Published:Updated:

கதை மழை

பிரபஞ்சன்

மூன்று திருடர்கள்

திருடனாக வாழ்வது அப்படியொன்றும் சாதாரண விஷயமில்லை. ஆபீஸ் போவது, கடையில் பொட்டலம் மடிப்பது போன்றதல்ல திருடுவது. திருடர்களை, மக்கள் ரசிக்கிறார்கள். அவர்களைப் பற்றிய செய்திகள் சுவாரசியமாக இருக்கின்றன. உலகம் முழுதும் வாய்மொழியிலும் எழுத்து மொழியிலும் திருடர்கள் பற்றியும் திருட்டுத்தனம் பற்றியும் ஆன கதைகளே மிக அதிகமாக இருக்கின்றன. திருட்டில் பறி கொடுத்தவர்கள் தவிர, மற்றவர்கள் திருடர்களை ரசிக்கக் காரணம், திருட்டுச் செயல்பாட்டில் இருக்கும் சாகசம்தான். பல திருடர்கள், சாகசம் நிகழ்த்தியே தங்கள் திருப்பணியைத் தொடங்கி இருக்கிறார்கள்.

கேரளத்துக் கொல்லம் பகுதியில் பிறந்த, மணியன் பிள்ளையின் சுயசரிதையைப் படித்தேன். மலையாளப் பத்திரிகையாளர் இந்துகோபன், திருடன் மணியன் பிள்ளையின் வாய்மொழியாகவே மிகுந்த மனநேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார். தமிழில் குளச்சல் யூசுப் மொழியாக்கம். ('காலச்சுவடு’ வெளியீடு!) மணியன் பிள்ளைக்கு இப்போது வயது 64.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஓர் இடத்தில் சில நகைகளையும் ஒரு சிட்டிசன் வாட்சையும் திருடி இருக்கிறார். போலீஸ் பிடித்துவிட்டது. வழக்கு கோர்ட்டுக்குப் போயிற்று. இப்போது மணியன், சட்ட நுணுக்கங்களில் தேர்ந்துவிட்டார். அவரே, அவர் வழக்குகளை வாதிடுகிறார்.

கதை மழை

மணியன் பிள்ளை வாதிடுகிறார் என்றால், சீனியர்கள் தங்கள் ஜூனியர் வக்கீல்களிடம், விசாரணை 'மெத்தடை’ கவனிங்கப்பா என்பார்கள். அந்த சிட்டிசன் வாட்ச் ஒரு சிறுமியுடையது. அந்தச் சிறுமி 'இது என்னோடது’ என்கிறாள். மணியன், குறுக்கு விசாரணை செய்கிறார்.

'இது உன்னோட வாட்சுதான் என்கிறதை உன்னால் எப்படி உறுதியாகச் சொல்ல முடியும். ஆதாரம் ஏதாவது இருக்கா?’

'பார்த்தாலே தெரியும்’ என்கிறாள் சிறுமி.

'ஒவ்வொரு வாட்சுக்கும் ஒரு நம்பர் இருக்குத் தெரியுமா?’

'தெரியாது’

'பில் இருக்கா’

'இல்லை’

'சிட்டிசன் கம்பெனிக்காரன் இதுவரைக்கும் ஒரே ஒரு வாட்ச்தான் தயாரிச்சு இருக்கான்னு நினைக்கிறே.’

அந்தச் சிறுமி அழுதுவிட்டாள். அந்த அழுகை, மணியனை உருக்கிவிட்டது. அன்றைக்கு அவர் உறங்கவில்லை. அந்தச் சிறுமிக்குக் கடிதம் எழுதுகிறார். ''மகளே, மாமா இனிமே உன்னைக் கோர்ட்டுக்கு இழுக்க மாட்டேன். மகள் இனிமேல் கோர்ட்டில் வந்து அழ வேண்டி இருக்காது. அப்படி நடந்து போனதற்காக இந்த மாமாவை மன்னித்துவிடு. உன் வாட்ச் உன்னிடமே வந்து சேர்ந்துவிடும்.''

குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைக்குப் போகிறார் மணியன். அவர் தன் திருட்டு வாழ்க்கையை நியாயப்படுத்தவில்லை. ஒரு ஞானியின் வரலாறுபோல, ஒரு முழுத் திருட்டு வாழ்க்கை நமக்குச் சொல்ல ஏராளமான சங்கதிகளைத் தனக்குள் வைத்திருக்கிறது.

அண்மையில் என் வாசிப்பில் ஓர் அசாத்தியமான திருடனைச் சந்தித்தேன். திருடுவதில் எந்தவிதமான குற்ற மனோபாவமும் அவனுக்கு இல்லை.

அவன் ஒரு புதிய கார் வாங்குகிறான். வேகமாக அதைச் செலுத்திக்கொண்டு போகிறான். வழியில் ஒருவன் அவனிடம் லிஃப்ட் கேட்கிறான். இவன் ஏற்றிக் கொள்கிறான்.

'லண்டனுக்கா’ என்கிறான் வந்தவன். ஆம் என்றவன், 'நீ எங்கே போகிறாய்’ என்கிறான். 'எட்சனில் நடக்கும் குதிரைப் பந்தயத்துக்கு என்கிறான்’ வந்தவன். அவன், தனக்கும் 'குதிரைப் பந்தயம் பிடிக்கும்’ என்கிறான்.

'நான் குதிரை மேல் பந்தயம் கட்டுவது இல்லை. அது வருவதைக்கூட நான் பார்க்க மாட்டேன். அது முட்டாள்தனமான விஷயம்.’

'அப்புறம் எதற்குப் பந்தயத்துக்குப் போகிறாய்?’

வந்தவன் அமைதியாக இருந்தான். அதிவேகமாக கார் சென்று கொண்டு இருக்கிறது. இதைக் கவனித்த போலீஸ்காரன் இவர்களை மடக்கிவிட்டான். கார் விவரங்களையும் இருவரது அடையாளங்களையும் போலீஸ்காரன் குறித்துக் கொண்டு அனுப்பிவிட்டான்.

கார்காரனும் இவனும் பயணத்தைத் தொடர்ந்தார்கள். லிஃப்ட் கேட்டு வந்தவன், புகையிலை டின்னையும் சிகரெட் தாள்களையும் எடுத்து கண நேரத்தில் சிகரெட்டைச் சுற்றிப் புகைக்கத் தொடங்கினான்.

'இவ்வளவு வேகமாக யாரும் சிகரெட்டைச் சுற்றி நான் பார்த்ததில்லை’ என்று கார்காரன் ஆச்சர்யப்பட்டான்.  'என்னிடம் அற்புத விரல்கள் இருக்கின்றன’ என்று பதில் சொன்னான் அவன். சிறிது நேரம் கழித்து ஒரு கறுப்பு நிற லெதர் பெல்ட்டை எடுத்து 'இதை ஏற்கெனவே பார்த்திருக்கிறீர்களா’ என்றும் அவன் கேட்டான்.

'ஏய்! இது என்னுடையது. உனக்கு எங்கே கிடைத்தது’ என்று திகைத்தபடி கேட்டான் கார் ஓட்டுபவன்.

'உங்கள் பேன்ட்டிலிருந்து.’

'அது சாத்தியப்படாது. பக்கலை தளர்த்தி லூப்களை கடந்து பெல்டை உருவி இருக்கவே முடியாது.’

'அப்படியா’ என்றவன், ஒரு ஷூ லேசை எடுத்துக் காட்டினான்.

அதுவும் கார் ஓட்டுபவனுடையதுதான்.

'சரியான கில்லாடிதான் நீ... எப்படி எடுத்தாய்... நீ குனிந்ததை நான் பார்க்கவில்லையே’ என்றான்.  கார் ஓட்டுபவன், நேரம் அறிந்துகொள்ள, வாட்சைப் பார்த்தான். அது வந்தவன் கையில் இருந்தது.

'நான் உங்களிடம் இருந்து எதையும் கொண்டு போக மாட்டேன். நீங்கள் என் நண்பர். எனக்கு லிஃப்ட் கொடுத்திருக்கிறீர்கள்’ என்றான் வந்தவன்.

அவன் தனது பாக்கெட்டுக்குள் கையை விட்டான். கார்காரனின் ஓட்டுநர் உரிமம், சாவிக் கொத்து, சில பவுண்டுகள், டைரி, பழைய பென்சில், சிகரெட் லைட்டர், அழகான மோதிரம்... எல்லாவற்றையும் எடுத்து வெளியே போட்டான்.

'நீ பிக்பாக்கெட்டா?’

'எனக்கு அந்த வார்த்தைப் பிடிக்காது. பிக்பாக்கெட் என்பவர்கள், சின்னச் சின்ன திருட்டை செய்பவர்கள். கண் தெரியாதவர்கள் மற்றும் வயதான பெண்களிடம் திருடுபவர்கள். அவர்கள் கீழ்த்தரமானவர்கள்.’

'உன் தொழிலுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறாய்’

'நான் ஒரு விரல் வித்தகன். தொழில்முறை விரல் வித்தகன்’ என்றான். தான் ஒரு ராயல் காலேஜ் தலைவர் என்றோ அல்லது கான்டர் பெரியின் பிஷப் என்றோ அறிமுகம் செய்துகொள்ளும் தொனியில் இருந்தது அவன் பேச்சு.

'அதனால்தான் நீ ரேஸுக்குப் போகிறாயா.’

'பந்தயத்தில் வென்ற அதிர்ஷ்டசாலிகளிடமிருந்து என் கைக்குப் பணத்தை மாற்றப் போகிறேன். தோற்றவர்களிடமும், ஏழைகளிடமும் என் கைவரிசையைக் காட்ட மாட்டேன்’

'இன்னும் மாட்டவில்லையா?’

'பிக்பாக்கெட்டுகள் மாட்டுவார்கள். நான் விரல் வித்தகன்.’

'போலீஸ்காரன், உன் பெயர் முகவரியையும் குறித்துக்கொண்டானே?’

'போலீஸ்காரன் அந்த நோட்டுகளைத் தொலைத்து விட்டான்.’ என்றபடி அந்த இரண்டு நோட்டையும் வெளியே எடுத்தான்.

''நான் செய்ததில் சுலபமான வேலை இதுதான்.’

'நீ ஒரு ஜீனியஸ்’ என்றார் கார்காரன்.

இந்தக் கதையை ஆங்கிலத்தில் எழுதியவர், புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் (1916-1990) ரோல்ட் டால். தமிழில் அழகாக மொழிபெயர்த்தவர் பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்.

இளம் வயதில் படித்த சங்குத்தேவனை இன்னும் மறக்கவில்லை. அவனும் திருடன்தான்.

முறுக்குப் பாட்டி முத்தாச்சி மகளுக்கு நாளை காலை கல்யாணம். சாயங்காலம் வரை தங்கவேல் ஆசாரி வீட்டில் உட்கார்ந்திருக்கிறாள். பாட்டியின் பாம்படத்துக்கு மெருகிட்டுக் கொண்டிருந்தார் ஆசாரி. கைலாசபுரத்துக்கு பாட்டி நடந்து போய்ச் சேர வேண்டும். ஆசாரி, நேரத்தை இழுத்துவிட்டார்.

'காலம் கெட்டுப் போச்சி... ஊருல களவும் இளவுமா இருக்கே. நம்ம மேலப்பண்ணை வீட்டுல ரெண்டாயிரம் களவாம். காசுக்கடை செட்டியாரு பத்தமடைக்குப் போயிட்டு பட்டியை முடிஞ்சுகிட்டு வர்றார். விடியராப்பில பஞ்ச தட்டிப் பறிச்சுட்டான்’ என்கிறார் ஆசாரி.

'இம்பிட்டுஞ் சேசுபிட்டுப் போனானே அவனாரு?’ என்றாள் கிழவி.’

'அவன்தான் நம்ம சங்குத்தேவன்...’

நகைகளை முடிந்து கொண்டு பாட்டி புறப்பட்டாள். இரவு துரிதமாக வந்தது. மரங்கள் அடர்ந்து நெருங்கிய காட்டுப் பாதை. தன் கை தெரியாத கும்மிருட்டு. கிழவி பயந்தவள் இல்லை. ஆனால் இன்று, ஒவ்வொரு மரத்தடியிலும் சங்குத்தேவன்..!

அவளுக்கும் முன், ஓர் இருண்ட கரிய உருவம். கிழவி, நடுங்கிவிட்டாள். சங்குத்தேவனா? தன் பாதையில் முன்னால் போகும் அந்த உருவமும் தன்னைப் போன்ற பாதசாரி என்று நினைத்தாள். 'ஐயா ஐயா’ என்று கூவினாள். தலையில் முண்டாசு. நீண்ட கிருதா. வரிந்து கட்டின அரை வேஷ்டி. திடகாத்திரமான சரீரம். அக்குளில் ஒரு குதுந்தடி. இருவரும் சேர்ந்து நடந்தார்கள். விசாரிப்புகள் நடந்தன. கிழவி தன் மகளுக்குக் கல்யாணம் என்கிறாள். பிறகு அவர்கள் பேசாமல் நடந்தார்கள்.

கிழவி, 'அதோ கோயில் தெரியுது. நான் இனிமே போய்க்கிடுவேன்’ என்கிறாள்.

'ஏ... ஆச்சி. நில்லு ஒரு சமுசாரம். நீ ஏழைதானே! இன்னா, இதை வச்சுக்க. முதல் பேரனுக்கு என் பேரிடு’

''மகராசரா இருக்கணும். என்ன பேரு இட’

'சங்குத்தேவருன்னு’

பணம் பொத்தென்று விழுந்தது. அவன் அதை எடுத்துக் கொடுத்து அனுப்பி வைக்கிறான்.

புதுமைப்பித்தன் 1934-ல் எழுதிய கதை.

திருடர்கள் பிறக்கிறார்களா, என்ன? அல்ல ஆக்கப்படுகிறார்கள்! திருடர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தது இல்லை. எழுத்துக்கு மனிதர் மேல் சமூகம் ஒட்டிய முத்திரைகள் பற்றி அக்கறை இல்லை. மனிதாம்சம் பற்றியே அக்கறை.

இருட்டு ஒரு ஜென்குரு. குடிசைக்குள் திருடன் புகுந்து தேடத் தொடங்கினான். விழித்துக்கொண்ட குரு கேட்டார்.

'பகல் முழுதும் எனக்குக் கிடைக்காத எது, உனக்கு இருட்டில் கிடைக்கப் போகிறது?’

- மழை பொழியும்