அரசியல்
அலசல்
Published:Updated:

ஜோக்கரா... வில்லனா? - அமைச்சர் நாசரின் அக்கப்போர்கள்!

ஜோக்கரா... வில்லனா? - அமைச்சர் நாசரின் அக்கப்போர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்கரா... வில்லனா? - அமைச்சர் நாசரின் அக்கப்போர்கள்!

ஓவியம்: சுதிர்

ஒரே வீடியோவில் உலக ஃபேமஸ் ஆகிவிட்டார் அமைச்சர் ஆவடி நாசர்! ஒரு சேர் எடுத்துவர தாமதப்படுத்தியதால், கட்சிக்காரரையே அவர் கல்லால் அடித்த அந்த வீடியோ, பேன் இந்தியா ஹிட்!

“இதென்ன பிரமாதம்... இன்னும் நிறைய ஸ்பெஷல் ஐட்டங்களையெல்லாம் தன்னோட அமைச்சர் வாழ்க்கையில செஞ்சு அமர்க்களப்படுத்தியிருக்காரு...” என்று நாசரின் வீர பிரதாபங்களைப் பட்டியலிடுகிறார்கள் தொகுதிக்காரர்கள். சாம்பிளாகச் சிலவற்றைப் பார்க்கலாம்... 18 வயசுக்கு கீழ உள்ளவங்க, இதயம் பலவீனமானவங்க, பிரக்னன்ட் லேடீஸ் இதுக்கு மேல படிக்காதீங்க...

ஜோக்கரா... வில்லனா? - அமைச்சர் நாசரின் அக்கப்போர்கள்!
ஜோக்கரா... வில்லனா? - அமைச்சர் நாசரின் அக்கப்போர்கள்!

* ``திருத்தணி பொதுக்கூட்டத்துல இப்படித்தான்... அமைச்சர் நாசர் பேசிக்கிட்டிருந்தப்ப திருத்தணி எம்.எல்.ஏ-வோட பி.ஏ தெரியாம மைக்கைத் தட்டிவிட்டுட்டாரு... அமைச்சருக்கு வந்துச்சே கோபம், முழங்கையால ஓங்கி முதுகுலயே ஒரு குத்து. வலியில அந்த மனுஷன் மேடையைவிட்டே போயிட்டாரு” என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

* ``நவரச மன்னன் நாசரோட இன்னொரு முகம், ரொம்பவே சிறுபிள்ளைத் தனமானது. அதுவும் குழந்தைகளைப் பார்த்துவிட்டால், தலைகால் புரியாது. “குழந்தைக்கு வேடிக்கை காட்டுறேன்ங்கிற பேர்ல, பார்க்குல சறுக்குமரம் ஏறுவது, சிவனேன்னு ஊஞ்சலாடிக்கிட்டு இருக்கிற குழந்தைய இறக்கிவிட்டுட்டு, அதுல தான் ஆடி வெறுப்பேத்துறதுன்னு அவர் பண்ற எலிமென்ட்ரி ஸ்கூல் சேட்டை இருக்கே...” என்றும் சிரிக்கிறார்கள்.

ஜோக்கரா... வில்லனா? - அமைச்சர் நாசரின் அக்கப்போர்கள்!

* திடீரென குழந்தை மோடிலிருந்து, கிராண்ட் ஃபாதர் மோடுக்கும் போய், பிஞ்சுக் குழந்தைகளை கொஞ்சியே புரையேற வைத்துவிடுகிறார் அமைச்சர். சிறு பிள்ளைகளை ஒற்றைக்கையால் அலேக்காகத் தலைக்கு மேல் தூக்கி வேடிக்கை காட்டுவதை ஒரு மேனரிஸமாகவே தொடர்கிறார் நாசர். வீடு, கட்சி மேடைகளில் தூக்குவதைக்கூட விட்டுவிடலாம். திருவேற்காட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடச் சென்ற இடத்தில், முழங்கால் அளவு தண்ணீருக்குள் நின்றபடி அவர் இதே வித்தையைக் காட்ட, குழந்தையைப் பெற்றவர்கள் கதிகலங்கிவிட்டார்கள். “பெரிய `பாகுபலி’ ரம்யா கிருஷ்ணன்னு நினைப்பு. குழந்தை தவறி விழுந்தா என்னாகியிருக்கும்?” என்று மிரட்சியாகச் சொல்பவர்கள், இப்போதெல்லாம் திருவள்ளூர் மாவட்டத்தில் சாப்பிட மறுத்து அடம் பிடிக்கும் குழந்தைகளை, ‘`நாசர் மாமாகிட்ட பிடிச்சுக் கொடுத்துடுவேன்’’ என்று மிரட்டியே சாப்பிடவைப்பதாகச் சொல்லிச் சிரிக்கிறார்கள்.

* நாசர் வேறு என்னவெல்லாம் அட்ராசிட்டி செய்திருக்கிறார் என்று தொகுதிப் பக்கம் விசாரித்தோம். “அச்சச்சோ அவரா... பயங்கரமான ஆளாச்சே...” என்று ஆரம்பித்தவர்கள், “சமீபத்துல திருநின்றவூர் நகராட்சிக்கு, பேரிடர் மேலாண்மைக்காக வாங்குன பொக்லைன் இயந்திரத்தைக் கொடியசைச்சு தொடங்கிவைக்க வந்தவரு, திடீர்னு அதுல ஏறி ஓட்ட ஆரம்பிச்சுட்டாரு. அவர் இறங்குற வரைக்கும் மொத்தக் கூட்டமும் கதிகலங்கிப்போய்தான் நின்னுது. பப்ளிசிட்டிக்காக எந்த எல்லைக்கும் போவாருங்க அவரு” என்றார்கள்.

ஜோக்கரா... வில்லனா? - அமைச்சர் நாசரின் அக்கப்போர்கள்!
ஜோக்கரா... வில்லனா? - அமைச்சர் நாசரின் அக்கப்போர்கள்!

* இன்னோர் உதாரணத்தையும் சொல்கிறார்கள். “திருமுல்லைவாயல், நாகம்மை நகரில் குடிநீர்க் குழாயில் அடைப்பைச் சரிசெய்யும் பணி நடந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த நாசர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, படாரென ரோட்டில் படுத்தேவிட்டார். தலையை குழாய்க்குள்ளேயேவிட்டு அங்கேயும் இங்கேயும் பார்த்தவர், எதையோ கண்டுபிடித்தவர்போல, ‘பணியைச் சீக்கிரம் முடியுங்கள்’ என அதிகாரிகளுக்கு சீரியஸாக உத்தரவிட்டுவிட்டு காரில் பறந்துவிட்டார். ‘ஆமா... இப்ப என்ன நடந்துச்சு?!’ என்று அதிகாரிகள் குழப்பத்திலிருந்து மீளவே மணிக்கணக்காகிவிட்டதாம்” என்கிறார்கள்.

* இதையெல்லாம்கூட பப்ளிசிட்டிக்காக அவர் செய்தது என்று விட்டுவிடலாம். ஆனால், நாசரின் மறுபக்கம் சகித்துக்கொள்ளவே முடியாத அளவுக்குக் கொடூரமானது என்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள். கோபத்தில் கையால் அடிப்பது, கல்லால் அடிப்பது மட்டுமல்ல... சொல்லால் அடிப்பதிலும் சூரர் இந்த நாசர். அவர் சொல்வதைக் கேட்கவில்லையென்றால் கட்சிக்காரர் என்றில்லை, அதிகாரியாக இருந்தாலும் வாயில் வருவதெல்லாம் காது கூசும் கெட்ட வார்த்தைகள்தான். குழந்தைகள், பெண்கள் இருந்தாலும் கவலைப்பட மாட்டார். இப்படி அவர் திட்டப் பயன்படுத்திய கெட்ட வார்த்தைகளைஎல்லாம் தொகுத்தால், ‘கெட்ட வார்த்தை பேரகராதி’ என்று பெரிய புத்தகமாகவே போடலாம். கட்சிக்காரர்களை மட்டுமல்ல, செய்தியாளர்களையும் திட்டித் தீர்த்திருக்கிறார் மனிதர். பால் விலை உயர்வு குறித்து கேள்வி கேட்ட பத்திரிகையாளரை, சென்னைக்கே உரிய கெட்ட வார்த்தையைச் சொல்லி, ‘போடா!’ என்று திட்டினார். திருவள்ளூரில் நடந்த கூட்டுறவு சங்க நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்த செய்தியாளரையும் இதேபோல திட்டிய வரலாறும் உண்டு. பிரஸ் மீட்டில் கேள்விகளால் துளைத்தெடுக்கும் பத்திரிகையாளர்களை, ‘ஆபீஸ் ரூமுக்கு’ அழைத்து காதுகள் கருகும் அளவுக்குக் கவுச்சியாகப் பேசுவாராம் நாசர்.

ஜோக்கரா... வில்லனா? - அமைச்சர் நாசரின் அக்கப்போர்கள்!

* கட்சிக்காரர்களின் போன் அழைப்பை நாசர் எதிர்கொள்ளும் லட்சணம் இருக்கிறதே... கர்ண கொடூரம். அதிகாரத்துடனும் அலட்சியமாகவும், “யாரு... சொல்லு... ஆங்... வெய்யி... வெய்யி...” என எரிச்சலோடு பேசி வெறுப்பேற்றுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார். இது குறித்து தி.மு.க தலைமைக்குப் பலமுறை புகார் அளித்தும், நாசர் மீது நடவடிக்கை இல்லை. அந்த மிதப்பில்தான், நாசருக்குத் தற்போது கையும் நீள ஆரம்பித்திருக்கிறது. அதில் ஒன்றுதான், இந்தக் கல்லெறி சம்பவம். பப்ளிசிட்டிக்காக அமைச்சர் நாசர் செய்யும் கோமாளித்தனங்களைக்கூட சகித்துக்கொள்ளலாம். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி போன்ற ‘லெஜண்ட்’டுகளும் இப்படி காமெடி கதகளி ஆடியதுண்டு.

ஆனால், நாசரோ பொதுமக்களிடம் காமெடியனாகவும், கட்சிக்காரர்கள், அதிகாரிகளிடம் அதிகாரத் திமிர் பிடித்த வில்லனாகவும் இருக்கிறார் என்பதுதான் கொடுமை!