Published:Updated:

கதை மழை!

அநாதைக் குழந்தைகள்

கதை மழை!

பிரான்ஸ் தேசத்துக் கிராமம் ஒன்றைச் சேர்ந்தவன், ஏழைக் குடும்பத்துச் சிறுவன் சிமோன், பள்ளிக்கூடத்தைவிட்டு வெளியே வந்தான். அன்றுதான் அவன் பள்ளியில் சேர்ந்திருந்தான். அதற்குள் அவனைப் பற்றிய தகவல்கள் கசிந்துவிட்டன. பையன்கள் அவனைச் சுற்றிக்கொண்டனர்.

 ''உன் பெயர் என்ன?'' என்றான் ஒரு பையன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''சிமோன்.''

''வெறுமனே சிமோன் என்றால்? முழுப்பெயரைச் சொல்'' சிமோனின் அப்பா பெயரைக் கேட்டார்கள். அப்பா பெயரோடு தன் பெயரைச் சொல்வதுதான் ஐரோப்பிய வழக்கம்.

பயந்த சுபாவமும் ஒதுங்கிப்போகும் வழக்கமும்கொண்ட சிமோன் அஞ்சி நடுங்கியபடி ''சிமோன்'' என்றான்.

''நான் சொல்லலையா. அவனுக்கு அப்பா இல்லை.''

''இருக்கார்'' என்றபடி அழத் தொடங்கினான் சிமோன். சிமோனைச் சுற்றி மிருக வெறியோடு நின்றார்கள் பையன்கள்.

''அப்பா இல்லாத பையன்... அப்பா இல்லாத பையன்'' என்று ஒருவன் பாடினான்.

சிமோன், பாடினவனின் தலை முடியைப் பிடித்து உலுக்கி, உதைத்தான். அவன் இவனைக் கடித்து, மண்ணில் புரட்டினான்.

உடைந்துபோனான் சிமோன். சத்தம் வராமல் அழுதபடி வீட்டுக்கு ஆற்றோரமாக நடந்து போனான். போகும் வழியில் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ஒரு வாரத்துக்கு முன்னால்தான் ஒரு பையன் ஆற்றில் விழுந்து இறந்துபோனான். இறந்தவனை வெளியே எடுக்கும்போது சிமோன் அதைப் பார்த்திருந்தான்.

சிமோன், செத்துப்போவது என்று முடிவெடுத்தான்.

கதை மழை!

'எனக்கு அப்பா இல்லை. ஆகவே நான் சாகணும்.’ ஆற்றங்கரையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தான்.

ஒரு மனிதன் அவன் தோளைத் தொட்டான்.

''ஏன் அழறே?''

''எனக்கு அப்பா இல்லை. எல்லாரும் என்னை அடிச்சாங்க.''

அந்த மனிதன் சிரித்துக்கொண்டு, ''அப்பா இல்லாமல் யாரும் இருக்க முடியாதே'' என்றான். சிமோனின் அம்மா பிளான் ழோத் என்பதைப் புரிந்துகொண்டான். அவன், சிமோனை அழைத்துக்கொண்டு அவன் அம்மா இருக்குமிடம் போனான்.

''உங்கள் மகனை ஆற்றங்கரையில் பார்த்தேன்.''

சிமோனோ, ''இல்லை அம்மா. நான் ஆற்றில் மூழ்கிச் செத்துப் போகலாம் என்று நினைத்தேன்'' என்றான். ''எனக்கு அப்பா இல்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள்.''

அம்மா அழுதாள். சிமோன் அந்த மனிதனிடம், நீ எனக்கு அப்பாவாக இருக்கிறாயா என்றான். ''இல்லாவிட்டால் நான் ஆற்றில் விழுந்து செத்துவிடுவேன்.''

''சரி'' என்றான் விளையாட்டாக அந்த மனிதன்.

மறுநாள் சிமோன் வகுப்பில் அறிவித்தான்.

''என் அப்பா பெயர் பிலிப். என் பெயர் சிமோன் பிலிப்.''

''அப்படியானால், உன் அப்பா ஏன் உன் அம்மாவுடன் தங்குவதில்லை.''

மீண்டும் பிரச்னை. சிமோன், பிலிப் வேலை பார்த்த இரும்புப் பட்டறைக்கே சென்றான்.

''பிலிப். நீ ஏன் என் அம்மாவுடன் தங்குவதில்லை.''

''உன் அம்மாவிடம் பேசு'' என்றான் பிலிப்.

எல்லாம் நல்லபடியாக முடிந்தது. மறுநாள் சிமோன் வகுப்பில் அறிவித்தான்.

''என் அப்பா பெயர் பிலிப். எவனாவது வம்பு பண்ணினால் அவன் கன்னம் பழுத்திடும், எங்கப்பா வருவார்.''

வகுப்பில் எவனும் சிரிக்கவில்லை.

இது மாப்பசானின் கதை. 1850-ல் பிறந்த அவர் 43 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர். அவர் காலத்து பிரெஞ்சு பழக்க வழக்கத்தை, பண்பாட்டை அவர் கதைகளில் எழுதினார். அவர் காலத்திலும் குடும்பம் என்ற அமைப்பு இறுகியே இருந்தது. தந்தை, தாய், பிள்ளை என்ற மூன்று பக்கங்களால் ஆன முகுண்ட அமைப்பாகவே இருந்ததோடு, ஒற்றைத் தந்தை, ஒற்றைத் தாயைக்கொண்ட குடும்பம், குடும்பமாகவே அங்கீகரிக்கப்படுவது இல்லை. ஓடிப்போன தந்தைக்குப் பிறந்த குழந்தைகள். கல்வி இழந்து சமூக அந்தஸ்து இழந்து உதிரிகளானார்கள். இந்த சமூக நஷ்டத்தைப் பல கதைகளில் எழுதுகிறார் மாப்பசான்.

சிமோனுக்கு அப்பா இல்லை என்பது ஒரு நிகழ்வு மட்டும்தான். அப்பாவாக இருந்த இளைஞனின் பொறுப்பற்ற இழிநிலை காரணமாக, ஏமாற்றப்பட்ட ஒரு தாய் இழிவைச் சுமக்கிறாள். சின்னக் குழந்தையான ஏழு வயது மகன் தற்கொலைக்கே தயார் ஆகிறான். அந்த ஓடிப்போன அப்பாவை நோக்கிச் சுட்டு விரலையும் நீட்டவில்லை. இதுவே மாப்பசானின் கவலை.

நோபல் பரிசு பெற்ற, பல எழுத்தாளர்கள் பற்றி மாறுபட்ட கருத்துகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், இந்த ஆண்டு மலாலாவுடன் நோபலைப் பகிர்ந்துகொள்ளும் கைலாஷ் சத்யார்த்தி பற்றி யாரும் ஒரு சொல்லும் பேச முடியாது. 'பச்சான் பச்சாவோ அந்தோவன்’ என்ற பெயரில் இவர் தொடங்கிய குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம், கொத்தடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர், குழந்தைகள் கடத்தல் முதலான மாபெரும் கொடுமைகளிலிருந்து 83,500 குழந்தைகளைக் காப்பாற்றி இருக்கிறது.

இந்தக் குழந்தைகள் ஐந்து வயதில் கல்லுடைக்க வேண்டி இருந்திருக்கும் வாழ்நாள் முழுதும். உடல் உறுப்புகளைச் சிதைத்து, பிச்சை எடுக்க அனுப்பப் பட்டிருப்பார்கள். இரண்டு கம்புகள் நாட்டிய, அவற்றில் கட்டப்பட்ட கயிறுகளில் அந்தரத்தில் வித்தை காட்டிக்கொண்டு இருந்திருப்பார்கள். வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டு், குரூரங்களுக்கு ஆட்பட்டிருப்பார்கள். இவர்களைக் கைலாஷ் காப்பாற்றி இருக்கிறார். இது மகத்தான தொண்டு.

ஆனால், இன்னும் இந்த வகை ஆபத்துகளுக்கு ஆட்படப்போகும் சுமார் நாலு கோடிக் குழந்தைகளை யார் காப்பாற்றப் போகிறோம் என்பதே நம் முன் உள்ள கேள்வி.

குழந்தைகள், மனிதர்கள் என்பதை ஏற்காத சமூகம் நம்முடையது. அவர்களுக்கென்று உரிமைகள் இருக்கின்றன என்பதை வளர்ந்தவர்களாலான சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை.

1. நான் சொல்வதை நீ கேள். 2. உனக்கு ஒன்றும் தெரியாது. 3. குழந்தைகள்செய்யும் விவசாயம் வீடு சேராது. 4. பிள்ளை விளையாட்டு... போன்றவை நம்மொழியில் நிறையவே உண்டு.

ஒரு குழந்தை தன் குழந்தைமையை எப்போது இழக்கிறது? தன் பாடப்புத்தகத்துள் வைத்திருக்கும் மயில் இறகு, குட்டி போடாது என்று எப்போது தெரிந்துகொள்கிறதோ, அப்போது அந்தக் குழந்தை தன் குழந்தைமையை இழக்கிறது. குழந்தைக்கு நிச்சயம் அது இழப்புதான். அது இழக்கப்பட்டே தீர வேண்டும். அந்த இழப்பின் இடத்தில் நாம் கலைகளின் இனிமையை வைக்க வேண்டும். பாடலின் சுவையை ஊட்ட வேண்டும். கதைகளில் உள்ள இன்பத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். இயற்கையோடு உறவாட அவர்களுக்கு நேரத்தையும் சூழ்நிலையையும் உருவாக்கித் தர வேண்டும்... ஆனால் நாம் என்ன செய்கிறோம். வீட்டுப் பாடம், டியூஷன், கல்விச் சுமை என்று குழந்தைகளின் மாலைக் காலத்தைக் களவாடுகிறோம். அமெரிக்காவை நோக்கிய ஓட்டப்பந்தயத்துக்குக் குழந்தைகளைத் தயார்படுத்துகிறோம்.

குழந்தைகள் குறித்த இன்னொரு கதையுடன் அடுத்த இதழில்...

- மழை பொழியும்