
விருந்து ஏற்பாடுகளும் பிரமாண்டம். சைவ சமையலுக்குத் திருப்பூரிலிருந்தும், அசைவ விருந்துக்கு திருச்சி மணப்பட்டியிலிருந்தும் ஆட்கள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள்.
“அம்பது கோடி... அறுபது கோடி... இல்ல, நூறு கோடீப்பு..!” என்று மதுரை முழுவதும் அமைச்சர் பி.மூர்த்தி யின் மூத்த மகன் கல்யாணச் செலவுக் கணக்கு குறித்துத்தான் பேச்சாக இருக்கிறது.
2021 சட்டமன்றத் தேர்தலில் மூர்த்தி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தன்னுடைய பெயரிலும், தன் குடும்பத்தினரின் பெயரிலும் அசையும் சொத்துகளாக சுமார் 4.66 கோடி ரூபாயும், அசையாச் சொத்துகளாக 6.4 கோடி ரூபாயும், கடனாக 1.96 கோடியும் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அமைச்சரான பதினைந்து மாதங்களிலேயே, மு.க.அழகிரி மகன் திருமணத்தை மிஞ்சி, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனின் திருமணத்தோடு ஒப்பிடும் அளவுக்கு பிரமாண்டமாகத் திருமணம் நடத்தியிருக்கிறார் அமைச்சர். “இவ்வளவு குறுகிய காலத்தில், இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?” என்ற கேள்வி மதுரையைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.
4,500 ஆடுகள், 24,000 கோழிகள்!
அமைச்சர் மூர்த்தியின் மூத்த மகன் தியானேஷ், திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் ஸ்மிர்தவர்ஷினி திருமணத்துக்காக, மதுரை பாண்டிகோவில் ஏரியாவில் சுமார் 30 ஏக்கர் நிலத்தைத் தேர்வுசெய்த அமைச்சர், அங்கே பந்தலிடும் பணியை மூன்று மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டார். தி.மு.க மாநாடுகளுக்கு மேடை அமைக்கும் பந்தல் சிவாவிடம்தான் அந்தப் பணிகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அந்த இடம் பள்ளமான பகுதி என்பதுடன், மழைநீர் புகும் அபாயமும் இருந்ததால், ஆயிரக்கணக்கான லோடு கிராவல் மண் அங்கே போடப்பட்டது. அதன் மதிப்பே ஒரு கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறார்கள். நுழைவு வாயிலை அழகுபடுத்த பல ஏக்கர் அளவிலான கரும்பும், வாழையும், பல டன் பூக்களும் பயன்படுத்தப்பட்டன.
விருந்து ஏற்பாடுகளும் பிரமாண்டம். சைவ சமையலுக்குத் திருப்பூரிலிருந்தும், அசைவ விருந்துக்கு திருச்சி மணப்பட்டியிலிருந்தும் ஆட்கள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். முதலில் 3,000 ஆடுகளும், 24,000 கோழிகளும் அறுக்கப்பட்டன. பிறகு மேலும் 1,500 ஆடுகள் வாங்கப்பட்டன. இதுதவிர, 14 டன் எடையிலான கடல் உணவுகள் சமைக்கப்பட்டுள்ளன. விருந்து சமைக்க மட்டும் 8,000-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டனர். ஒரே நேரத்தில் 15,000 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட பந்தலில், இரண்டு மூன்று பந்திகளைத் தவிரப் பிற நேரங்களில் பெரும்பகுதி காலியாகவே இருந்தது. இந்த மூன்று நாள்களில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் இறைச்சி கிடைக்கவில்லை. மேலும், விழாவுக்கான மேளதாள வாத்தியக் கலைஞர்களும் கிடைக்கவில்லை.
தகுதி அடிப்படையில் மொய் நிர்ணயம்!
இவ்வளவு செலவுக்கும் பணம் எப்படித் திரட்டப்பட்டது என்று விசாரித்தோம். “பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறையின் மாவட்ட, மண்டல அளவிலான உயரதிகாரிகள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் சிலரின் பங்களிப்புடனேயே இவ்வளவு பெரிய ஏற்பாட்டைச் செய்தார் அமைச்சர். பதிவுத்துறையில் டெபுடேஷனில் இருக்கும் அதிகாரிகளிடம் பெரிய தொகையை மொய்யாக நிர்ணயித்து வசூல் செய்திருக்கிறார்கள்” என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
மொய் வசூலிக்க, தனியார் நிறுவனத்தின் மூலம் 50 ஹைடெக் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், மொய் கவுன்ட்டர்களில் கூட்டம் இருந்ததே தவிர பெரிய அளவில் வசூலாகவில்லை என்கிறார்கள். விசாரித்தால், “இந்த மொய் கவுன்ட்டர்களே கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்காகத் தான்” என்று கண்ணடித்தனர் கட்சிக்காரர்கள்.
“பந்தல் மற்றும் மேடை அலங்காரம், விருந்துச் செலவு, பத்திரிகை விளம்பரம், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்குப் பரிசுப்பொருள்கள்; உறவினர்களுக்கு பட்டு வேட்டி, சட்டை, பட்டுச்சேலை; சொந்த பந்தங்கள், நெருங்கிய உறவுகளுக்கு நகை, பணம்; கிராமங்களிலிருந்து நிகழ்ச்சிக்கு அழைத்துவர வாகன வசதி எனக் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட பணம் எனக் கணக்கிட்டால் செலவு மட்டுமே சுமார் 100 கோடியை நெருங்கும்” என்கிறார்கள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள்.
அமைச்சரின் திட்டம்!
“கொங்கு மண்டலத்துக்கு செந்தில் பாலாஜியைப்போல, தென் மண்டலம் என்றால் பி.மூர்த்திதான் என்று தலைமையைச் சொல்லவைப்பதுதான் மூர்த்தியின் திட்டம். அதற்காகத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும்” என்கிறார்கள் உள்ளூர் தி.மு.க-வினர்.
திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்திவைத்ததோடு, “அமைச்சர் மூர்த்தி எதைச் செய்தாலும் பிரமாண்டமாகத்தான் செய்வார். இதை மணவிழா என்று சொல்வதைவிட மாநாடு சென்று சொல்வதுதான் சரியாக இருக்கும்” எனப் புகழ்ந்து தள்ளிவிட்டார். பதிலுக்கு, “தி.மு.க-வில் பணியாற்றியதற்கு அனைத்துப் பதவிகளையும் பெற்று மனநிறைவோடு இருக்கிறேன். என் மகன் திருமணத்தை நீங்கள் நடத்திவைத்து, இனிமேல் பெறுவதற்கு ஒன்றுமில்லை என்ற அளவுக்கு என்னைக் கொண்டு சென்றுவிட்டீர்கள்” என உருகிவிட்டார் அமைச்சர் மூர்த்தி.
`இந்த பிரமாண்டத்துக்கான வருமானம் எங்கிருந்து வந்தது?’ என்ற கேள்வி எழும் என்பது தெரிந்தும், பந்தா காட்டியிருக்கிறார் அமைச்சர். அதிகாரத்தில் இருக்கிறோம், நம்மை யார் கேட்பார்கள் என்ற அலட்சியமா அல்லது அதிகாரம் கண்ணை மறைக்கிறதா?