அரசியல்
அலசல்
Published:Updated:

“கனிம வள கடத்தலை மத்திய அரசுதான் தடுக்க வேண்டும்!” - சொல்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்

மனோ தங்கராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
மனோ தங்கராஜ்

ஒரு மாநிலத்துக்கும் மற்றொரு மாநிலத்துக்கும் இடையிலான போக்குவரத்து என்பது மத்திய அரசின் கைகளில்தான் இருக்கிறது.

தி.மு.க உட்கட்சித் தேர்தல் பொறுப்புகள் குறித்த ஆதங்கங்கள் அதகளமாகிவரும் சூழலில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்துறை அமைச்சர் மனோ தங்கராஜிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்...

‘‘குமரி மேற்கு மாவட்ட தி.மு.க-வில், பழைய நிர்வாகிகளை ஓரங்கட்டிவிட்டு, புதிதாகக் கட்சிக்கு வந்தவர்களுக்குப் பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறதே?’’

‘‘சரியாகச் செயல்படாதவர்களை நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகள் போடப்பட்டுள்ளனர். பொறுப்பு கிடைக்கவில்லை எனப் புகார் சொல்பவர்களுக்கு வலுவான இயக்கத்தை நடத்தும் எந்தத் தகுதியும் இல்லை. மற்ற கட்சிகளிலிருந்து வந்து சேர்ந்தவர்களில் திறமையான ஆட்களுக்குச் சில விலக்குகள் அளிக்கும் பழக்கம் தி.மு.க-வில் இருக்கிறது. அந்த வகையில், சில தளர்வுகள் வழங்கித்தான் பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.’’

“கனிம வள கடத்தலை மத்திய அரசுதான் தடுக்க வேண்டும்!” - சொல்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்

‘‘ஆனால், உங்கள் மகன் ரிமோனுக்கும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப் பட்டிருக்கிறதே?’’

‘‘தேர்தலின்போது என்னுடைய வெற்றிக்காக வேலை செய்தவன் அவன். கடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் மிகக் கடுமையாக வேலை செய்தான். இப்போதும் எனது வேலைப்பளுவைக் குறைக்கும்விதமாக அவன் கட்சிப் பணி செய்துகொண்டிருக்கிறான். சாஃப்ட்வேர் இன்ஜினீயரான என் மகன், ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பள வேலையை விட்டுவிட்டு வந்து கட்சி வேலை செய்கிறான். அதற்காக ஒரு சின்னப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது... அவ்வளவுதான்.’’

‘‘ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்குத் தமிழக அரசு தடை விதித்திருக்கிறதே?”

‘‘ஆர்.எஸ்.எஸ் இயக்கமும், அதைச் சார்ந்த அமைப்புகளும் பகிரங்கமாக வெறுப்பு பிரசாரங்களில் ஈடுபட்டுவருவது உலகத்துக்கே தெரியும். தமிழகத்தில், கம்பையும் கத்தியையும் சுழற்றிக்கொண்டு அவர்கள் பேரணி நடத்துவதற்கு இங்கு என்ன அவசியம் இருக்கிறது... வடமாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் எல்லா இடங்களிலும் ஊர்வலம், பிரசாரம் நடத்தி அமைதியைச் சீர்குலைத்துவிட்டது. தமிழ்நாட்டிலும் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறது. வடமாநிலச் சூழ்நிலை இங்கு வரக் கூடாது என்பதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.’’

‘‘தி.மு.க ஆட்சியிலும் கேரளாவுக்குக் கனிம வளம் கடத்தப்படுவது நடந்துகொண்டுதானே இருக்கிறது?’’

‘‘ஒரு மாநிலத்துக்கும் மற்றொரு மாநிலத்துக்கும் இடையிலான போக்குவரத்து என்பது மத்திய அரசின் கைகளில்தான் இருக்கிறது. இந்த நிலையில், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குக் கனிம வளங்களைக் கொண்டுபோவதை மத்திய அரசு அனுமதிக்கிறது. தமிழக அரசிடம் ‘கேரளாவுக்குக் கனிம வளங்களைக் கொண்டுபோக பாஸ் வேண்டும்’ என யாராவது கேட்டால், நாங்கள் பாஸ் கொடுத்துத்தான் ஆக வேண்டும். ஆனாலும்கூட நாம் கேரளாவுக்குக் கனிம வளங்களைக் கொண்டு செல்ல இதுவரை அனுமதி கொடுக்காமல் மறுத்துவருகிறோம். மற்றபடி கேரளாவுக்குக் கனிம வளம் கடத்திச் செல்லப்படுகிறதென்றால், அதை மத்திய அரசுதான் தடுக்க வேண்டும்!’’