Published:Updated:

கதை மழை

’சார்’கள்!பிரபஞ்சன்

யானை பிச்சை எடுக்கிறது, மனிதனுக்குச் சோறு போடுகிறது. சர்க்கஸில் கரடி சைக்கிள் விடுகிறது. புலிகள், ஸ்டூலில் ஏறி அமர்கின்றன. கிளி, மனிதனின் வாழ்க்கையைச் சொல்கிறது. குரங்குகள் லங்கையைத் தாண்டுகின்றன. ஒருவன் மலைப் பாம்பை உடம்பில் சுற்றிக்கொண்டு கை ஏந்துகிறான். மாடுகள் போஸ்டர் தின்று பால் கரக்கின்றன.

கதை மழை

 மனிதன், விலங்குகளை அடிமை கொண்டபோது, மனிதத் தன்மையை இழந்தான். அதன் பிறகே, மனிதனை அடிமைப்படுத்தக் கற்றுக்கொண்டான். பணக்காரன் - ஏழை, முதலாளி - தொழிலாளி போன்ற இருவேறு உலகம், தமிழர் அறிந்தவைதான். வெள்ளைக்காரர்கள் வந்து, 'அரசாங்க அலுவல்’ என்கிற புதிய அடிமைத்தனத்தை அறிமுகம்செய்து அதை ஒரு நிறுவனம் ஆக்கி, புதிய நடுத்தர வர்க்கத்தை உருவாக்கினார்கள். தமிழர்கள் மத்தியில், ஒரு புதிய பழமொழியே உருவாயிற்று. 'ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க’ என்பதே அது. தமிழர்களின் - புதிய 'ஆபீஸ்’ வேலையாட்களின் கனவே தாசி உத்தியோகமாயிற்று. இந்தப் புதிய வர்க்கத்தின் ரத்தத்தில் 'பயம்’ என்ற ஆதி உணர்வே ஓடத் தொடங்கியது. எப்போது 'துரை’ சிரிப்பார். எப்போது கோபிப்பார். எப்போது சீட்டு கிழியும் என்றே அவர்கள் அஞ்சி அஞ்சி செத்தார்கள்.

இந்த வர்க்கத்தின் உலக மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் இரண்டு பேரைக் கதைகளின் மூலம் சந்திப்போம். மனிதர்களின் அனைத்து வாழ்க்கை இருப்புகளையும் கதைகள் சித்திரித்துள்ளன என்பதே எழுத்தின் பெருமை.

அச்சுமேலவ் ஒரு கீழ்நிலை குமாஸ்தா.  அவன் ஒரு நாள் மாலை, நாடகம் பார்க்கப் போனான். பெரிய மனிதர்கள் வருகை தரும் நாடக அரங்கு அது. முன் வரிசைக்குப் பின்னால், இரண்டாம் வரிசையிலேயே அவனுக்கு இடம் கிடைத்துவிட்டது. நாடகம் தொடங்கியது. அவன் நாடகத்தில் லயித்துப் போனான். திடீரென்று ஓர் அசம்பாவிதம். அவனுக்குத் தும்மல் வந்துவிட்டது. தும்மல் வந்தால் யாரும் விறைப்பாக உட்கார்ந்து தும்முவது இல்லை. லேசாக முன்னால் குனிந்து 'அச்சுக்’ என்று இரண்டு முறை தும்மினான். முன்னால் குனிந்தவன், முன் வரிசையில் அவனுக்கு நேராக உட்கார்ந்தவர் மீது தன் தும்மலைப் படரவிட்டிருக்க வேண்டும். தும்மலின் நுண்ணிய நீர்ப் பிரயோகம் அவர் மேல் பட்டுவிட்டது போலும். அந்த மனிதர் சற்றே லேசாகத் திரும்பி அவன் முகத்தைக்கூட முழுமையாகப் பார்க்காமல் என்ன சத்தம் என்பதுபோல், நாடகத்தைக் கவனிக்கலானார்.

நம் அச்சுமேலவுக்குப் 'பகீர்’ என்றது.

அவனுக்கு முன் உட்கார்ந்தவர் - அவன் யார்மேல் தும்மினானோ அந்த மனிதர் - அவனுடைய மேல் அதிகாரி. பெரிய அதிகாரி. என்ன அசம்பாவிதம். அதிகாரி மேலேயா தும்மினேன். ஐயோ!

அவன் நாடகம் பார்த்தான். மனசுக்குள் நாடகம் புகவில்லை. அதிகாரி மேல் தும்மிவிட்டு நாடகம் பார்க்கிறாயா, முட்டாளே என்று, தானே தன்னை வைது கொண்டான். அதிகாரி பக்கம் குனிந்து, அவர் காதோரம் 'எக்ஸ்கியூஸ் மீ சார்’ என்றான். 'என்ன’ என்று அதிகாரி திரும்பினார்.

'தும்மல் என்கிறது, ரொம்ப இயற்கையான சமாசாரம் சார். தாங்கள் என்று தெரிந்திருந்தால் இடது பக்கம் திரும்பி தும்மி இருப்பேன்... மன்னிக்கவும் சார்’ என்றான், பூமி அளவுக்குத் தாழ்மையான குரலில்.

'இட்ஸ் ஆல் ரைட்’ என்று சொல்லிவிட்டு அதிகாரி நாடகம் பக்கம் பார்வையைத் திருப்பினார்.

அவர் சொன்னவிதம், சரியாக இல்லையே என்று இவன் நினைத்துக்கொண்டான். முகத்தில் புன்சிரிப்பு?... நட்பான பாவனை?... எதுவும் இல்லை. அந்தக் குரலில் கொஞ்சம் கடுமையும் இருப்பதுபோல் தோன்றியது.  ஒரு குமாஸ்தா பொது இடத்தில் தும்முவதே தவறு. அதுவும் அதிகாரியின் தோள்புரத்தில்.

அவனால் நாடகம் பார்க்க முடியவில்லை. சற்றுநேரம் கழித்து, அவர் தோள்பக்கம் குனிந்து, தன் கைக்குட்டையால் அவர் தோளைத் துடைத்தான். அதிகாரி திரும்பி, 'என்ன செய்கிறாய்’ என்றார்.

'எக்ஸ்கியூஸ் மீ சார்... தும்மல் என்கிறது, ரொம்ப இயற்கையான சமாசாரம் சார். பருவநிலை ரொம்ப மோசம் சார். அதான்.’

'சூ... நாடகம் பார்க்கவிடு என்னை’ என்றபடி விருட்டென்று திரும்பிக்கொண்டார் அதிகாரி.

நிச்சயம் கோபம்தான். அதிகாரிக்குக் கோபம் வரச் செய்து விட்டேனே. அவன் நிலைகுலைந்து போனான். முள்மேல் உட்கார்ந்திருந்தான். என்ன மடத்தனம். இந்த இடத்திலா தும்மல் வரவேண்டும்.

நாளைக்கு அவன் சீட்டு கிழியப் போகிறது. அவனும் அவன் குடும்பமும் நடுத் தெருவில் நிற்கப் போகிறது. கடவுளே...

இடைவேளை விட்டார்கள். அதிகாரி வெளியே சென்று, காபி கப்பை வாங்கிக்கொண்டு தனிமையான ஓரிடம் நின்று அருந்தத் தொடங்கினார். ஆகாயத்தைப் பார்த்தபடி, நின்றவரின் தோள்பட்டைப் பக்கம் நெருங்கி நின்று, 'எக்ஸ்கியூஸ் மீ சார்’ என்றான் நம்மாள். அதிர்ச்சி அடைந்த அதிகாரி காபியைச் சிந்திவிட்டார். காபிக் கோப்பை கீழே விழாதது அதிர்ஷ்டம்தான்.

'என்னய்யா?’

'தும்மல் என்கிறது, ரொம்ப இயற்கையான சமாசாரம் சார். முன்னால் இருப்பவரின் மரியாதை தெரியாமல் அது வந்துவிடுகிறது, சனியன்.’

'போ.... இங்கேந்து... போறீயா?’

அதிகாரி, நாடகம் முடிந்து வண்டிக்குத் திரும்பினார். அவன், சக்கரத்தின் பக்கம் பதுங்கி நின்றான். நிழலாடுவதைக் கண்டு திடுக்கிட்ட அதிகாரி 'யாரது?’ என்றார்.

'சார்... தும்மல் என்கிறது...’

'நிறுத்து. பைத்தியமா நீ? முட்டாள், முட்டாள். தொலைந்து போ... என் எதிரே வராதே...’

நடைப்பிணமாக வீடு வந்து சேர்ந்தான். படுத்தான். உறக்கம் வரவில்லை. கதிகலங்கிப் போய் இருந்தான் அவன். இனியும் முடியாது. அதிகாரி வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டான். மணி 3.15

குளிர் உடம்பைச் சுருட்டியது. பனிச்சாரல் வேறு. அதிகாரி வீட்டு அழைப்பு மணிக் கயிறை இழுத்து அடித்தான். மணிச்சத்தம் கேட்டு எழுந்த அதிகாரி சுவர்கடிகாரத்தைப் பார்த்தார். மணி 3.45. இந்த நேரத்தில் அவரை எழுப்பும் தகுதி உள்ளவர் கவர்னராகத்தான் இருக்க முடியும். அவருக்கு முன் இரவு உடையிலா போவது? தன் உத்தியோக யூனிபார்மை அணிந்து கொண்டு, தொப்பி, துப்பாக்கி சகிதம், இருட்டில் தட்டுத்தடுமாறி படி இறங்கி வந்து கதவைத் திறந்து 'கவர்னருக்கு’ சல்யூட் வைத்துக்கொண்டு நின்றார். எதிரில் நிற்பவர் கவர்னர் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள சற்றுநேரம் பிடித்தது. காதலிக்குப் பூ கொடுப்பதுபோலக் குனிந்து வளைந்து குமாஸ்தா மரியாதையைச் சொன்னான்.

'சார்... தும்மல் என்கிறது இயற்கை சமாசாரம்... அது திட்டமிட்டு...’

அதிகாரி கர்ஜித்தார். 'இது என்ன?’

'து...ப்..பா...க்...கி சா...ர்’

கதை மழை

'உன்னை எங்கே எப்போ பார்த்தாலும் இதைப் பயன்படுத்தாமல் இருக்க மாட்டேன்...’

மிகுந்த சோகத்துடன் குமாஸ்தா திரும்பி வந்து தன் படுக்கையில் படுத்தான். மறுநாள் அவன் மனைவி வந்து பார்த்தபோது அவன் படுக்கையிலேயே செத்துக் கிடந்தான்.

ஆன்டன் செகாவின் 'ஒரு குமாஸ்தாவின் மரணம்’ என்ற ரஷ்ய மொழிக் கதைக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் நான் கொடுத்த நாடக வடிவம் இது. இந்தக் கதையைச் செகாவ், 1800-களின் கடைசிப் பகுதியில் எழுதினார். ரஷ்ய சமூகம் இதைப் படித்து, இப்படியா நம் சக மனிதர்கள் அஞ்சி அஞ்சி அதிகார வர்க்கத்திடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் என்று கோபம் கொண்டது. இதுபோன்ற பல்வேறு சமூகக் கோபங்கள்தான் 1917-ல் ரஷ்யாவில் புரட்சிக்குக் காரணமாயின.

அடிமைத்தனத்தை அலுவலக நடைமுறை​​யாக்கி நிறுவனப்படுத்தினார்கள் ஆங்கிலேயர்கள். தமிழக இந்திய எழுத்தர்கள் ஒரு காலத்தில் மோசமாக வைக்கப்பட்டிருந்தது உண்மைதான். நிலைமை மாறி இருக்கிறது. 'மனிதனாக நடந்து, மனிதனாக இரு’ என்று சகஜமாக இணைந்து நியாயம் கோருகிறார்கள் இன்றைய எழுத்தர்கள். சுதந்திரம், போராடுகிறவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஆகவே அதை அவர்கள் பெறுகிறார்கள்.

ரொம்ப வித்தியாசமான ஒரு பியூனை நண்பர் ஜெயந்தன் படைத்திருக்கிறார். முனியசாமி என்பது கதைப் பெயர்.

தட்டுத் தடுமாறித் தாசில் ஆகிறார் குமரய்யா. அவருடைய பியூன் முனியசாமி. தாசில்தாரின் தேவைகளை அவர் சிந்திப்பதற்கு முன்னாலே உணர்ந்து செயல்படுத்திவிடுவார். அப்படி ஒரு 'சின்சியாரிட்டி’ விசுவாசம். ஒருமுறை மழை காரணமாக விறகு கிடைக்காமல் முனியசாமி எங்கிருந்தோ காய்ந்த விறகு சம்பாதித்து வந்தவர். மழையில் நனைந்ததால் நாலு நாள் சுரத்தில் படுத்துவிட்டார். தாசில்தார் நெகிழ்ந்து போனார். 'இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்தேன்’ என்கிற பிரேமையே முனியசாமி மேல் தாசிலுக்கு.

தாசில்தார் மாற்றப்பட்டார். விடைபெறு விழா நடந்து முடிந்தது. புதிய தாசில்தார் வந்துவிட்டார். பழையவர் விடைபெறும்போது தன் பியூன் முனியசாமிக்கு பகிரங்கமாக நன்றி சொன்னார். இப்போது தலையில் படுக்கை, கையில் பெட்டியோடு தாசில்தார் பின்னால் நடந்து போனார் முனியசாமி. கார் டிக்கியைத் திறந்திருந்தார் டிரைவர். நாலடி நடந்தால், முனியசாமியின் சுமை டிக்கிக்குள் போகும். பழைய தாசில்தாருக்குக் கை குலுக்கிவிட்டுத் தன் இருக்கைக்குச் சென்ற புதிய தாசில்தார், ஏதோ தேவைக்கு 'பெல்லை’ அடித்தார். தன்னை அறியாமல், 'வந்துட்டேன் சார்’ என்றார் முனியசாமி. ஓர் அடி தூரத்தில் இருந்த காரை மறந்தார். தலைச்சுமையை அப்படியே போட்டார். கைப் பெட்டியையும் கீழே போட்டார். புதிய தாசில்தாரைப் பார்க்க ஓடினார். திகைத்துப் போய் நின்றார் பழைய தாசில்தார் குமரய்யா.

மாடுகள், தமக்குக் கொம்பிருப்பதை மறந்து பல ஆயிரம் ஆண்டுகளாயின. மனிதர்கள் தாங்கள் மனிதர்கள் என்பதை ஓட்டுப் போடும்போது  மட்டுமே புரிந்துகொள்வார்கள்.