மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து, அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் வழியாக வரும் உபரிநீர் தேக்கிவைத்து பயன்படுத்த வழியின்றி பழையாறு மீன்பிடித் துறைமுகத்தையொட்டி கடலில் கலக்கிறது. இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக படுகை கிராமங்களான வெள்ளமணல், முதலைமேடுதிட்டு, நாதல்படுகை உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்ததால் சுமார் 50 ஹெக்டேர் விளைநிலங்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கின. குடியிருப்புகளையும் தண்ணீர் சூழ்ந்ததால் அந்தப் பகுதி மக்கள் தங்களது உடைமைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமத்திலிருந்து வெளியேறி கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இன்று (08.08.2022) நான்காவது நாளாக கொள்ளிடம் ஆற்றில் படிப்படியாக தண்ணீர்க் குறைந்து 1 லட்சத்து 59 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டுள்ளது. இருந்தபோதிலும் படுகை கிராமங்களுக்குச் செல்லும் வழிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்களது குடியிருப்புகளுக்குச் செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் சட்டம், நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்ட அமைச்சர் ரகுபதி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் கொள்ளிடம் ஆற்றின் வெள்ளநீர் புகும் அபாயம் உள்ள காட்டூர் கிராமத்தில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். தொடர்ந்து அவர்கள் அளக்குடி கிராமத்தில் 2018-ம் ஆண்டு உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பொதுப்பணித் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கரை சீரமைப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். பின்னர் அவர்கள் முதலைமேடுதிட்டு கிராமத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். தண்ணீராால் சூழப்பட்டுள்ள நாதல்படுகை கிராமத்துக்கு அமைச்சர்கள் படகு மூலம் சென்று மக்களிடம் நிலைமையைக் கேட்டறிந்ததுடன், அதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர்கள், ``மேட்டூரிலிருந்து உபரிநீர் அதிகப்படியாக திறக்கப்பட்டுள்ளதாலும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் தொடர்ந்து 2 லட்சம் கன அடிக்கும் மேற்பட்ட தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் இத்தகைய பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் ஆற்றின் உள்ளே உள்ள மக்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கும், அந்தந்த பகுதியிலேயே நிரந்தரமான புயல் பாதுகாப்பு மையம் அமைப்பதற்கும் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் மூழ்கி பாதிக்கபட்டுள்ள விளைநிங்கள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும்" என்று உறுதியளித்தனர்.