சினிமா
Published:Updated:

15 நாள்களில் நிலைமை சீராகிவிடும்! - மா.சுப்பிரமணியன்; ஊரடங்கு கசப்பு மருந்துதான்! - தங்கம் தென்னரசு

மா.சுப்பிரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
News
மா.சுப்பிரமணியன்

ஆக்சிஜனைப் பொறுத்தவரை கடந்த மே 7-ம் தேதி வரை ஒருநாள் கையிருப்பு 230 மெட்ரிக் டன் அளவுக்குத்தான் இருந்தது. இன்று 660 மெட்ரிக் டன் இருப்பு இருக்கிறது.

சென்னையில் கொரோனாத் தாக்கம் சற்று தணிந்திருக்கிறது. ஆனால் மதுரை, திருநெல்வேலி, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் தாக்கம் அதிகரித்திருக்கிறது. படுக்கைகள் முதல் ஆக்சிஜன் வரை தேவையும் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில், களத்தில் நின்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இருவரிடமும் கொரோனாச் சூழல் குறித்து உரையாடினோம்.

“15 நாள்களில் நிலைமை சீராகிவிடும்!” - மா.சுப்பிரமணியன்

``சென்னையோடு ஒப்பிடும்போது பிற மாவட்டங்களில் மருத்துவ வசதிகள் குறைவு... பெருந்தொற்றுத் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் சமாளிக்க என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?’’

“சென்னையைப் போலவே தமிழகம் முழுக்க எல்லா மாவட்டங்களிலும் வார் ரூம் உருவாக்கப்பட்டுள்ளது. சிகிச்சை, படுக்கை ஒதுக்கீடு சார்ந்த எல்லாப் பணிகளையும் அவர்கள் ஒருங்கிணைத்துச் செயல்படுகிறார்கள்.

சென்னை அரசு மருத்துவமனைகளில் ஜீரோ டிலே வார்டு தொடங்கப்பட்டது. 208 படுக்கைகள் அந்த வார்டில் அமைக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸில் நோயாளிகளைக் காக்க வைக்காமல் உடனடியாக இங்கு கொண்டுசென்று ஆக்சிஜன் அளிக்கப்படும். பிறகு நோயாளியின் நிலைக்கேற்ப பிற பிரிவுகளுக்கு மாற்றி சிகிச்சையளிப்பார்கள். இதை மற்ற மாவட்டங்களிலும் உருவாக்கியிருக்கிறோம். மருத்துவமனையின் அளவைப் பொறுத்து ஜீரோ டிலே வார்டில் படுக்கையின் எண்ணிக்கை இருக்கும். அதேபோல எல்லா மருத்துவமனைகளிலும் ‘ஹெல்ப் டெஸ்க்’ ஒன்றை உருவாக்கியிருக்கிறோம். அவர்கள் மக்களுக்குத் தேவையான தகவல்களை அளிப்பார்கள். தனியார் மருத்துவமனைகளின் சேவையும் இந்த நேரத்தில் அவசியம். எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டம் மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது என்று உள்ளூர் சேனல்கள் மூலம் விளம்பரம் செய்யுமாறு ஆட்சியர்களுக்குச் சொல்லியிருக்கிறோம்.”

15 நாள்களில் நிலைமை சீராகிவிடும்! - மா.சுப்பிரமணியன்; ஊரடங்கு கசப்பு மருந்துதான்! -  தங்கம் தென்னரசு

``நிறைய தனியார் மருத்துவமனைகள் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சையளிக்க மறுப்பதாகச் சொல்லப்படுகிறதே?’’

“முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் 890 மருத்துவமனைகளை ஒருங்கிணைத்திருக்கிறோம். குறைந்தபட்சம் 5,000 ரூபாய் முதல் தீவிர சிகிச்சையென்றால் 35,000 ரூபாய் வரை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெறலாம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுமையாக ஆய்வு செய்தே இந்தத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு இதனால் எந்த இழப்பும் ஏற்படப்போவதில்லை. மக்களுக்குப் புரியும் வகையில் தனியார் மருத்துவமனை முகப்பில் ‘இது முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் மருத்துவமனை’ என்று பலகை வைக்கச் செய்திருக்கிறோம். காப்பீட்டுத் திட்டத்துக்கு என்னென்ன ஆவணங்கள் தேவை, யாரை அணுக வேண்டும் என்றும் விளம்பரம் செய்யச் சொல்லியிருக்கிறோம். எங்கேனும் சிகிச்சை அளிக்க மறுத்தாலோ, அதிக கட்டணம் கேட்டாலோ புகார் செய்யலாம். நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். காப்பீட்டுத் திட்டத்தில் இல்லாதவர்களுக்கும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.’’

``பெருந்தொற்றின் தீவிரத்தை சமாளிக்கும் அளவுக்கு ஆக்சிஜன், மருந்துகள் கையிருப்பு இருக்கிறதா?’’

“ஆக்சிஜனைப் பொறுத்தவரை கடந்த மே 7-ம் தேதி வரை ஒருநாள் கையிருப்பு 230 மெட்ரிக் டன் அளவுக்குத்தான் இருந்தது. இன்று 660 மெட்ரிக் டன் இருப்பு இருக்கிறது. இன்றைய தேவையென்பது 500 முதல் 550 மெட்ரிக் டன்தான். தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. தனியார் மருத்துவமனைகளின் தேவையையும் முழுமையாகப் பூர்த்தி செய்கிறோம். நம்மிடம் வலுவான சுகாதாரக் கட்டமைப்பு இருக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்கூட ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருக்கின்றன. கான்சன்ட்ரேட்டர் வைத்து புதிய படுக்கைகளும் போடப்பட்டுள்ளன. நிறைய நிறுவனங்கள் கான்சன்ட்ரேட்டர்களை வழங்கியுள்ளன. டிவிஎஸ் நிறுவனம் 1,600 கான்சன்ட்ரேட்டர்கள் தந்திருக்கிறார்கள். லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் போன்ற அமைப்புகளும் உதவுகின்றன. அவற்றையெல்லாம் பயன்படுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன.

மருந்துகளும் நிறைவாக இருக்கின்றன. ரெம்டெசிவிரில் மட்டும் கொஞ்சம் பிரச்னை இருந்தது. 20,000 குப்பிகள் தேவையிருந்த பட்சத்தில் மத்திய அரசிடமிருந்து 7,000 தான் வந்தது. கீழ்ப்பாக்கத்தில் அதை விற்பனை செய்தோம். கூட்டம் அதிகமாக இருந்ததால் முதல்வர் பிற 5 மாவட்டங்களில் கூடுதல் விற்பனை மையங்களைத் திறக்கச் சொன்னார். அங்கும் கூட்டம் அதிகரித்ததால் நேரடியாக தனியார் மருத்துவமனைகளுக்கே தரத் தொடங்கியிருக்கிறோம். ஆன்லைனில் விண்ணப்பித்தால் ஒரு குழு மருந்தின் தேவையை ஆராய்ந்து பரிந்துரைக்கும். உடனடியாக மருத்துவமனைக்கு மருந்து வழங்கப்படும். அந்தப்பணியும் சீராக நடக்கிறது.

சென்னையில் இன்றைய நிலையில் 8,000 படுக்கைகள் காலியாக இருக்கின்றன. ஐசியூ படுக்கைகளும்கூட காலியாக உள்ளன. சித்த மருத்துவ மையங்களில் 400 படுக்கைகள் காலி. ஆனாலும் ஆங்காங்கே முகாம்கள் உருவாக்கும் பணிகளும் நடக்கின்றன.’’

``தடுப்பூசி ஒன்றே தீர்வு என்றான நிலையில், பல மாவட்டங்களில் தட்டுப்பாடு இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த நிலை எப்போது மாறும்?’’

“மே 7-ம் தேதி வரை அ.தி.மு.க-தான் தமிழகத்தின் காபந்து சர்க்கார். 16.1.2021-ல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அந்தக் காலகட்டங்களில் சராசரியாக அவர்கள் தினந்தோறும் போட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 61,000. மே 8-ல் நாங்கள் பொறுப்பேற்ற பிறகு தினமும் 1,08,000 தடுப்பூசிகள் போடுகிறோம். மத்திய அரசு நமக்குத் தந்திருப்பது 83 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே. 18 வயது முதல் 44 வயதினருக்கான தடுப்பூசிக்காக மத்திய அரசிடம் நாம் 85,48,00,000 ரூபாய் பணம் கட்டியிருக்கிறோம். அதற்கான 25 லட்சம் தடுப்பூசிகளில் 13 லட்சம் மட்டும்தான் தந்திருக்கிறார்கள். மொத்தம் வந்துள்ள 96 லட்சம் தடுப்பூசிகளில் இதுவரை 87 லட்சம் தடுப்பூசிகள் போட்டுவிட்டோம். ஜூன் முதல் வாரத்தில் மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். வந்தவுடன் எல்லா மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்புவோம்.

அதுமட்டுமன்றி தமிழக அரசு இப்போது மூன்றரைக் கோடி தடுப்பூசிக்கு குளோபல் டெண்டர் விட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் கிடந்த செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசித் தயாரிப்பு மையத்தைப் பார்வையிட்ட முதல்வர், ‘அந்த மையத்தில் தடுப்பூசி தயாரிக்கும் பணியை நீங்கள் செய்யுங்கள் அல்லது நாங்கள் செய்கிறோம்’ என்று மத்திய அரசிடம் பேசியிருக்கிறார். சட்டச்சிக்கலைத் தீர்த்து நாம் நடத்த அனுமதி தந்தால் 9 கோடி பேருக்கான தடுப்பூசியை அங்கே தயாரிக்க முடியும். நம் தேவை போக பிற மாநிலங்களுக்கும் தரலாம்.”

``பெருந்தொற்றுத் தாக்கம் எப்போது முடிவுக்கு வரும்..?’’

“தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கிவிட்டது. தொற்றடைவோரைவிட குணமாகிச் செல்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. அடுத்தடுத்த நாள்களில் தொற்று எண்ணிக்கை கணிசமாகக் குறையும். அடுத்த 15 நாள்களில் நிலை சீராகிவிடும் என்பது என் கணிப்பு.”

``தொடர் பயணம், மருத்துவமனை ஆய்வு என ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்... என்னமாதிரி தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறீர்கள்?’’

“இதுவரை ஐந்து முறை கொரோனா வார்டுகளுக்குள் சென்றிருக்கிறேன். பிபிஇ கிட் போட்டுக்கொண்டுதான் செல்கிறேன். வெளியே வந்தவுடன் பிபிஇ கிட்டையும் போட்டிருந்த உடைகளையும் களைந்துவிட்டு புதிய உடையை அணிந்துகொள்வேன். எப்போதும் சானிட்டைசர், முகக்கவசம் பயன்படுத்துகிறேன். பத்திரிகை நண்பர்களிடம் பேசும்போதும் சமூக இடைவெளியைப் பின்பற்றச் சொல்கிறேன். நாம் ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்பதில் முடிந்த அளவுக்கு கவனமாக இருக்கிறேன்.”

“ஊரடங்கு கசப்பு மருந்துதான்!” -  தங்கம் தென்னரசு

15 நாள்களில் நிலைமை சீராகிவிடும்! - மா.சுப்பிரமணியன்; ஊரடங்கு கசப்பு மருந்துதான்! -  தங்கம் தென்னரசு

``மருத்துவமனைகளில் ஆக்சிஜன் போதுமான அளவு உள்ளதா, அல்லது இன்னும் பற்றாக்குறை நிலவுகிறதா?’’

“தி.மு.க ஆட்சி தொடங்கியபோது, தமிழ்நாட்டுக்குக் கிடைத்த ஆக்சிஜன் 230 மெட்ரிக் டன். முதல்வர் தொடர்ந்து மத்திய அரசுடன் பேசி, கடிதம் அனுப்பியதன் பலனாக 650 டன் ஒதுக்கீடு செய்தார்கள். ஆக்சிஜன் சப்ளையை உறுதி செய்வதில் போர்க்கால நடவடிக்கை அவசியம் என முதல்வர் ஆரம்பத்திலேயே உறுதியாகச் சொல்லிவிட்டதால், தொடர்ந்து, ஒருபுறம் ஸ்டெர்லைட் முதலான தொழிற்சாலைகளிலிருந்து கிடைக்கச் செய்தோம். இன்னொருபுறம், பிற மாநிலங்கள், ஏன் நெதர்லாந்து நாட்டிலிருந்துகூட இறக்குமதியும் செய்யப்பட்டது. இப்போது புகளூர் காகிதத் தொழிற்சாலையில் அரசே ஆக்சிஜன் தயாரிக்கவும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். தொடர்ச்சியான இதுபோன்ற நடவடிக்கைகளால்தான் பற்றாக்குறை இல்லை என்ற நிலை இருக்கிறது.’’

``ஊரடங்கு அமலாகி ஒரு மாதம் ஆகிவிட்டது. சிறு, குறு தொழில்கள் அதிகம் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றனவே?’’

“ஊரடங்கு என்பது ஒரு கசப்பான மருந்துதான். அதேநேரம் தொழில் பாதிக்கப்பட்டால் பிறகு அதைச் சரி செய்துவிடலாம். ஆனால் மக்கள் உயிர் முக்கியம் என்பதால் வேறு வழியில்லாமல் ஊரடங்கைச் சந்திக்க வேண்டிய சூழல்... தொற்றுப் பரவல் தடுக்கப்பட்டு நிலைமை சுமுகமானதும், மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியதும் அரசின் மிக முக்கியமான கடமை. அதைக் கருத்தில் கொண்டுதான் இந்தத் தளர்வில்லா ஊரடங்கில் கூட ஏற்றுமதி செய்கிற நிறுவனங்கள் 50 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதித்திருக்கிறோம். சிறு குறு நிறுவனங்களுக்கு இ.எம்.ஐ செலுத்த வேண்டிய கடன் பிரச்னை பெரிய பாரமாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். சி.ஐ.ஐ. நிர்வாகிகளிடம் காணொலி வாயிலாகப் பேசியபோது, அவர்களிடமிருந்து சில கோரிக்கைகள் வந்திருக்கின்றன. அந்த விஷயங்கள் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்.’’

``செங்கல்பட்டு தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனத்தை தமிழக அரசே ஏற்று நடத்த மத்திய அரசின் அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளதா?’’

‘‘முதல்வர் இதுகுறித்து பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். டெல்லியில் மத்திய அமைச்சரைச் சந்தித்தும் பேசினோம். அப்போது கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசே சில நிறுவனங்களிடம் இது தொடர்பாகப் பேசியதாகவும், சம்பந்தப்பட்ட அந்த நிறுவனங்கள் மேற்கொண்டு என்ன சொல்கின்றன என்பதைப் பொறுத்து தங்களது முடிவைச் சொல்வதாகவும் சொன்னார்கள்.

‘ஒண்ணு நீங்க பண்ணுங்க, அல்லது எங்களைச் செய்ய விடுங்க, இந்த மாதிரியான மருத்துவ நெருக்கடியான சூழலில் இப்படி ஒரு தொழிற்சாலை இயங்க வேண்டியது அவசியம்’ எனச் சொல்லிட்டு வந்திருக்கிறோம். ஒருவேளை தமிழக அரசுக்குத் தொழிற்சாலையை நடத்த அனுமதி கிடைத்தால், எப்படி நடத்துவது, ஜாயின்ட் வெஞ்சரா, அரசுடன் வேறு நிறுவனங்கள் வருமா என்பதெல்லாம் அப்போது முடிவு செய்யப்படும்.’’

``வெளி நாடுகளிலிருந்து நேரடியாகத் தடுப்பூசி கொள்முதல் செய்வதில் சிக்கல் நீடிக்கிறதா? சில சர்வதேச நிறுவனங்கள் ‘இந்தியாவைப் பொறுத்தவரை நாங்கள் மாநில அரசுகளுக்குத் தடுப்பூசி விற்பனை செய்ய முடியாது’ என்று சொன்னதாகச் செய்திகள் வெளியானதே?’’

‘‘தடுப்பூசிக்கான டெண்டர், அவற்றை எப்படிக் கொள்முதல் செய்வது, அதில் என்ன நடைமுறைகள் ஆகிய எல்லாவற்றையுமே சுகாதாரத்துறைதான் முடிவு செய்ய உள்ளது. அது அவர்களின் கட்டுப்பாட்டில்தான் வருகிறது. எனவே அவர்கள் அரசிடம் கலந்து பேசி முடிவெடுப்பார்கள்.’’