Published:Updated:

கதை மழை

மரங்களின் சகோதரர்கள்

கதை மழை

ந்தக் காதலனும் காதலியும் ஒரு சோலையை நோக்கி நடந்து வருகிறார்கள்.

தலைவன்: அதோ அந்தப் புன்னை மரத்தின் கீழே அமர்வோம்... இனிய நிழல். அழகிய பசுமை. காதலர்களுக்கு உரிய இடம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தலைவி: இங்கேயா? வேண்டாமே. வேறு இடம் போவோம்.

தலைவன்: ஏன், இந்த இடத்துக்கு என்ன குறை? மழை மாதிரி குளிர்காற்று. கிளிப்பேச்சு, மீன் முள் மாதிரி வெள்ளை மண்.

தலைவி: அங்கேகூட மரங்களும் கிளிகளும் இருக்கின்றன. ஏன், உங்களை மகிழ்விக்க ஆடும் மயில் ஒன்றும் அங்கே இருக்கும்.

தலைவன்: எனக்கு இந்தப் புன்னை மர நிழல் பிடித்திருக்கிறது. உன் மறுப்புக்கு என்ன காரணம்.

தலைவி: சொல்கிறேன்.

தலைவி பேசத் தொடங்குகிறாள். அவள் பேச்சின் மூலம், தமிழரின் பண்பாட்டுக் கூறு ஒன்று விதந்தோதப்படுகிறது. பண்பாடு என்பது, ஓர் இனம் வாழ்ந்த, பெற்ற, அடைந்த விழுமியங்களின் தொகுப்பே.

'சின்ன வயதில் நானும் என் தோழிகளும் இந்த இடத்தில்தான் புன்னை விதைகளை வைத்து விளையாடுவோம். ஒரு மாலைநேரத்தில், விளையாட்டின்போது, அம்மா என்னை அழைக்கும் குரல் கேட்க, நான் வீட்டுக்குப் போய்விட்டேன். அவசரத்தில் ஒரு புன்னை விதையை எடுக்காமலேயே போய்விட்டேன். மண்ணில் அமுங்கிய அந்தப் புன்னை விதை, இரவில் பெய்த மழை ஈரம் கொண்டு முளைத்துவிட்டது. அம்மா எனக்குத் தரும் பால், நெய்யை அந்தப் புன்னைச் செடிக்கு நான் ஊற்றி வளர்த்தேன். ஒரு நாள் அம்மா சிரித்தபடி, 'இது உன் தங்கை. மரம், செடி வளர்த்தல் மனித குலத்தின் சிறந்த செயல்பாடாகும். புன்னையை உன் தங்கையாகப் பாவிப்பாயாக’ என்றார்.

புன்னையைத் தங்கையாகப் பாவித்து நான் வளர்த்தேன். புன்னைத் தங்கையும் வளர்ந்தாள். நான் வளர்ந்ததுபோல, அவள் இப்போது வளர்ந்து புன்னை மரமாக நிற்கிறாள்.

இப்போது சொல்லுங்கள், தங்கைக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு உங்களோடு பேச எனக்கு வெட்கமாக இருக்காதா?’

அவ்வளவுதான்! செடியை, மரத்தைச் சகோதர உறவாகப் பாவிக்கும் மனோநிலையை, தமிழர் பண்பாட்டுக் கூற்றை நிலை நிறுத்தும் கவிதை இது. சங்க இலக்கியமாகிய நற்றிணை 172-ம் பாடல் இது. இதை எழுதிய கவிஞரின் பெயர் அறிய முடியவில்லை.

கதை மழை

தமிழர்கள் இயற்கையை சக ஜீவியாகப் பாவித்தவர்கள். தாங்கள் வாழும் நிலத்துக்கு அவர்கள் மரம், பூ முதலான இயற்கையின் பெயர்களையே சூட்டினர். மலைப் பகுதிக்குக் குறிஞ்சி என்ற பூவே பெயர். காட்டுக்கு முல்லை. ஆற்றங்கரை வயல்பகுதிக்கு மருதம். கடற் பகுதிக்கு நெய்தல்.. வறண்ட நிலத்துக்கு பாலை. எல்லாம் தாவரங்கள். பாதிரி மரங்கள் அடர்ந்த பகுதி பாதிரிப்புலியூர். அது, இன்றைய கடலூர். தில்லை மரங்கள் அடர்ந்த பகுதி தில்லை. அது, இன்றைய சிதம்பரம். வேம்பு மரத்தை அடிப்படையாகக் கொண்ட 100 ஊர்கள் இங்கே உண்டு. கடம்ப மரச் சூழல், கடம்பூர். கடல் பகுதி ஊர்கள் கடலூர்கள். வயலூர்கள், மலையூர்கள், காட்டூர்கள் என்று வாழும் இடம் சார்ந்தே பெயர்கள்!

பாரதியோடு தொடர்புடைய ஒரு செவிவழிக் கதை. காக்கை குருவி எங்கள் சாதி, கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்ற மனிதர் அவர். பாரதி புதுச்சேரியில் இருந்தபோது, 1916ம் ஆண்டு பெரும் புயல், மழை தேர்ந்திருக்கிறது. மக்கள் பல நாட்கள் சூரியனையே பார்க்க முடியவில்லை. அந்தக் காலத்தில் புதுச்சேரியை அழகூட்டிய மரங்கள் குறிப்பாக பூவரச மரங்கள் அழிந்து போயின. ஒரு பெரிய தோப்புக்குள் இருந்த ஊர் புதுச்சேரி. மரங்களை அண்டி வாழ்ந்த பறவைகள் செத்து வீதியில் கிடந்தன. அரவிந்தர் முதலான பலர், பாதிக்கப்பட்ட ஓனங்கனுக்கு உணவு வழங்கினர். பாரதியும், வ.வே.சு. ஐயரும் நண்பர்களும் தெருவில் விழுந்து கிடந்த பறவைகளைத் திரட்டி அடக்கம் செய்திருக்கிறார்கள், மனிதர்களை அடக்கம் செய்வது போல. 'வானில் பறக்கும் புள்ளெலாம் நான்’ என்று அவர் பாடுவது கவிதைச் சுவைக்காக மட்டும் அன்று. உயிர் என்றால் எல்லாமும் உயிர்தானே என்ற உன்னதம் உணர்ந்து வாழ்ந்தவன் பாரதி!

நோபல் பரிசு பெற்ற பிரெஞ்ச் எழுத்தாளர் வெ கிளேசியோவின் அற்புதமான சிறுகதை ஒன்றைச் சூழல் பொருத்தத்துக்காகச் சொல்கிறேன்.

ஒரு சிறுவன். வாழ்க்கை அவனுக்குச் சலிப்பாக இருந்தது. பயணம் செய்ய இறக்கைகள் தேவையா? மீனுக்கு உள்ளது போலச் செதில்கள் தேவையா? இல்லை, மனம் போதும். அவன் மனசுக்குள் எப்போதும் காடு இருந்தது. அங்கு போனான். மரங்கள் நகரும், அவனுடன் பேசும். பூமியில் அவை நின்று கொண்டிருப்பதாக நமக்குத் தோன்றும் வேர்களோடு அவை பொருத்தப்பட்டதாக நாம் நினைப்போம். அது அவற்றின் தந்திரம் என்பதைச் சிறுவன் புரிந்துகொண்டான். மனிதர்களின் காலடி ஓசை கேட்டு அவை இறுகிப் போய்விடுகின்றன. அவற்றைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சிறுவன், அதிகம் ஓசை எழுப்பாமல் நடந்து, திறந்த வெளியில் அமர்ந்துகொண்டான். மெல்ல சீழ்க்கை அடித்தான். சீழ்க்கை ஒலியை மரங்கள் விரும்பும். அப்போது மரங்கள் தங்கள் இறுக்கத்தைக் குறைத்துக்கொள்ளும். தளர்த்திக் கொள்ளும்போது காட்டில் கொட்டாவிவிடும் சப்தம் கேட்கும். கருவாலி மரம் அதிகமாகக் கொட்டாவிவிடும். சவுக்கு, பப்பாளி மரங்கள் குறைவாகவே கொட்டாவிவிடும். மரங்கள் அமைதியாக இருக்கும் என்பது வெறும் தோற்றம். நாம் ஒரு பறவைபோல ஓசை எழுப்பினால், மரங்களும் பதிலுக்கு ஓசை எழுப்பும். பப்பாளி, சவுக்குகள் புல்லாங்குழல் போலப் பாடும். மரம் பற்றித் தெரியாதவர்கள், சிட்டுக் குருவிகள்தான் பாடுகின்றன என்று நினைத்துக்கொள்வார்கள்.

சிறுவன், மரங்களுடன் பழக்கமாகிவிட்டான். மரங்கள் அவனுடன் பேசத் தொடங்கிவிட்டன. மரங்களுக்குக் கண், காது, வாய் எல்லாம் உண்டு. இவையே மரங்களின் கண்கள். மரங்களில் சீமை ஆலமரம், கண்டிப்பான மரம். சில்வர் பீச் மரம், தமாஷானது. சிறுவன் ஆலமரத்துடன் பேசினான்.

'உன் பேர் என்ன?’

'தியுன’

'இந்தக் காட்டுக்கு நீதான் அரசனா?’

'இல்லை, அவர் இங்கிருந்து வெகு தூரத்தில் இருக்கிறார்.’

'அவர் பேர் என்ன?’

'ஊனயு.’

'முதியவர்களுடன் வாழ்வது மிகவும் நன்றாக இருக்கும்.’

'ஆமாம். அவர்களுடன் நிறைய கற்றுக்கொள்ளலாம்.’

'ஒரு நாள் நீயும் காட்டுக்கு அரசனாகலாம்.’

'யாருக்குத் தெரியும். அதுவரை என்னை இடியோ, மின்னலோ தாக்காமல் இருக்க வேண்டும்.’

'பப்பாளி மரங்கள்? அவை அரசனாக முடியாதா?’

'அவற்றுக்கு பறவைகளைப்போல அரட்டை அடிக்கத்தான் தெரியும்; அரசனாக முடியாது.’

(மரங்களின் சகோதரர்கள்... அடுத்த இதழிலும் தொடரும்)

- மழை பொழியும்