அமைச்சர் அன்பழகனுக்குக் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் அனைவருமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். அமைச்சர்களின் வீடுகளில் கொரோனா பரிசோதனையை வேகப்படுத்த உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்குக் கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. அவர் தற்போது சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்குக் கடந்த மூன்றுநாள்களாகவே சளிதொந்தரவு இருந்துள்ளது. அதைத் தொடர்ந்தே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
கடந்த நான்கு நாள்களுக்கு முன்பாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் சக அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் அன்பழகனும் பங்கேற்றிருந்தார். இப்போது அன்பழகனுக்குக் கொரோனா தொற்று உறுதியானதால் சக அமைச்சர்களும் கலகத்தில் இருக்கிறார்கள். ஏற்கெனவே முதல்வரின் தனிச்செயலாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த சம்பவம் முதல்வர் அலுவலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முதல்வர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளைக் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளச் சொல்லி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல்வர் தலைமையில் சென்னை மாநகராட்சிக் கட்டடத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் அன்பழகன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அன்பழகனுக்குத் தொற்று ஏற்பட்டதும் அவருடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள் சத்தமில்லாமல் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். ஏற்கெனவே சுகாதாரத்துறை அமைச்சரின் வீட்டில் பணிபுரியும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுவிட்டது. அதேபோல் பல அமைச்சர்களும் தங்களிடம் பணிபுரியும் நபர்களையும் சோதனை செய்யச் சொல்லியுள்ளார்கள். மற்றொரு தரப்பில் வரும் தகவல்கள் வேதனை அளிப்பதாகவும் இருக்கிறது. தமிழக அமைச்சர்களில் ஐந்து அமைச்சர்களின் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமின், ராஜேந்திர பாலாஜி, ஆர்.காமராஜ் உள்ளிட்ட ஐந்து அமைச்சர்களின் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்குக் கொரோனா தொற்று இருக்கிறது என்கிற தகவல் இப்போது கசிய ஆரம்பித்துள்ளது. மேலும் கிரின்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர்களின் பங்களாக்களுக்கு வெளிநபர்கள் வருவதை முற்றிலும் தடைசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அன்பழகன் உள்ளிட்ட ஆறு அமைச்சர்கள்தான் சென்னை கொரோனா தடுப்புப் பணிக்கான குழுவில் இடம்பெற்றிருந்தனர். இதனால் அவர்களும் பெரும் கலக்கத்தில் இருக்கிறார்கள். இதனால் அமைச்சர்கள் அனைவரும் கொரோனா சோதனைக்காக தனியார் மருத்துவமனைகளை நாடிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

தலைமைச்செயலகத்தில் அமைச்சர்களின் அறைக்குக் கிருமிநாசினி அடிக்கும் பணியும் நடந்துவருகிறது. சில அமைச்சர்கள் தலைமைச்செயலகம் வருவதைத் தவிர்த்துவிட்டார்கள். முதல்வரின் வீட்டில் முழுநேரமும் மருத்துவக்குழு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பலருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற சிக்கல்களும் இருப்பதால் கொரோனா தாக்கம் ஏற்பட்டால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்கிற அச்சமும் அவர்களிடம் எழுந்துள்ளது. போதிய பாதுகாப்புடன் அமைச்சர்கள் சென்றாலும், அவர்களுடன் பயணிக்கும் நபர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டால் அது அமைச்சர்களையும் பாதிக்கும் என்று மருத்துவர்கள் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அன்பழகனின் வாகன ஓட்டுநர் ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு, அதன் மூலமே அன்பழகனுக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள் அன்பழகன் தரப்பினர்.
தலைமைச் செயலகத்தில் பல துறைகளிலும் பணியாற்றும் நபர்களுக்குக் கொரோனா தொற்று உறுதியானாலும், 33 சதவிகித ஊழியர்கள் பணிக்கு வரவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினி தினமும் தெளித்தாலும் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாத நிலை இருக்கிறது. மேலும் ஊழியர்களின் குடும்பத்தினரோ, அவர்களது குடியிருப்புகளிலோ கொரோனா தொற்று ஏற்பட்டால் ஊழியர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. ஆனால், அதற்கான விடுமுறையை ஊழியர்களின் கணக்கிலேயே பிடித்தம் செய்யப்படுகிறது என்று வேதனை தெரிவிக்கிறார்கள்.

உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்தாலும் அது அவர்களது ஆண்டு விடுமுறைக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தலைமைச் செயலக ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனால், பலரும் நோயின் பீதியைத் தாண்டி ஒரு நாள் விட்டு ஒருநாள் அலுவலகம் வரவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். தலைமைச் செயலகத்தில் போதிய முன்னேற்பாடுகளும், பாதுகாப்பு வசதிகளும் குறைவாக இருந்ததே அங்கு பல ஊழியர்கள் கொரோனா தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பதற்கான காரணம். அந்தத் தாக்கம் இப்போது அமைச்சர் வரை வந்துவிட்டதாகவும், இனியாவது அரசு உஷாராக இருக்கவேண்டும் என்கிறார்கள் தலைமைச் செயலக ஊழியர்கள்.