Published:Updated:

நீங்க படமாக.. நானும் ஜடமாக!

கவிதை

நீங்க படமாக.. நானும் ஜடமாக!

உங்கள் படம் தொங்குவதை கவனிக்காமல்

 செருப்புக் காலுடன் வந்துவிட்டேன் தெய்வமே!

அதற்காக அடித்துத் துவைத்து ஆணியில் தொங்கவிட்டதைப்பற்றி

அடியேன் வருந்துவேனா?

செருப்பைக் கழற்றிவிட்டு தொங்க அனுமதியுங்கள் அம்மா!

ஆணியில்

நீங்கள் படமாக...

நானும் ஜடமாக!

- எஸ்.விஸ்வநாதன்

'முன்னாள்’ முதல்வராகி சுவரில்

'மாட்டி’ பொலிவின்றி

தோன்றும் 'ஏணி’!

'இந்நாள்’ முதல்வராக மாட்டிகிட்டு

கட்டுண்டு தொங்கும்

வெண்தாடித் 'தோணி’!

- போடி ரவிராஜ்

கடற்கரையில் கட்டிய

புதிய வீட்டுக்கு

திருஷ்டிப் பொம்மை வாங்க

கடைக்குச் சென்றேன்...

புதிய வரவாம் இது

சுனாமியே வந்தாலும்

வீடு எதுவும் ஆகாதாம்.

- ந.திருஞானசம்பந்தம்

வருவாய்த் துறை உண்டு என்னிடம்

திருவாய் திறக்க வழியில்லை...

என்னை மாட்டிவிட்டீர்களே!

விடுதலை செய்வீர்களா?

நீங்கள் செய்வீர்களா?

நீங்கள் செய்வீர்களா?

- டி.பூவராகன்

ஆணியிலே மாட்டினாலும்

கோணியிலே சுருட்டினாலும்

ராணியே, நீயே எனக்கு தெய்வம்!

- வெங்கடேஷ்

அவுத்துப் போட்ட சட்டைகூட

அம்மா படத்த வணங்குது

வவுத்துப் பொழப்பு என்ன செய்ய

சுவத்து மேல தொங்குது

பணிஞ்சு பணிஞ்சு படுத்துக்கிட்டே

பதவி ஓட்டும் கதை இது

குனிஞ்சு குனிஞ்சு ஒடிஞ்சுபோன

குறுக்கு சொல்லும் கதை இது

அழுது அழுது உருகிக்கிட்டே  

பொழுது தேஞ்சு போகுது

விரசா போக வழி அறியாம

அரச வண்டி ஓடுது

- நெல்லை முத்துவேல்

சுவர் ஒன்றுதான்

சட்டகத்தில் அடைக்கப்பட்ட

அமைதி தவழும்

ஒப்பனைகள் கொண்ட படம் ஒன்று

சட்டகத்தை மீறும்

அனைத்து அதிகாரம் நிரம்பிய

முகம் அது.

ஆணிக்குள் தொங்கிக்

கொண்டிருக்கிற அதிகாரம்

பெற்ற படம் இரண்டு.

சற்றே குனிந்து நிமிரும்

சட்டகத்தின் செய்தியை

ஒப்பிக்கிற முகம் இது...

ஒரே சுவர்

ஒரே அதிகாரம்

இரு முகங்கள்!

- இயக்குநர் வ.கீரா