அண்மையில் இன்ஸ்டாகிராம் நேரலை ஒன்றில் பங்கேற்ற 2020-க்கான அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஆண்ட்ரியூ யாங்க், அமெரிக்காவில் கொரோனாவுக்குப் பிறகான காலகட்டத்தில் கல்வித்துறை எப்படியான சவால்களை எதிர்கொள்ளும் என்பது பற்றிப் பேசியிருந்தார்...
நான் படித்த காலகட்டத்தையும் தற்போதைய கல்வியையும் ஒப்பிடுகையில், இங்கே கல்வியின் விலை பத்து மடங்கு அதிகரித்திருக்கிறது. இதற்காக அரசு என்ன செய்திருக்கிறது?ஆசிரியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை; பாடத்திட்டத்தில் முன்னேற்றமில்லை. ஆனால், கல்வியின் விலை மட்டும் உயர்ந்துள்ளது. கல்விக்கடன்களை வேறு அடைக்க வேண்டும். வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் நிலையில் அவர்களால் அதைச் செலுத்த முடியுமா.. கொரோனாவுக்குப் பிறகு எத்தனை பேர் மீண்டும் படிக்க வருவார்கள் என்பதே சந்தேகமாக உள்ளது.ஆண்ட்ரியூ யாங்க், அமெரிக்க அதிபர் வேட்பாளர்
இத்தனைக்கும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கான ஸ்டிமுலஸ் முதலீட்டைப் பல்வேறு துறைகளில் அந்த நாடு நுழைத்துள்ளது. ஒரு வல்லரசு நாட்டின் கல்விச்சூழலே இத்தனை கேள்விக்குறியாகி இருக்கும்போது வளரும் நாடுகளின் கல்விச்சூழல் குறித்து விளக்கத்தேவையில்லை. ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கல்வித்துறையின் அடுத்தகட்ட செயல்பாடுகளை மேற்கொண்டுவருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதற்கான அண்மை உதாரணம், நீட் தகுதித்தேர்வு 26 ஜூலை அன்று நடைபெறும் என அறிவித்திருப்பது.

நீட் நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக மட்டும் இதுவரை மூன்று சுற்றறிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் நீட் தேர்வு நடத்துவது சாத்தியமா? இதில் உள்ள சவால்கள் என்ன என்பது குறித்து அந்தச் சுற்றறிக்கைகளில் எந்தவித விளக்கமும் இல்லை.
கொரோனா தொற்று எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. இதில் ஜூலை மாதத்துக்குள் நிலைமை சீராகிவிடும் என்கிற எந்தவகை உறுதியும் இல்லை. 2020-க்கான நீட் யூ.ஜி தேர்வுக்காக இதுவரை 15,93,452 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் 155 நகரங்களில் உள்ள 2,546 மையங்களில் இந்தத் தேர்வை எழுதுவார்கள் எனக் கடந்த பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டாலும் மக்கள் சில மாதங்களுக்குச் தனிமனித விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், 2,546 மையங்களிலும் தனிமனித விலகலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தேர்வு நடத்துவது சாத்தியமற்றது.
ஒரு மாணவர் கையொப்பமிடும் அதே தாளில்தான் மற்றொரு மாணவரும் கையொப்பமிடுவார், அதன்மூலம் தொற்றுப்பரவ வாய்ப்பிருக்கிறது.பேராசிரியர் ரவிக்குமார், நீட் தேர்வு பயிற்சியாளர்

"சென்ற ஆண்டு சென்னையின் ஒரு கல்லூரியில் நீட் தேர்வு நடந்தது. 1,000 மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுடன் தேர்வு மையத்துக்கு வந்திருந்தார்கள். இவர்கள் தவிர, தேர்வு கண்காணிப்பாளர்கள், மாணவர்களைப் பரிசோதிக்கும் அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் உட்பட அந்த மையத்தில் மட்டும் கிட்டத்தட்ட அன்று நான்காயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தோம். இந்தியா முழுவதும் இருக்கும் மையங்களில் இதுபோல மாணவர்கள் பெற்றோர்களுடன் கூடினால் அதனால் கொரோனா காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளை நினைத்துப் பார்க்க வேண்டும். தேர்வு அறைகளில் மாணவர்கள் தள்ளித்தள்ளிதான் அமரவைக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தும்மல், இருமல் போன்ற இயற்கையான பிரச்னைகள் ஏற்படாது என்பது என்ன நிச்சயம்? ஒரு மாணவர் கையொப்பமிடும் அதே தாளில்தான் மற்றொரு மாணவரும் கையொப்பமிடுவார், அதன்மூலம் தொற்றுப்பரவ வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் எப்படித் தவிர்க்கப்போகிறோம்?" என அதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களை விவரிக்கிறார் பேராசிரியர் ரவிக்குமார். இவர் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார்.
தேர்வு நடத்துவதில் இதுபோன்ற சிக்கல்கள் என்றால் நீட் தேர்வுக்கான பயிற்சிகளில் வேறுபல சிக்கல்கள் இருக்கின்றன. மொத்தம் மூன்று வகையான மாணவர்கள் நீட் தேர்வுக்காகப் பயிற்சி பெறுகிறார்கள்.
ப்ளஸ் 1, ப்ளஸ் டூ படிக்கும்போதே நீட் தேர்வுக்காகப் பயிற்சி எடுத்துக்கொள்பவர்கள்.
ப்ளஸ் டூ முடித்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தனியாக நீட் பயிற்சி எடுத்துக்கொள்பவர்கள்.
ப்ளஸ் டூ முடித்து 45 நாள்கள் கிராஷ் கோர்ஸ் பயிலுபவர்கள்.
இவர்களில் முதல் இரண்டு வகைகளுக்குப் பயிற்சிகள் அத்தனையும் முடிந்துவிட்டன. கொரோனா ஊரடங்கால் நீட் மாதிரித் தேர்வுகள் எழுதுவதற்கான வாய்ப்புகள் மட்டும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை. கிராஷ் கோர்ஸ் முடித்துத் தேர்வு எழுதலாம் எனக் காத்திருக்கும் மாணவர்களுக்கு மட்டும் இது பேரிடியாக இருக்கும். பெரும்பாலான பயிற்சி மையங்கள் ஆன்லைனிலேயே அவர்களுக்கான மெட்டீரியல்களை அனுப்பிவருகின்றன. ஜூம் வழியாக வகுப்புகள் நடத்துகிறார்கள். அதன்மூலம் தேர்வை எதிர்கொள்ள முடியுமா என்பது சந்தேகமே!
இவர்களில் வேறு ஒரு பிரிவினரும் இருக்கிறார்கள். கிராஷ் கோர்ஸ்களுக்குக் கூட விண்ணப்பிக்காமல் அரசு தரும் பயிற்சிகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் மாணவர்கள். அவர்களுக்கு ஆன்லைன் வசதிகள் கிடையாது. ஆன்லைன் வசதிகள் இருந்தாலும் அரசு இதுவரை நீட் பயிற்சிக்கான ஆயத்தங்கள் எதையும் மேற்கொள்ளவில்லை.
இந்தச் சூழலில் எவ்விதத் தயாரிப்பும் இல்லாமல் தேர்வு எழுதுவது அவர்களுக்குப் பெரும் ஏமாற்றமாகவே இருக்கும்.
பெரும்பாலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இந்த நீட் தேர்வு பெருத்த ஏமாற்றத்தையே அளிக்கும். மாணவர்கள் பழைய இயல்புக்குத் திரும்பக் குறைந்தது 45 நாள்கள் அவகாசம் தேவை. ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே இந்த ஊரடங்கைத் திரும்பப்பெற்றால்தான் அது சாத்தியம். ஆனால், ஊரடங்கைத் திரும்பப் பெறும் சூழலில் நாம் தற்போது இல்லை.

அமெரிக்காவில் கல்லூரியில் சேர்வதற்கான மாணவர்களின் தகுதியை நிர்ணயிக்கும் சாட் மற்றும் பி-சாட் தேர்வுகள் தொடக்கத்தில் ஜூன் மாதத்தில் நிகழ்வதாக இருந்தது. ஆனால், சூழலைக் கருத்தில் கொண்டு இந்தத் தேர்வை நடத்தும் `தி காலேஜ் போர்ட்’ என்னும் லாபநோக்கமற்ற அமைப்பு, தற்போது தேர்வுகளை ஆகஸ்ட் மாதத்துக்குத் தள்ளி வைத்துள்ளது. அதுவுமே ஆன்லைன் வழித் தேர்வுகளாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாட் தேர்வை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் நீட். தேர்வு நடத்துவதை மட்டுமே முழு நோக்கமாகக் கொண்டிருக்கும் நமது தேசியத் தேர்வு முகமை மாணவர்கள் நலனிலும் கொஞ்சம் அக்கறை செலுத்தலாம்.
கொரோனா பேரிடர் காலத்தில் நீட் தேர்வு நடத்துவது சரியா, உங்கள் பார்வை என்ன? கீழே கமென்டில் பதிவிடவும்.