தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

இவருக்குக் கோபப்படத் தெரியாது!

செல்லூர் ராஜு - ஜெயந்தி
News
செல்லூர் ராஜு - ஜெயந்தி

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்...

``வயசுக் காலத்துல அன்பா இருக்கிறதைவிட, வயசாகும்போதும் அந்த அன்பு அலுத்துடாம, குறைஞ்சுடாம இருக்கிறதுதான் முக்கியம்... எங்களை மாதிரி’’ என்று சொல்லும் போதே செல்லூர் ராஜுவின் முகம் பிரகாசமாகிறது. அந்தப் பரவசம், அருகிலிருக்கும் ஜெயந்தி ராஜுவின் முகத்திலும் பரவுகிறது.

தமிழகம் மட்டுமல்லாது, உலகம் முழுவதுமுள்ள தமிழர் களுக்கு மிகவும் பரிச்சயமானவரான கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழ் ஊடகங்களுக்குச் செல்லப்பிள்ளை. பென்டகன் முதல் பெரியார்வரை, ராக்கெட்முதல் ரஜினிவரை எந்த சப்ஜெக்ட்டில் கேள்வி கேட்டாலும், இவரிடம் பதில் ரெடியாக இருக்கும். பரபரப்பான அரசியல் பணிகளுக்கு இடையிலும், மற்றவர்கள் வியக்கும் வகையில் அந்நியோன்யமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறார்கள் செல்லூர் ராஜு - ஜெயந்தி தம்பதி.

கட்சி மற்றும் தன் துறை சார்ந்த பணிகளில் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருந்த செல்லூர் ராஜுவிடம், காதலர் தினச் சிறப்பிதழ் பேட்டிக்காகப் பேச ஆரம்பித்ததும், மனிதர் அப்படியே கூலாகிவிட்டார்.

 அமைச்சர் குடும்பம்...
அமைச்சர் குடும்பம்...

``நான் டிகிரி முடிச்சதும் பிசினஸ்ல இறங்கிட் டேன். உடனே எங்கம்மா எனக்குப் பெண் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. என் மனைவிக்குப் பூர்வீகம் உசிலம்பட்டி பக்கம் என்றாலும், அவங்க அப்பாவோட வேலை காரணமா சின்னமனூர், திருவனந்தபுரம்னு பல ஊர்களில் வசிச்சாங்க. எங்களுக்குத் தெரிந்த குடும்பம் என்பதால பேசி முடிச்சாங்க. 1979-ல் திருமணம் நடந்தது’’ என்று செல்லூர் ராஜு ஆரம்பிக்க, ஜெயந்தியும் இணைந்துகொண்டார்.

``எங்க அண்ணனும் இவங்களும் ஆறாம் வகுப்புலயிருந்து ஒண்ணா படிச்சவங்கங்கிறதால, இவங்க குடும்பத்தைப் பத்தி எங்க வீட்டுக்கு நல்லா தெரியும். அதனால, இவங்க பெண் கேட்டதும் உடனே சம்மதிச்சிட்டாங்க. வரதட்சணை, சீர்னு எதுவும் வேண்டாம்னு இவர் சொல்லிட்டார். அப்போவே அப்படியான முற்போக்குக் கருத்துகளுடன்தான் இருந்தார். அதுதான் அவர் அரசியலில் வெற்றிபெறக் காரணம்’’ என்கிற ஜெயந்தியிடம், ‘`சார் வீட்ல எப்படி?” என்கிறோம்.

‘`மேடைகள்ல ஆக்ரோஷமா பேசுவார், பரபரப்பா பேட்டி கொடுப்பார். எங்க வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைந்துவிட்டாலே அரசியலை மறந்துடுவார். வீட்டுக்குள்ள வரும்போது குழந்தையாகிடுவார். அவருக்கு ரொம்ப நெகிழ்வான மனம். வெள்ளந்தியா மனசில் பட்டதை பேசிடுவார். ஒளிவு மறைவு இருக்காது. வீட்ல பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்க ரொம்ப விரும்புவார். பிள்ளைங்க, உறவுக்காரங்கன்னு எல்லாரும் எப்படி இருக்காங்க, அவங்களுக்கு ஏதாச்சும் பிரச்னையா, அவங்களை நேர்ல போய் ஒருமுறை பார்த்தா அவங்களுக்கு ஆறுதலா, சந்தோஷமா இருக்குமானு எப்பவும் குடும்பத்தினரையும் நண்பர்களையும் பற்றியே பேசிட்டிருப்பார்’’ என்று ஜெயந்தி சொல்ல, ‘`நான் எவ்வளவு சுத்தினாலும் இவங்கதான் என் அச்சு’’ என்று தன் அன்பைச் சொல்ல ஆரம்பித்தார் செல்லூர் ராஜு.

``அவங்க விரும்பாத அரசியல் விஷயங்களை அவங்ககிட்ட பேச மாட்டேன். மத்தபடி, பெரும்பாலான விஷயங்களை என் மனைவிகிட்ட பகிர்ந்துக்குவேன். என்னையும் வீட்டையும் முழுமையா கவனிச்சுக்கிறவங்க இவங்கதான். குடும்ப வரவு செலவுகள் அவங்களுக்குத்தான் தெரியும். அதை ரொம்ப சரியா செய்வாங்க. கல்யாணம் பண்ணின காலத்திலிருந்து இப்போவரை என் சம்பளப் பணத்தை அவங்ககிட்ட கொடுத்துத்தான் வாங்கறேன். என் உடல்நலம் அவங்க கவனிப்புலதான் நல்லாயிருக்கு. வெளியூர் செல்லும்போது பெரும்பாலும் இவங்களையும் கூட்டிட்டுப் போயிடுவேன்’’ என்கிறவர், ‘`யாரா இருந்தாலும், உங்க துறையில் வெற்றியாளரா இருந்தா மட்டும் போதாது, குடும்ப வாழ்க்கையிலும் வெற்றியாளரா இருக்கணும். அதுக்காக பெருசா எதுவும் செய்ய வேண்டாம். மனைவிகிட்ட, பிள்ளைங்ககிட்ட, குடும்பத்தினர்கிட்ட தினமும் கொஞ்சம் நேரம் பேசி வந்தாலே போதும். அது நமக்கும் எந்தக் கவலையையும் அண்டாது. அதுக்குக்கூட இங்கே பலருக்கும் நேரம் இருக்கிறதில்லைங்கிறது வருத்தமான விஷயம்’’ என்கிறார் அமைச்சர்.

``பிறந்த நாள், திருமணநாள்னு சர்ப்ரைஸ் கிஃப்ட் வாங்கிக்கொடுப்பாரா?’’ - இது ஜெயந்திக்கான கேள்வி. ‘`சர்ப்ரைஸ் எல்லாம் இல்ல, என்னை நேரடியா கடைக்குக் கூட்டிட்டுப் போய், புடவை, நகைன்னு எது வேணும்னு கேட்டு வாங்கிக்கொடுப்பார். எனக்காக கடை, கடையாகூட ஏறி இறங்குவார். அதுபோல பிள்ளைங்க கேட்கிறதையும் மறுக்காம வாங்கிக் கொடுப்பார். எவ்வளவு பெரிய பொறுப்புல இருந்தாலும், வீட்டுல கணவரா, அப்பாவா அவர் கடமைகள்ல குறைவெச்சதே இல்லை. சொல்லப்போனா, எங்க உறவுகள், நண்பர்கள் எல்லாம் ஆச்சர்யப்படுற அளவுக்குச் சிறந்த குடும்பத் தலைவர் இவர்’’ என்கிறார் ஜெயந்தி ராஜு.

செல்லூர் ராஜு - ஜெயந்தி
செல்லூர் ராஜு - ஜெயந்தி

குடும்பத்தின் பொழுதுபோக்குத் தருணங்கள் பற்றிக் கேட்டோம் செல்லூர் ராஜுவிடம். ‘`பழைய பாடல்கள் கேட்கப் பிடிக்கும். ‘இயற்கை என்னும் இளைய கன்னி’, ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ - இந்த ரெண்டு பாடல்களும் எங்க ரெண்டு பேருக்கும் ரொம்பப் பிடிக்கும். மதுரையில இப்போதான் பொழுதுபோக்க சில இடங்கள் வந்திருக்கு. அப்போவெல்லாம், தியேட்டர் மட்டும்தானே பொழுதுபோக்கு...அதனால, குடும்பத்தோடு அடிக்கடி சினிமாவுக்குப் போவோம். இப்பவும் நேரம் கிடைக்கும்போது போறோம். சமீபத்துல பார்த்த படம், ‘தர்பார்’. ஜெயந்திக்கு சிவாஜியைப் பிடிக்கும். எனக்குப் புரட்சித்தலைவரையும் புரட்சித்தலைவியையும்தான் முதல்ல பிடிக்கும். மற்றபடி, ரஜினியிலிருந்து புதுசா வர்ற நடிகர்கள்வரை பலரைப் பிடிக்கும்’’ என்று பட்டியலிடுகிறார் செல்லூர் ராஜு.

``கோபம் வந்தால் யார் விட்டுக்கொடுப்பீர்கள்?’’ என்றதும், செல்லூர் ராஜு அமைதியாக இருக்கிறார். ‘`நான் பிடிவாதமா இருப்பேன். இவர்தான் வந்து எங்கிட்ட பேச ஆரம்பிப்பார். அரசியல்ல வேணும்னா கோபப்படுவார். வீட்டுக்குள் அவருக்குக் கோபப்படத் தெரியாது’’ என்கிறார் ஜெயந்தி.

‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ பிஜிஎம் கேட்கிறதா உங்களுக்கும்!