Published:Updated:

கதை மழை

ஒரு ரசிகர் ஒரு ரசிகை!

கதை மழை

ழுங்குபடுத்தப்பட்ட சப்தங்களையே நாம் இசை என்கிறோம். சிலவகை சப்தங்கள் காது வழி புகுந்து மனசுக்கு இன்பம் தந்தன, ஆதி மனிதர்களுக்கு. அவர்கள் பிறந்தது முதல் கேட்டுக்கொண்டு வந்த பறவைகள், விலங்குகள் சப்தங்கள் பரிச்சயமாகி இருந்தன. அந்தச் சப்தங்களையும் சப்தங்களை நோக்கிய பயணத்திலும் புதிய புதிய சப்தங்களை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அவை இசை என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு அவை மகிழ்ச்சி தந்தன. பின்னால் வந்தவர்கள், அந்தச் சப்தங்கள் நேரடியாகவும் காம்போதியாகவும் சங்கராபரணமாகவும் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார்கள். தொண்டையிலும், குழலிலும், கம்பிகளிலும் அந்த ஓசையை எழுப்பிக் காட்ட முடியும் என்பதை நிரூபணம் செய்தார்கள். இசை பிறந்துவிட்டது.

கர்நாடக சங்கீதம் என்ற பல நூறு இசை வடிவமான ஒரு வகைக்கு ஆசிரியர் கல்கி, மகத்தான பணி செய்திருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கதை மழை

ராஜாஜிக்கு வேண்டப்பட்ட சங்கீத அபிமானி ஒருவருக்காகச் சிறந்த சங்கீத பிளேட்டுகளைத் (கிராம போன் பிளேட்டுகளை) தேர்ந்தெடுக்கும் பணி கல்கிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கல்கி, கடை கடையாய் அலைந்து, சிறந்ததில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். கல்கி, அந்தப் பட்டியலை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். பட்டியலில் பலவற்றை நான் கேட்டிருக்கிறேன். ஆர்வமுள்ள ரசிகர்கள் கேட்டுப் பார்க்கலாம். சில, சிடி, எம்.பி.3 ஆகவும் வந்திருக்கலாம். அருமையான இசை அனுபவமாக இருக்கும். வாய்ப்பாட்டு: அரியக்குடி, முசிறி, வீணை: தேச மங்கலம் சுப்பிரமணிய ஐயர், பிடில்: மருங்காபுரி கோபால கிருஷ்ண ஐயர், மைசூர் சௌடய்யா. கோட் வாத்தியத்துக்கு நாராயண அய்யங்கார். நாதஸ்வரம்: மதுரை பொன்னுசாமிப் பிள்ளை, ராஜரத்தினம் பிள்ளை.

சங்கீதம், நடனம் பற்றி நான்கு புத்தகங்கள், கல்கி எழுதியவை, 'வானதி’யால் நூலாக்கம் பெற்றுள்ளன. சங்கீத மரபு பற்றிய விமர்சன மனப்பான்மை வளர, கல்கியின் புத்தகம் தவிர வேறு வழி இல்லை.

சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்ட இரண்டு முக்கிய நாவல்கள் தமிழில் இருக்கின்றன. ஒன்று ந.சிதம்பர சுப்பிரமணியம் எழுதிய 'இதய நாதம்.’ மற்றது, புகழ்பெற்ற தி.ஜானகிராமனின் 'மோகமுள்.’

சிதம்பர சுப்பிரமணியத்தின் இதயநாதம், சங்கீதத்தை வேறு தளத்துக்குக் கொண்டுபோன நாவல். கிருஷ்ணன், பெரிய சங்கீதக்காரன். சங்கீதத்தைத் தவமாக அட்பியாசம் செய்கிறவன். அவனை நாடி ஒரு பெண்மணி இசை கற்க வருகிறாள். இசையின் மேல் அவனுடைய ஈர்ப்பு, மெல்லமெல்ல கிருஷ்ணன் மேலான ஈர்ப்பாக மாறுகிறது. இதை அறிய நேர்ந்த கிருஷ்ணன், 'என் சங்கீதம், கேவலம் மனித இச்சையைத்தான் ஏற்படுத்தியது என்றால், இனி நான் வாய் திறந்து பாடுவது, வியர்த்தம்’ என்று பாடுவதையே நிறுத்திவிடுகிறான். ஆனால், நாதம் அவனைவிட முடியாது. அவன் தனக்குள் நாத உபாசனை பெய்யத் தொடங்குகிறான். சங்கீதம் என்பதை, மகிழ்ச்சி சாதனமாக, இச்சைக்குரிய பொருளாக வைத்து இருப்பதை சிதம்பர சுப்பிரமணியம் விரும்பவில்லை. அது மேலான விஷயம் அவருக்கு. இறைவனோடு ஒன்றும் தொடர்பு சாதனம் இசை.

சங்கீதத்தை எழுதிக் காட்டுவது, சுலபமான விஷயம் இல்லை. சங்கீதம் அரூபக் கலை. ஓசை மாத்திரத்தால் இயங்குவது. தி.ஜானகிராமனுக்கு அந்தத் திறமை முழுதாக வாய்த்திருக்கிறது. அவரது 'மோகமுள்’ நாவல் பாபு, யமுனா என இரண்டு பேரை மையம்கொண்டு 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி தஞ்சாவூர் வாழ்க்கை முறையை, கலைஞர்களை, மிராசுதார்கள் எனப்பட்ட பொறுப்பற்ற மனிதர்களைச் சுற்றிப் படரும் கதை. இதை பாபு, யமுனா காதல் கதையாகப் பார்ப்பதும் அந்த மாதிரி விமர்சிப்பதுமான போக்கு வளர்ந்திருக்கிறது. எனக்கு 'மோகமுள்’ காதல் கதையாகத் தோன்றவில்லை. ஒரு சங்கீதக்காரனுக்கு ஏற்பட்ட காதல் இது. பாபுவுக்கு வாய்த்த குரு, ஒரு லட்சியப் பாத்திரம். வைரமோதிரம், பட்டு வேஷ்டி அணிந்த பல வித்வான்கள் அந்தக் குருவின் பெயர் கேட்ட மாத்திரத்தில் மேல் துண்டை எடுத்துக் கொள்வார்கள். என்றாலும் குரு, சங்கீதத்தைத் தூண்டிலாக்கி சௌகர்யங்களைப் பிடிக்க அலைபவர் இல்லை. சங்கீதம் ஒரு சமுத்திரம். அதில், நான் பாதங்களைக்கூட முழுமையாக நனைக்கவில்லை என்பவர். அந்த மேதையால் பழக்கி உருவாக்கப்படுகிறான் பாபு. மேலும் மேலும் கற்க வேண்டும் என்கிற தீயைத் தனக்குள் வளர்த்துக்கொண்டு, ஆசையை அந்தத் தீயாலேயே அழித்துக்கொண்டு வளர்ந்து கொண்டிருக்கிறான் பாபு. ஒரு வட நாட்டு வித்வான் பாடலைக் கேட்டு, அவர் குரல் வளத்தைக் கேட்டு வியந்துபோகிறான் அவன். குரல் பயிற்சியை முதல் முயற்சியாக மேற்கொள்ளும் வட மாநில இசைஞர்களையும் கிணற்றுக்குள் இருந்து 'பாடுகிற’ தென்னகப் பிரபலங்களையும் நினைத்துக்கொள்கிறான். சங்கீதத்தின் அகலத்தை அறிந்துகொள்ள வடநாட்டுக்குச் செல்ல முடிவெடுக்கிறான். உண்மையில் மோகமுள்ளை முதல் பாகமாகவே நினைத்து எழுதினார் ஜானகிராமன். இதன் இரண்டாவது பாகத்தை வட நாட்டில் கற்கும் பாபு... தென்னாடு திரும்பி வாழும் பாபு... என்று எழுத ஆசைப்படுவதாக அவர் தஞ்சை ப்ரகாஷ் முதலான இலக்கிய நண்பர்களுடன் சொல்லியது எனக்குத் தெரியும். அவர் அதை ஏனோ செய்யவில்லை. தமிழ் இசையின் துரதிருஷ்டம் அது.

தி.ஜானகிராமனின் தமிழின் சிறந்த சிறுகதை, கலைஞர் ஒருவரைப் பற்றிய கதையைக் காண்போம். சங்கீதத்தின் சிறப்பை நேராகச் சொல்லாமல், வேறு மாதிரி தொனியில், மிகவும் உக்ரமாகச் சொன்ன கதை. ரசிகரும் ரசிகையும் கலைஞர்கள் என்பவர்களின் சவடால்தனம், தாசித்தனம், அற்பத்தனம் எல்லாவற்றையும் தாட்சண்யம் இல்லாமல் சொன்ன கதை.

மார்க்கண்டம் சீனியர் வித்வான், திருவையாறு ஆராதனைக்குப் புறப்படுகிறார். மனைவியிடம் சொல்லி விடைபெறும் சூழலைத் தொட்டு தொடங்குகிறது கதை. அந்த மார்க்கண்ட வித்வானின் மனைவி நிறைமாத கர்ப்பிணி. அருணாசலம் என்கிறவனைத் துணைக்கு வைத்துவிட்டுச் செல்வதாகச் சொல்கிறார். அருணாசலம் இங்கிருந்தால் உங்கள் வெற்றிலைப் பெட்டியை யார் தூக்குவா, என்கிறாள் துணைவி. வெற்றிலைப் பெட்டியைத் தூக்குவதற்கு சிஷ்யன் மட்டும்தானா? எத்தனையோ கெசட்டட் ஆபீஸர் எல்லாம் காத்திட்டிருக்கான் என்கிறார் அவர்.

மார்க்கண்டம் தன்னைப் பற்றி வானத்துக்கு மேலான தலைக்கனம் உள்ளவராகவும் சித்திரித்து விடுகிறார் ஜானகிராமன்.

அடுத்த பகுதி ரயில் நிலைய நடைபாதையில் வைத்து நடக்கிறது. பெட்டிக்குள் அமர்ந்திருக்கும் மிருதங்கக்காரரைக் கீழே இறங்கித் தன்னுடன் வந்து நிற்கச் சொல்கிறார் மார்க்கண்டம்.

''எனக்கு இங்க இருந்தே தெரியுதே'' என்கிறார்.

''என்ன தெரியுது''

''உங்களை எல்லாச் சனங்களும் 'இந்தப் பார்றா மார்க்கண்டம், இந்தப் பார்றா மார்க்கண்டம்னு வேடிக்கை பார்த்துகிட்டு நிக்கிறது.''

''அட யமனே. நான் அதுக்காக நிக்கலையா.''

உண்மையில் தன்னை வேடிக்கை காட்டிக்கொண்டுதான் நின்றார் மார்க்கண்டம். அது மட்டுமல்ல, ஒரு பெண்ணையும் பார்த்துக்கொண்டு நின்றார். ஒரு சிவப்புசாரி பெண்.

''மூக்கைப் பாருமே. வெள்ளரிப் பிஞ்சு மாதிரி, என்ன எடுப்பு என்ன எடுப்பு.''

பெட்டியில் மதுபாட்டில்கள் வைத்துக்கொண்டு வேறு பயணம் செய்கிறார். போலீஸ் ரெய்டு வருமோ என்று பயப்படுகிறார். மிருதங்கப்பிள்ளை நிஜமாகவே வருத்தப்படுகிறார்.

''ஏன் இதெல்லாம் உங்களுக்கு? நல்ல வித்வத்து, நல்ல ஞானம், நல்ல சாரீரம். சீனியருக்கும் சீனியர். இந்தச் சங்கீதத்தை இப்படியா காப்பாத்தறது. நின்னவரைக்கும் நெடுஞ்சுவருன்னு இருக்கப்படாதய்யா... செவுத்தைக் கெட்டிப் படுத்தறதுதான் நாம் செய்ய வேண்டிய வேலை. இல்லாட்டி பாட்டு என்னமா உருப்படும்...''

மார்க்கண்டத்தையா இந்த நல்ல வார்த்தைகள் மாற்றிவிடும்? அவரைக் கதறக் கதறக் கொல்லத்தான் ஞானாம்பாள் காத்திருக்கிறாளே?

கதையின் இறுதிப்பகுதி. இப்போது ஞானாம்பாள் வீட்டில் இருக்கிறார் மார்க்கண்டம்.

''இன்னிக்கு எனக்கு அதிர்ஷ்ட நாள்'' என்கிறாள் ஞானம்பாள்.

''ஞானம் நீ இப்படி ஞானக்கடலா இருக்கியே... இத்தனை நாளா என் கண்ணில் படலையே..''

ஞானம் தொடர்கிறாள்.

''என் காதை ரொப்பறதுதான் பாட்டு. என் காதை ரொப்பணும். என் மனசை ரொப்பணும். என் பிராணனைப் போய்க் கவ்வணும். இந்தத் தேகம், உயிர் எல்லாம் மறந்து போகணும்...''

பொட்டல் வெளியில் தன்னந்தனியாக நிற்கிற மரம், அதன் உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருக்கும் ஒரு தனிப்பறவை, தனக்கும் தன் ஆத்மாவுக்கும் கேட்டால் போதும் என்று பாடுகிற ஒரு லட்சியப் பறவை... என்ற நினைவு நமக்குத் தோன்றுகிறது.

ஆனால், மோகத்திருகலில் இருந்த மார்க்கண்டம் உளறத் தொடங்கினார்.

''நேத்திக்கு நீ சமாதிக்கிட்ட நின்னுண்டு... சந்தனக் கலர்ப்புடவை தளர தளர... பாடினாயே...'' என்று வர்ணித்துக்கொண்டே வந்தவர்.. திடுமென சுருதி பிசகி, தாளம் தவறி, ''உன்னை நேத்திக்கு பாக்கிறபோது தியாகய்யர் கீர்த்தனமே ரூபம் எடுத்திண்டு நிற்கிறாப்போல் இருந்தது.''

திடுக்கிடுகிறாள் ஞானம்.

''இது பூச்சி அரிக்கப்போற உடம்பு. எவ்வளவோ மனுஷப் பூச்சியெல்லாம் மனம் போனபடி அரிச்சி வேற ஆயிடுச்சி. இதுக்கும் தியாகய்யர் பாட்டுக்கும் சரிக்கட்ட வாணாம்.''

மோகலாகிரி என்கிற மாயப் பாம்பு மூளையிலிருந்து வெளிப்பட்டு மனதில் படம் எடுத்து வார்த்தை வெளிப்படும். வாயில் விஷம் கக்கி விடுகிறது. சங்கீதத்தை மழையாகப் பெய்யும் பாட்டுக்காரன், மனசைச் செம்புலமாக்காமல் தரிசாகப் போட்டான். ஞானிகளிடம் காலை உணவு பற்றிப் பேசுவதுபோல, அசந்தர்ப்பமாக மேலும் மேலும் மூடத்தனத்தை விளம்பத் தொடங்கினார் சங்கீத மேதை.

''வாஸ்தவமாகச் சொல்றேன். நேத்திக்கு நீ பாடினியே... அந்தத் தியாகய்யர் கீர்த்தனத்தைத் தியாகய்யரே அப்படிப் பாடி இருக்க முடியும்னு நெனக்கிறியா?''

ஞானம் தீயாக நின்றாள். ஐந்தரை அடி உயரமாய் வளர்ந்து நிற்கும் தீ.

'ஏ... தரித்திரமே’ எந்திரிச்சுப் போ, சொல்றேன். ''தேவடியான்னா என்னவாணாப் பேசிட்டுத் திரியலாம்னு நெனக்க வேணாம்.. தாசியா பொறந்திட்டா, இந்த மாதிரி முட்டாள்தனத்தையெல்லாம் பொறுத்துக்கிட்டுக் கிடக்கணும்னு மொடையில்லே.''

திகைத்துப் போகிறார் புகழ் பூத்த பாடகர்.

''நீ பரம ரசிகைங்கற அர்த்தத்திலேதானே சொன்னேன்.''

''அப்படி நான் இருக்கிறதாலேதான் இப்ப உன்னை வெளியே போகச் சொல்றேன்... போய்யா, உன் பேச்சும் மூஞ்சியும்'' வித்வான், தலைகவிழ்ந்து வெளியேறினார்.

கலைஞர்களை, மதம் சார்ந்தவர்போலக் கருதி, அவர்கள் சீலம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இந்திய மரபு. ஐரோப்பிய மரபில், சாதனைக் கலைஞர்களை ஞானிகள் என்று ஒப்புக்கொள்கிறார்கள்.

- மழை பொழியும்