வரி... வரி... வரி... மறைமுகமாக சுரண்டுகிறது ஒன்றிய அரசு! - கொதிக்கும் அமைச்சர் நாசர்

ஒரு நாளுக்கு 65 லட்சம் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்கிறோம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பொறியாளர்கள் தயாரிப்பு விவரங்களைப் பரிசோதனை செய்துகொண்டேயிருப்பார்கள்
ஆவின் பால் பாக்கெட்டின் எடை குறைவு சர்ச்சையில் தொடங்கி, பால் பொருள்கள் விலை உயர்வு வரையிலான பல்வேறு சர்ச்சைகள் ஆவின் நிறுவனத்தைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவை குறித்து தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்…
“ஆவினைச் சுற்றி எப்போதும், ஏதாவது ஒரு சர்ச்சை எழுந்துகொண்டேயிருக்கிறதே?”
“அப்படியெல்லாம் இல்லை. பாலுக்கான ஜி.எஸ்.டி-யை ஜீரோவிலிருந்து 5 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறது ஒன்றிய அரசு. தனியார் நிறுவனங்களைவிட, பால் கொள்முதலுக்கு இரண்டு மடங்கு விலை கொடுக்கிறோம் நாங்கள். கொரோனா, மழை வெள்ள பாதிப்பு என அனைத்துப் பேரிடர் காலங்களிலும் தடையின்றி பால் விநியோகம் செய்திருக்கிறோம். கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான விலையை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகவே வழங்கிவருகிறோம். பால் பாக்கெட் எடை குறைந்ததாக அண்ணாமலையும் ஜெயகுமாரும்தான் சொல்கிறார்களே தவிர மக்கள் யாரும், எங்கும் புகார் அளிக்கவில்லையே... மற்றபடி எந்தச் சர்ச்சையுமில்லையே!”
“அது எப்படி ஒரே ஒரு பால் பாக்கெட்டின் எடை மட்டும் குறையும்?”
“ஒரு நாளுக்கு 65 லட்சம் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்கிறோம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பொறியாளர்கள் தயாரிப்பு விவரங்களைப் பரிசோதனை செய்துகொண்டேயிருப்பார்கள். எல்லாமே இயந்திரத்தின் மூலம்தான் எனும்போது எப்படி ஒரு பாக்கெட்டில் மட்டும் எடை குறைவாக இருந்திருக்கும்... தவறு நேர்ந்தால் 65 லட்சம் பாக்கெட்களிலும் நேர்ந்திருக்க வேண்டுமல்லவா... இப்படித்தான் தயாரிக்காத சத்துமாவு குறித்துப் பேசினார்கள். ஜெயக்குமாரைப் பொறுத்தவரை அவரின் கட்சியினரே அவருக்கு அடையாளம் இல்லாமல் செய்துவிட்டார்கள். அரசியலில் காணாமல்போய்விடுவோமோ என்ற அச்சத்தில் அவரும் ஏதாவது ஒன்றைப் பேசிக்கொண்டே யிருக்கிறார்.”

“பிரச்னையே இல்லாமலா இத்தனை குற்றச்சாட்டுகளை வைப்பார்கள்?”
“ஆவின்மீது மக்கள் யாராவது, எங்காவது புகார் அளித்திருக்கிறார்களா... பால் எடை குறைவாக இருப்பதாக ஒரு வீடியோ வந்ததே, அந்த வீடியோவை எடுத்தவர்கூட புகார் அளிக்கவில்லையே.. அண்ணாமலையோ, ஜெயக்குமாரோ அவர்களை அழைத்துப் புகார் அளிக்க வைத்திருக்கலாமே... அப்படி ஒன்று நடந்திருந்தால்தானே புகார் அளிப்பார்கள். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்கத் தேவையில்லை.”
“அண்ணாமலையையும் ஜெயக்குமாரையும் ஏன் அரசியல் சார்போடு அணுகுகிறீர்கள்... அவர்களையும் நுகர்வோராக எடுத்துக்கொள்ளலாமே?”
“(சிரிக்கிறார்) அவர்கள் இருவரும் ‘எங்களிடம் சொன்னார்கள்’ என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இப்படி ஆயிரம் கட்டுக்கதைகளை நாமும் அவர்கள்மீது சொல்லலாம். திட்டமிட்டு, ஜோடிக்கப்பட்ட ஒரு பொய்யைச் சொல்வதும், அது குறித்துக் கேள்வி எழுப்பியதும் ஓடி ஒளிவதும் அவர்களுக்குப் புதிதல்ல.”
“ ‘நாங்கள் 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி உயர்த்தினோம், ஆனால் தமிழ்நாடு அரசு மூன்று மடங்கு விலையேற்றிவிட்டது’ என்று பா.ஜ.க-வினர் குற்றம்சாட்டுகிறார்களே?”
“பாலுக்கான ஜி.எஸ்.டி மட்டும்தான் அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால், பால் கறக்கும் இயந்திரங்களுக்குச் சரக்கு மற்றும் சேவை வரியை 12 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. ஆவினுக்குப் பயன்படுத்தப்படும் உலை எண்ணெயின் விலையை உயர்த்தியிருக்கிறார்கள். ஐஸ்க்ரீம் பிஸ்கெட், பேப்பர், அட்டைப்பெட்டி, நீராவி உருவாக்குவதற்கு என அனைத்தின் ஜி.எஸ்.டி-யையும் உயர்த்தியிருக்கிறார்கள். அனைத்திலும் வரி... வரி... வரி... இதனால், 30 சதவிகிதத்தை மறைமுகமாக வரியாகச் சுரண்டுகிறது ஒன்றிய அரசு. ஆனால், வெளியில் `நாங்கள் வெறும் 5 சதவிகிதம்தான் உயர்த்தினோம். தமிழ்நாடு அரசுதான் பொருள்களின் விலையை உயர்த்திவிட்டது’ என நடிக்கிறார்கள். மக்களிடம் இந்த நடிப்பு எடுபடாது.”
“ரயில் நிலையங்களிலிருந்த ஆவின் பாலகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. என்ன காரணம்?”
“சென்னையில் மொத்தம் ஆறு ரயில்வே நிலையங்களில் ஆவின் பாலகங்கள் வைத்திருந்தோம். ஒன்றிய அரசு உரிமைத்தொகையையும், வாடகையையும் உயர்த்தியதால் அந்த ஆறு இடங்களிலும் தற்போது கடைகள் இயங்கவில்லை. ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். விரைவில் தீர்வு எட்டப்பட்டு, மீண்டும் கடைகள் இயங்கும்.”
“அனைத்துக்கும் மத்திய அரசைக் குறை சொல்வது எப்படிச் சரியாக இருக்கும். மக்களுக்குத் தீர்வுதானே வேண்டும்?”
“தீர்வு மக்களின் கைகளில்தான் இருக்கிறது. தளபதி தலைமையிலான அரசு, முடிந்த அளவு மக்களுக்குச் சுமையை ஏற்றாமல் பார்த்துக்கொள்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு அளித்த வெற்றியைப்போல இந்த முறையும் ஆதரவளித்து, பா.ஜ.க-வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அப்படிச் செய்வது ஒன்றுதான் இந்த விலைவாசி உயர்வுக்கு ஒரே தீர்வு.”
“ஆவடி மாநகராட்சி நிர்வாக விவகாரத்தில், உங்கள் தலையீடு அதிகமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?”
“நான் ஆவடி சட்டமன்ற உறுப்பினர். நான் தலையிடாமல் வேறு யார் தலையிடுவார்கள்... சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சில பணிகள் நடக்கும்போது, அந்தத் திட்டங்கள் முறைப்படி நடக்கின்றனவா இல்லையா என நான் பார்க்க வேண்டும் இல்லையா... அதுமட்டுமல்லாமல், மேயருடன் இணைந்துதான் செய்கிறோம். இதில், தலையிடுகிறேன் என்பது தேவையற்ற அவதூறு. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கிளப்பிவிடப்படும் வீண் வதந்தி.”
“ரியல் எஸ்டேட் தொழிலில் நீங்கள் ஈடுபடுவதாகவும் புகார் சொல்கிறார்களே?”
“என்னை மட்டுமல்ல... அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களையும் நாள்தோறும் ஏதாவதொரு மக்கள் பணியில் ஈடுபடுத்திக்கொண்டே இருக்கிறார் முதல்வர். மக்கள் பணியில் ஓடிக்கொண்டிருக்கும் எங்களுக்கு குடும்பத்தினரோடு பேசுவதற்குக்கூட நேரமில்லை. அப்படியிருக்கும்போது ரியல் எஸ்டேட் செய்கிறோம் என்றெல்லாம் சொல்வது மனதுக்கு வேதனையாக இருக்கிறது. அப்படியிருந்தால் தளபதியிடமிருந்து தப்பிக்கவே முடியாது.”