய அன்புத் தம்பிகள், அவரை கருத்தண்ணன் என்றும் அழைக்க ஆரம்பித்திருப்பது யாருமறியா ரகசியம்.

`ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்தா போதும். அடுத்த ரெண்டே நிமிஷத்துல நம்ம முதலமைச்சரை சந்திச்சுப் பேசலாம். இந்தியாவிலேயே அண்ணன் எடப்பாடி பழனிசாமியைத் தவிர எந்த ஒரு முதலமைச்சரையும் இரண்டே நிமிஷத்துல சந்திக்க முடியாது. சந்தேகம் இருந்தா நீங்க ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்துப் பாருங்க. இதுவரைக்கும் ஒருகோடி பேர் அண்ணனை அப்படி சந்திச்சிருக்காங்க’ என்பதில் தொடங்கி, ‘எடப்பாடியாரின் ராசியால்தான் எல்லா அணைகளும், ஏரி குளங்களும் நிரம்பி வழிகின்றன’ என இயற்கை அன்னைக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதெல்லாம் நம்ம அமைச்சரைத் தவிர, வேறு யாரால் முடியும்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு சத்தியமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், `தி.மு.க வெற்றி பெற்ற ஒன்றியங்களுக்கு குறைந்த நிதியே ஒதுக்குவோம். அவங்க ஜெயிச்சா என்ன, நாங்கதானே ஆளும்கட்சி. நாங்க பணம் கொடுத்தாத்தானே!’ எனக் கட்சியினரை உற்சாகப்படுத்தி பேசப் போக, `அமைச்சரை பதவி நீக்கம் செய்யுங்கள்’ என ஆளுநர் வரை புகார் சென்றது. இப்படி அமைச்சர்கள் கருப்பணன் எது பேசினாலும் வைரல்தான்.
தேர்தல் பிரசாரத்தின்போது மக்களிடம் ஓட்டு கேட்கப் போனால், இலவச இணைப்பாக ஒரு குத்தாட்டத்தைப் போட்டு வருவதாகட்டும், சத்தியமங்கலம் சாலையில் இறங்கி போக்குவரத்தை சரி செய்ததாகட்டும், `சுற்றுச் சூழலை பாதுகாக்க நாங்க எவ்வளவோ நடவடிக்கை எடுத்துக்கிட்டு வர்றோம். நீங்க என்னடான்னா, என்னை வரவேற்க இவ்வளவு பட்டாஸை வெடிச்சு சுற்றுச்சூழலை மாசுபடுத்துறீங்க’ என சொந்தக் கட்சிக்காரர்களிடம் செல்லமாகக் கோபித்துக் கொள்வது எனச் சமயங்களில் அமைச்சர் கருப்பணன் அப்ளாஸ் வாங்கவும் தவறுவதில்லை. `நான் சீரியஸான அரசியல்வாதி இல்லை, என் கருத்துகளை சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள்’ என்பது அமைச்சர் கருப்பணனின் கடந்தகால நவசரப் பேச்சுகளில் தெளிவாகத் தெரிகிறது. நாம் அவரை ரொம்ப சீரியஸாக நினைக்கிறோமோ..!

சார் சீரியஸாகக் கேட்கிறோம் சீரியஸாகவே பதில் சொல்லுங்கள், `உண்மையிலேயே சோப்பு போட்டுக் குளித்த தண்ணீரால்தான் நொய்யலாற்றில் நுரை வந்ததா..?’