பிரீமியம் ஸ்டோரி
கதை மழை

சும்மா தெருவில் திரிகிற இளைஞர்களை, நடுவயதுக்காரர்களை நீங்கள் அதிகமாக நம் ஊர்களில் பார்க்கலாம். படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களாக இருப்பார்கள். வேலை படியாதவராக இருக்கலாம். இவர்களை தேநீர் கடையின் முன் பார்க்கலாம். நண்பர்கள் குழுவோடு சிரித்துக் களித்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். ஏதோ ஓர் இடத்தில் அவர்கள் உறங்குகிறார்கள். எப்படிச் சாப்பிடுகிறார்கள், ஒரு காலை நேரத்தை என்ன எதிர்பார்ப்போடு எதிர்கொள்வார்கள் என்பதெல்லாம் யாராலும் கருதப்படுவதில்லை. இப்படிப்பட்டவர்கள், இப்படிப்பட்டவர்களாகவே இருப்பதையே நம் அமைப்புகள் விரும்புகின்றன.

சில ஐரோப்பிய நாடுகளின் தெருக்களில் நான் இவர்களைப் பார்த்திருக்கிறேன். காலை நடையைத் தவிர, தெருவில் நடந்து போகிற மனிதர்கள் அங்கே அபூர்வம்.

இவர்கள், எந்தப் பணியையும் சுமக்காதவர்கள். எந்தப் பொறுப்பையும் ஏற்காதவர்கள். இவர்களை உதிரிகள் என்பார்கள். ஆனால் மனிதர்கள். இவர்கள் அவ்வப்போது தென்படுவார்கள். தெருக்களில் அழுக்கடைந்த, நைந்த ஆடைகளில் இவர்கள், நடந்து வாழ்க்கையைத் தேய்த்துக்கொண்டிருப்பார்கள். மற்றவர் கருணையில் வாழ்பவராக இருப்பார்கள். இவர்களுக்கு பனி மற்றும் குளிர் காலம், கொலைகாரர்களாக அமையும். தெருவோரம் வாழும் முதியவர்கள் குளிரில் விறைத்துச் சாவது இந்தப் பருவத்தில்தான். இரண்டு உலக மகாயுத்தங்கள் நடந்து முடிந்தபோது, அந்த யுத்தங்கள் மிச்சம் வைத்துவிட்டுப் போனது இந்த உதிரி, ஆதரவற்ற மனிதர்கள்தான்.

சங்க காலத்து மன்னன் பாரி. பெரிய வள்ளல் என்று புகழ்பெற்றவன். அவன் ஒரு போர்க்களத்தைச் சந்திக்க நேர்ந்தது. போரில் அவன் இறந்தான். இரண்டு பெண்களின் தந்தை அவன். தந்தை இறந்து, நாட்டையும் இழந்து, தெருவில் நின்ற பாரியின் மகள்களுடைய கண்ணீரை ஒரு கவிதையாக்கினார்கள்.

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்

எந்தையும் உடையேம் எம் குன்றும்

பிறார் கொளார்.

இற்றைத் திங்கள் இவ் வெண்ணிலவின்

வென்று எரி முரசின் வேந்தர் எம்

குன்றும் கொண்டார் யாம்

எந்தையும் இலமே.

கதை மழை

சென்ற மாதத்தின் முழு நிலவு நாளில், எங்கள் தந்தை எங்களோடு இருந்தார். எங்கள் பறம்பு மலை எங்களிடம் இருந்தது. அதைப் பகை அரசர்கள் எடுத்துக்கொள்ளவில்லை. இன்றும் தோன்றி இருக்கிறது முழு நிலவு. இந்த நாளில் பகை வேந்தர்கள் எங்கள் நாட்டைக் கைப்பற்றிக்கொண்டார்கள். தந்தையையும் கொன்றார்கள். நிலமும் இல்லை. ஆதரவுக்குத் தந்தையும் இல்லை... யுத்தம்... குடும்பங்களை, உறவுகளைச் சிதைக்கும். அதைவிடவும் முக்கியம், அது மனிதத்தன்மையையும் சிதைக்கும். யுத்தங்களின் பேரழிவு என்பது, அவை மானுடம் உருவாக்கித் தந்திருக்கும் அனைத்து விழுமியங்களையும் அழிக்கும். யுத்தம் முடிந்தபிறகும், ஜெர்மானியர்கள் அதன் துர் நினைவுகளை மறக்காமல் தவித்தார்கள். இன்றும்கூட, இன்றைய இளம் தலைமுறையினர் எழுதும் கதைகளில்கூட யுத்தம் உருவாக்கிய சிதைவுகள் கசிந்து கொண்டிருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன் படித்த ஓர் அரிய ஜெர்மன் கதையைப் பகிர்ந்து கொள்கிறேன்.

அவனுக்கு அமைச்சர் அலுவலகத்தில் ஒரு வேலை இருந்தது. அவனுக்கு ஒரு பெயர் வேண்டுமல்லவா? ஜோசப் என்று வைப்போம். அமைச்சர் அலுவலகம் 10 மாடிகளைக் கொண்டது. அமைச்சர் அலுவலக அதிகாரியிடம் ஒரு தபால் கொடுக்க வேண்டி இருந்தது. கொடுத்தபிறகு, சற்றுநேரம் அங்கே, பார்வையாளர் இருக்கையில் இருந்து ஓய்வெடுத்த பிறகு செல்லலாம் என்று ஒரு நாற்காலியில் அமர்ந்தான். அவனைப் போல பலபேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அவன் வெட்டியாக இருப்பவன் என்று யாரும் எண்ண முடியாது.

ஜோசப்புக்கு அந்த அலுவலகம் முழுதும் நிலவும் சீரான, இதமான உஷ்ணம் பிடித்திருந்தது. வெளியே குளிரும் பனியும் அவனை வாட்டி எடுத்தது. அமைச்சர் அலுவலகம், புத்துயிர் கொடுக்கும் விதமாக, இதமான உஷ்ணத்துடன் அவனுக்கு மகிழ்ச்சியளித்தது. அந்தச் சமயம்தான், அவனுக்கு அந்த யோசனை தோன்றியது. காலை எட்டு மணி, திறக்கப்பட்டு மாலை ஏழு மணிக்கு மூடப்படும் அமைச்சர் அலுவலகத்தையே பகல் நேரத்தைப் போக்கும் இடமாகக் கொண்டால் என்ன? பத்து மாடிகளில் உள்ள அலுவலகங்களில் வேலையாக நூற்றுக்கணக்கானவர்கள் வந்து போகும், காத்திருக்கும் இடத்தில் அவனை யாரும் அடையாளம் காண முடியாது.

கதாசிரியர் அவனைச் சோம்பேறி என்கிறார். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ''வேகம் வேகமாக எழுந்து, குளித்து புறப்பட்டுச் செய்ய என்ன இருக்கிறது, அவனுக்கு? கந்தையானாலும் கசக்கிக் கட்ட, மாற்றுத் துணி இருந்தால்தானே? கூழ் குடிக்க என்னத்துக்குக் குளிக்க வேண்டும்?''

அதிர்ஷ்டவசமாக, அமைச்சர் அலுவலகத்தில் சேர்க்க அவனுக்கு சில விண்ணப்பங்களும் சிறிய கூலியும் கிடைக்கும். ஆனந்தமாக அமைச்சர் அலுவலகம் செல்வான் அவன். நிம்மதியாகப் பொழுதைப் போக்குவான், உறங்குவான். யாரும் தொந்தரவு செய்வது இல்லை. சமயா சமயங்களில் அவன் 10 மாடிக்கும் எழுந்தருளி, எல்லோருக்கும் ஹலோ சொல்வான். அவர்களும் சக ஊழியனுக்குப் பதில் 'ஹலோ’ சொல்வார்கள்.

ஒருநாள் காலை ஜோசப்பை, துறை அதிகாரி பெப்பேர் அழைத்தார். அவர் கையில் ஒரு பேப்பர் இருந்தது. அதை யாரிடம் கொடுப்பது என்று பெப்பேர், நடைபாதையில் நின்று யோசிக்கும்போது, அவர் பார்வையில் ஜோசப் விழுந்தான்.

'இந்தாப்பா. வருவாய்த் துறை குமாஸ்தா மார்ட்டின் காலமாகிவிட்டார். துறையில் எல்லோரிடமும் இதைக் காட்டித் தகவலைச் சொல்லி, இறுதி மரியாதை செய்யும் விதமாகப் பூமாலைச் செலவுகளுக்குப் பங்குகொள்ளும் விருப்பமுள்ளவர்களிடம் பணம் வசூல் செய்து, நாலு மணிக்கு என்னிடம் வா.’

மகிழ்ச்சியாக அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். ஒவ்வொரு மேசைக்கு முன்பும் நின்று வசூலித்தான். மூன்று மணிக்கு அதிகாரி முன் நின்றான். வசூல் தொகை, அதிகாரிக்கு மகிழ்ச்சி தந்தது.

பலநூறு பேர்கள் பணியாற்றும் அந்த அலுவலகத்தில் இயற்கையாகவே மரணங்கள் நிகழ்ந்தன. திருமண வரவேற்பு, பார்ட்டிகள் என்று பலப்பல கூடங்களுக்குத் தகவல் சொல்வது மற்றும் பணம் வசூலிப்பது போன்றவற்றுக்குக் கூப்பிடு ஜோசப்பை என்ற புகழ் பரவியது. அடிக்கடி அவன் நினைவுக்கு, யுத்தத்தில் இறந்து, அனாதையாக எல்லோரையும்போல புதைக்கப்பட்ட அவன் பெற்றோர் நினைவுக்கு வருவார்கள்.

செய்தி அறிவிப்பது, வசூலிப்பது என்பதை ஒரு கலையாகவே பயின்று தேர்ந்தான் அவன். மரணமோ, மங்கல நிகழ்ச்சியோ, தொடர்புடையவர்கள் தன் சகோதர, சகோதரிகள் என்று பாவித்தான். அதனால், செய்வதைத் திருத்தமுறச் செய்தான்.

ஒருநாள் ஜோசப்பும் இறந்தான். வாழையடி வாழையாக வந்த இன்னுமொரு, தெருவிலிருந்து இங்கு வந்து ஒதுங்கியவன் செய்தியையும் வசூல் பேப்பரையும் எடுத்துக்கொண்டு வசூலுக்குக் கிளம்பினான். 'சக ஊழியன்’ ஜோசப் மறைவுக்கு நிறையவே வசூல் ஆயிற்று. அடக்கச் செலவு போக நிறைய மிகுந்தது. அந்தப் பணத்தை யாருக்குக் கொடுப்பது என்ற குழப்பம் அமைச்சகத்துக்கு ஏற்பட்டுவிட்டது.

யாருமற்றவர்களின் கதைகள் எல்லோருக்குமான பாடங்கள்தான்.

- மழை பொழியும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு