Published:Updated:

'முதல்வருக்கு மட்டும் தண்ணீரா?' - கொதிக்கும் காவிரி புஷ்கர கமிட்டியினர்!

விகடன் விமர்சனக்குழு
'முதல்வருக்கு மட்டும் தண்ணீரா?' - கொதிக்கும் காவிரி புஷ்கர கமிட்டியினர்!
'முதல்வருக்கு மட்டும் தண்ணீரா?' - கொதிக்கும் காவிரி புஷ்கர கமிட்டியினர்!

'முதல்வருக்கு மட்டும் தண்ணீரா?' - கொதிக்கும் காவிரி புஷ்கர கமிட்டியினர்!

மயிலாடுதுறை துலாக்கட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி புனிதநீராடிய நாளன்று மட்டும் காவிரியில் தண்ணீர் வந்தது. அன்று இரவே தண்ணீர் வரத்து நின்றுபோனது. ஒருநாள் முதல்வர்போல, ஒருநாள் காவிரி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று பொதுமக்களும், புஷ்கர கமிட்டியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  

மூன்று மாதங்களுக்கு முன்பே புஷ்கரம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது மேட்டூரில் போதிய நீரில்லை. விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழலில் புஷ்கரத்திற்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று யாரும் கோரிக்கை விடுக்கவில்லை. ஆனால், இயற்கையாகவே புஷ்கர நாள் நெருங்க, நெருங்க மேட்டூரில் நீர்மட்டமும் உயர்ந்தது.  

இச்சூழ்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 20-ம் தேதி காவிரி துலாக்கட்ட புஷ்கரத்தில் நீராடும் அறிவிப்பு வெளியானது. உடனே, செப்டம்பர் 13-ம் தேதி மேட்டூரிலிருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடவும் உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த நீர் காவிரியில் 10 அடி வரை ஆழமுள்ள மணல்குவாரி பள்ளங்களை நிரப்பிவிட்டு கல்லணைக்கு வந்துசேரவே தாமதமானது. அங்கிருந்து திறக்கப்பட்ட 2 ஆயிரம் கனஅடி தண்ணீர், துலாக்கட்டத்திற்கு முதல்வர் நீராட வந்த 20-ம் தேதி காலை 6 மணிக்குத்தான் வந்தது. முதல்வர், அமைச்சர் பெருமக்கள், தமிழகத் தலைமைச் செயலாளர் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்று ஆனந்தமாய் நீராடினார்கள். இன்று இரவே எவ்வித முன்னறிவிப்புமின்றி கல்லணையிலிருந்து திறந்துவிடும் நீரை வெறும் 500 கனஅடியாக குறைத்துவிட்டார்கள். இந்த நீர் துலாக்கட்டத்தைத் தொட்டுக்கூட பார்க்கமுடியவில்லை. எஞ்சியுள்ள நான்கு நாள்களில் புனிதநீராடலாம் என்று காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். மறுபடியும் போர்வெல் மூலம் தொட்டியில் நிரப்பப்படும் குழம்பிய நீரில் புனிதநீராடும் பரிதாப நிலைக்கு பக்தர்கள் தள்ளப்பட்டார்கள்.  

இதுபற்றி பக்தர் ஒருவர், "காவிரி என்ன முதல்வர் வீட்டுச் சொத்தா? ஷவர்பாத் போல பயன்படுத்துவதற்கு? அவர் ஒருவர் வந்து நீராட ஒருநாள் மட்டும் தண்ணீர் விட்டுவிட்டு, அன்றே அடைத்துவிடுவது நியாயமா? ஆட்சியும், அதிகாரமும் இருந்தால் எதைவேண்டுமானாலும் செய்யலாமா? இதுபோல் ஆட்டம்போட்டவர்கள் எல்லாம் இறுதியில் என்ன ஆனார்கள் என்பது தெரிந்தும் சுயநலத்திற்காகத் தண்ணீர் விடலாமா? இன்னும் மூன்று நாள்கள்தான் புஷ்கரம் உள்ளது.  இந்த மூன்று நாள்களில் நீராடவரும் பக்தர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்தால் என்ன?  ஓர் ஆன்மிக விஷயத்தில் அலட்சியம் காட்டுவது சரியில்லை” என்றார் காட்டமாக. 

இதுபற்றி காவிரி மஹா புஷ்கர கமிட்டியின் துணைத் தலைவர் ஜெகவீரபாண்டியன் பேசுகையில், "செயத்தக்க அல்ல செயக்கேடும் - செயத்தக்க செய்யாமை யாயினும் கெடும்’ - என்று அய்யன் வள்ளுவன் இக்குரளைத் தமிழக காவிரிப் பொதுப்பணித்துறைத் தலைமை அதிகாரிகளுக்கு எழுதி வைத்தான் போலும். காவிரி நீரைப் பகிர்ந்தளிப்பதில் வேளாண்மைக்கு முதல் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேநேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்களின் இறை நம்பிக்கையைப் புறக்கணிக்கக் கூடாது. எனவே, இன்னும் இரண்டு நாள்களுக்குக் காவிரியில் சீராகத் தொடர்ந்து நீர் தருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு