Published:Updated:

’ஓட்டுநர் உரிமம் குறித்த உத்தரவை திரும்பப் பெறுக!’: வலியுறுத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

’ஓட்டுநர் உரிமம் குறித்த உத்தரவை திரும்பப் பெறுக!’: வலியுறுத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
’ஓட்டுநர் உரிமம் குறித்த உத்தரவை திரும்பப் பெறுக!’: வலியுறுத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

’ஓட்டுநர் உரிமம் குறித்த உத்தரவை திரும்பப் பெறுக!’: வலியுறுத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

வாகன ஓட்டுநர் உரிமம் குறித்து வெளியிடப்பட்டுள்ள உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 130-ன் படி பொது இடத்தில் சீருடையிலுள்ள எந்த ஒரு காவல்துறை அதிகாரியும் வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தைக் கோரும்போது அக்காவல் அதிகாரியின் ஆய்வுக்கு அவர்களது ஓட்டுநர் உரிமத்தை உட்படுத்த வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 181-ன் படி உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவருக்கு 3 மாத சிறைத் தண்டனை அல்லது 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கலாம். மேலும், 2017, செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகனங்களை ஓட்டும்போது அனைத்து ஓட்டுநர்களும் அசல் ஓட்டுநர் உரிமத்தை தங்கள் வசம் வைத்திருக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டுநர் உரிமம் குறித்து வெளியிடப்பட்டுள்ள உத்தரவை அரசு திரும்பப்பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக அரசின் இந்த அறிவிப்பு வாகனம் ஓட்டும் உரிமம் பெற்றுள்ள பல லட்சம் மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள கடுமையான தாக்குதலாகும். வாகனம் ஓட்டி பிழைக்கும் தொழிலாளர்கள், வேலைக்கு செல்பவர்கள்,  சொந்தமாக தொழில்செய்பவர்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து தொழிலில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்கள் என அனைத்துப் பகுதியினரையும் அச்சுறுத்தி வாழ்வுரிமையை பறிக்கும் ஜனநாயக விரோத செயலாகும். தொழிலையும், தொழிலாளர்களையும், வேலைக்குச் செல்பவர்களையும் பாதிக்கும் தமிழக அரசின் இந்த அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

அசல் ஓட்டுநர் உரிமத்தை எப்போதும் கையில் வைத்திருப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. தொலைந்து போனாலோ, மழை போன்ற காரணங்களால் சேதமடைந்தாலோ மீண்டும் அசல் உரிமம் பெறுவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாத கால அவகாசம் தேவைப்படுகிறது. தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஓட்டுநர்கள் தங்கள் அசல் உரிமத்தை பணியிடங்களில் ஒப்படைத்த பின்னரே பணியில் சேர முடியும் என்ற நிலை உள்ளது.

விதிமீறல் அல்லது சோதனை என்ற பெயரால் இப்போதே வாகனங்களை மறித்து, சாவியை பிடுங்கி ஓட்டுநர்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் நடைமுறை பரவலாக உள்ளது.  காவல்துறையின் இதுபோன்ற செயல்பாடுகள் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளின் உயிரையும் பறித்துள்ளது. அரசின் தற்போதைய உத்தரவால் காவல்துறையின் அத்துமீறல் நடவடிக்கைகள் அதிகரிக்கும். அசல் உரிமத்தை பறித்து ஓட்டுநர்களை அச்சுறுத்தி பணம் பறிக்கவும், பழிவாங்கவும், லஞ்சம் - ஊழல் மற்றும் முறைகேடுகள் அதிகரிக்கவுமே உதவிடும். எனவே, அசல் ஓட்டுநர் உரிமம் குறித்த அரசின் உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டுமெனவும், தற்போது காவல்துறையினரின் சோதனையின்போது நகல் உரிமத்தை காண்பிக்கும் நடைமுறையே தொடர வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு