Published:Updated:

கதை மழை

அரசு கட்டத்தில் ஒதுங்கியவன்!

கதை மழை

தோழர் மோசிகீரனார்

மோசிகீரா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மகிழ்ச்சியினால்

மரியாதையை நான்

குறைத்ததற்கு

மன்னித்தருள வேண்டும்  நீ

சொந்தமாக உனக்கிருக்கும்

சங்கக் கவிதை யாதொன்றும்

படித்ததில்லை நான் இன்னும்!

ஆனால், உன்மேல் அளவிறந்த

அன்பு தோன்றிற்று

இன்றெனக்கு

அரசாங்கத்துக் கட்டடத்தில்

தூக்கம் போட்ட முதல் மனிதன்

நீதான் என்னும் காரணத்தால்.

கவிஞர் ஞானக்கூத்தனின் புகழ்பெற்ற கவிதைகளில் ஒன்றிது. இரண்டு விஷயங்களை இதில் சொல்கிறார். ஒன்று, 2,000 வருஷங்களுக்கு முந்தைய புலவர் மோசிகீரனாரின் வரலாறு. இரண்டாவது, நம் காலத்து அவலம். மோசி என்ற ஊரைச் சேர்ந்த கீரன் என்ற புலவர், 'சேரல் இரும்பொறை’ எனப்பெயர் கொண்ட மன்னனைப் பார்க்கச் சென்றிருக்கிறார். வெயில் காலம். நடந்து சென்ற களைப்பில், அரண்மனைக்குள் கண்ணில்பட்ட கட்டில் ஒன்றில் ஏறிப்படுத்து உறங்கிப் போகிறார். அது மனிதருக்கான கட்டில் அல்ல. மன்னனின் முரசு வைக்கப்படும் கட்டில். அந்த நேரம், முரசைப் புனித நீராட்ட எடுத்துச் சென்றிருக்கிறார்கள். முரசும், குடையும், வாளும் அரசச் சின்னங்கள். அவற்றை அவமானம் செய்வது, மன்னனைச் செய்வதுக்கு நிகர். எதுவும் அறியாத புலவர் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார். மன்னனுக்குச் சேதி போகிறது. கொதித்துப்போன மன்னன், வாளை உருவிக்கொண்டு கட்டிலை அணுகுகிறான். பார்த்தால், மரியாதைக்குரிய புலவர். அவரை அவன் அறிவான். வாளை உறையில் போட்டுக்கொண்டு அவன் திரும்பிவிடவில்லை. மேலும் ஒரு மகத்தான காரியத்தைச் செய்கிறான். புலவர்க்கு வியர்க்கிறதைக் கண்டு, மயிலிறகு விசிறியைக்கொண்டு வீசிக்கொண்டு நின்றான். விழித்துக்கொண்ட புலவர் திடுக்கிட்டு, தம் பிழையை உணர்ந்து மன்னனின் தமிழன்பை வியந்து பாராட்டிப் பாடுகிறார். மோசிகீரனாரின் நான்கு பாடல்கள் புறநானூற்றில் இருக்கின்றன. புறநானூறில் இது 50-ம் பாடல்.

இந்தப் பாடலைக் கொண்டு வந்து, நவீன காலத்தில், அதாவது இன்று அரசாங்கக் கட்டடத்துக்குள் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் மனிதர்களை அங்கதம் செய்கிறார், ஞானக்கூத்தன். மனிதர்கள் மட்டுமல்ல, என் அனுபவத்தில் அரசு அலுவலகங்களில் இருக்கும் மேசை, நாற்காலிகள்கூட உறங்குகின்றன. ஃபைல்கள், பேனாக்கள், மைக்கறைகள், அழுக்குத் திரைச் சீலைகள், பார்வையாளர்கள் அமர்ந்து காலத்தை விரயப்படுத்தும் நாற்காலிகள் எல்லாமும் சூனியத்தால் நிரம்பிய அழுக்குக் கூடாரங்களாக இருக்கின்றன அலுவலகங்கள். உறக்கம் என்பது கண் உறக்கம் இல்லை, தத்துவ உறக்கம். வேலை செய்வதும் செய்யாததும் விஷயம் இல்லை. யாருக்காக அவர்கள் உழைக்கிறார்கள் என்பதும் ஏன் உழைக்கிறார்கள் என்பதும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை என்பதுமே நம் காலப்பிரச்னை. அரசுகள், 'பணிக் கலாசாரம்’ என்ன என்பதை அலுவலர்களுக்குச் சொல்லித் தரவில்லை.

ரஷ்யக் கவி மாய கோவஸ்கி எழுதிய ஒரு அங்கதக் கவிதை என் நினைவுக்கு வருகிறது.

கதை மழை

தொலைதூரக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு அரசாங்கத்தில் ஒரு வேலை ஆக வேண்டியுள்ளது. அதை முன்னிட்டு அவர் பல மைல் தூரத்தில் இருக்கும் தலைநகருக்கு, அமைச்சகத்துக்கு வருகிறார். அமைச்சகம், 10 மாடிகளைக் கொண்டது. எட்டாம் மாடியில் இருக்கும் அதிகாரியிடம் அவர் விண்ணப்பம் அளித்துப் பேச வேண்டியிருக்கிறது. அந்த வயதான விவசாயி, எட்டு மாடிப் படிகளையும் ஏறி மேலே வருகிறார். அங்கிருக்கும் ஓர் அலுவலர், விவசாயியிடம் 'என்ன’ என்கிறார். 'ஐயா... அதிகாரியிடம் விண்ணப்பம் அளித்துப் பேச வேண்டும்.’

அவர் கிராமத்தின் பெயரையும் சொல்கிறார். 'அதிகாரி, மீட்டிங்கில் இருக்கிறார். 12 மணிபோல் வாருங்கள். கீழே போய்க் காத்திருங்கள்’ என்கிறார் அந்த அலுவலர். அந்த விவசாயி எட்டு மாடிப்படிகளை இறங்கி வருகிறார். காத்திருக்கிறார். மீண்டும் 12 மணிக்கு எட்டு மாடிகள் ஏறி மேலே வருகிறார். 'அதிகாரி மீட்டிங்கில் இருக்கிறார். இரண்டு மணிக்கு வாருங்கள்’ என்கிற  பதில், அதே தொனியில், ஈரப்பசை அற்றுச் சொல்லப்படுகிறது. மீண்டும் இரண்டு மணிக்கு, விவசாயி எட்டு மாடிகள் ஏறிப் போகிறார். அங்கிருக்கும் ஒரு நபர், 'அதிகாரி மீட்டிங்கில் இருக்கிறார்’ என்கிறார். விவசாயி, 'எங்கு இருக்கிறார் என்று சொல்லுங்கள். நான் நேரில் சந்திக்கிறேன்’ என்கிறார். அலுவலரோ, இரண்டாம் அறையிலும், நாலாம் எண் அறையிலும் மீட்டிங்கில் இருக்கிறார்’ என்கிறார். விவசாயி ஆச்சர்யம் அடைகிறார். 'அதிகாரி எப்படி இரண்டு அறைகளிலும் மீட்டிங்கில் இருக்க முடியும்’ என்கிறார். அலுவலர் மிக இயல்பாக, 'அதிகாரியின் தலை இரண்டாம் அறையிலும், கழுத்துக்கும் கீழான முண்டம் நான்காம் அறையிலுமாக மீட்டிங் நடத்துகிறார்’ என்றார் சாதாரணமாக.

புரட்சிக்குப் பிந்தைய நாளிலும் அதிகாரவர்க்கம், பழைய மேட்புமைத்தனத்தோடேயே செயல்படுகிறது என்பதை ஞானக்கூத்தன் போன்ற அங்கதத் தொனியிலேயே எழுதினார் மாய கோவஸ்கி. பின்பு அவர், இந்தக் கவிதையைக் கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகைக்கே அனுப்பினார். பத்திரிகை அதை நிராகரித்தது. அந்தக் கவிதை, கார்க்கியின் கவனத்துக்குச் சென்றது. அவர், அதை லெனினிடம் காண்பித்தார். லெனின் படித்து ரசித்துவிட்டு, ''கவிகள் இப்படித்தான் அரசை நல்வழிப்படுத்த வேண்டும். இதுதான் மக்கள் பணி'' என்றார். அந்தக் கவிதையைப் பிரசுரிக்கச் செய்தார். லெனின், கவியின் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பவில்லை. என்ன தலைவர் அவர்?

('அரசுக் கட்டடத்தில் ஒதுங்கியவன்’ அடுத்த இதழில் தொடரும்...)

- மழை பொழியும்