இன்று தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புதிதாக `நலம் 365' என்ற யூடியூப் சேனலை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கிவைத்தார். இந்த யூடியூப் சேனலில் அரசு மருத்துவமனைகளிலுள்ள வசதிகள் என்ன என்பது குறித்தும், எந்த மருத்துவமனையில், எந்தெந்த சிறப்பு மருத்துவர்கள் இருக்கின்றனர் என்ற விவரங்கள் குறித்தும் தகவல்கள் வெளியிடப்படும். மேலும், 24 மணி நேரமும் தொடர்ந்து இந்த சேனல் செயல்பட்டுக்கொண்டிருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "ஒப்பந்த செவிலியர்களுக்குப் பணி நீட்டிப்பு செய்யவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறியதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும். தவற்றுக்கு முழுக் காரணமானவரே முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோலப் பேசியிருக்கிறார். தெரிந்தோ, தெரியாமலோ கடந்த அ.தி.மு.க ஆட்சியில் செய்த தவற்றுக்குப் பரிகாரம் தேடிக்கொள்ளவேண்டியவர் அறிக்கை வெளியிட்டிருப்பது அதிசயமான ஒன்றாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் நடந்த அனைத்தையும் சொன்னால்தான் தமிழக மக்களுக்குப் புரியும்.
கடந்த 2019-ம் ஆண்டு 2,345 செவிலியர்கள் பணியில் சேர எம்.ஆர்.பி மூலம் விண்ணப்பித்திருந்தார்கள். அவர்களைப் பணியில் தேர்வுசெய்ய முயன்றபோது, உடனடியாக 2,323 பேர் பணியில் சேர்ந்தார்கள். மேலும், 2020-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் விண்ணப்பித்திருந்த 5,736 பேரை பணியில் சேர அழைத்தபோது, 2,366 பேர் பணியில் சேர்ந்திருந்தார்கள். இவர்களைப் பணியில் சேர்க்கும்போது சான்றிதழ் சரிபார்ப்பது போன்ற ஒரு சாதாரண நிர்வாகரீதியான எந்தச் செயல்பாடும், செய்யப்படாமல் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

விதிமுறைகள் எதையுமே பின்பற்றாமல், அவர்களுக்கு வேண்டியவர்கள், மனு கொடுத்தவர்கள், சிபாரிசுக் கடிதங்கள் கொடுத்தவர்களுக்கு அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பணி வழங்கப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் விதிமுறைகளை மீறிப் பணியிலுள்ள செவிலியர்களைப் பணியில் நீடிக்கவைக்கக் கூடாது என்று கூறியிருக்கின்றன. இருந்தபோதிலும், தமிழக முதல்வர் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தாலும் அவர்கள் அனைவருமே கொரோனா காலகட்டத்தில் சேவையாற்றியவர்கள்.
அவர்களைப் பணிநீக்கம் செய்துவிடக் கூடாது என்று கூறியிருந்தார். இவர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல. நீதிமன்றங்களின் உத்தரவால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த நான்கு மாதங்களாக அவர்களுக்குச் சம்பளம் வழங்குவதில்கூட சிக்கல் நீடித்தது. கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நன்மை செய்துவிட வேண்டும் என்று முதல்வர் கூறியிருந்தார்.

பொதுச் சுகாதாரத்துறையில் 2,200 காலி பணியிடங்கள் உள்ளன. மக்களைத் தேடி மருத்துவத்தில் இடைநிலை சுகாதார சேவைக்காக 270 பேர் தேவை. இது போன்று சுகாதாரத்துறையில் உள்ள காலி பணியிடங்களில் இந்தச் செவிலியர்கள் நிரப்பப்படுவார்கள். பணி நீட்டிப்பு வழங்கப்படாதவர்களுக்குக் காலிப்பணியிடங்கள் உள்ள இடத்தில் மாற்றுப்பணி வழங்கப்படும். கொரோனா காலத்தில் பணியாற்றியதால் மாற்றுப்பணி வழங்கப்படவிருக்கிறது. மேலும், ரூ.14,000 ஊதியம் வாங்கிய நிலையில், இது ரூ.18,000-ஆக உயரவிருக்கிறது. பணி நிரந்தரம் என்பது சாத்தியமில்லை. இதைச் செவிலியர்கள் உணர வேண்டும்'' என்றார்.
தொடர்ந்து பேசியவர், ``2,366 பேரில் தற்போது 2,301 பேர் பணியில் இருக்கிறார்கள். மாவட்டவாரியாக பட்டியல் தயார்செய்யப்பட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இப்படித் துறையில் என்ன நடக்கிறது என்று எதுவுமே தெரியாமல் எடப்பாடி அறிக்கைவிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் மருத்துவத்துறையில் அவர்கள் செய்த விதிமீறல்கள் குறித்து பதில் சொன்னால் நன்றாக இருக்கும். ஒரு சில மருத்துவ சங்கங்கள் தங்களுக்கு ஆட்களைச் சேர்க்க வேண்டும் என்று செவிலியர்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருப்பது நன்றாக இல்லை. கொரோனா காலத்தில் செவிலியர்கள் சென்னை போன்ற முக்கிய இடங்களுக்கு பணிக்காக வந்தனர். தற்போதைய நிலையில், அவர்களுக்கு அவர்கள் பகுதியிலேயே பணி வழங்க வாய்ப்பிருக்கிறது. சம்பள உயர்வுடன் சொந்தப் பகுதியில் வேலை என்பது, அவர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம்தான்" என்று தெரிவித்தார்.