Published:Updated:

பொழுதுகள் ஆறு!

பொழுதுகள் ஆறு!

மார்ச் - 15, இது மாற்றத்துக்கான விதை...

'வாடை வீசும்... இந்திரகோபம் மகிழும்... வெண்காந்தள், வேங்கை, கொன்றை மலரும்.... அன்னம் குயில் வருந்தும்... தாமரை ஏங்கும்!’ இவையெல்லாம் கார்காலத்தின் அறிவிப்பைச் சொல்லும் விஷயங்கள் என 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது தமிழ்ச்சமூகம். ஆவணி, புரட்டாசியில் வரும் இந்த கார்காலத்தில், இப்போது வாடை வரக் காணோம். தீப்பெட்டிக்குள் பிடித்துப் போட்டு விளையாடும் சிவப்பு வெல்வெட் வண்டு என புதுப்பெயர் புனைந்த இந்திர கோபத்தைக் காணோம். காந்தள் மருத்துவ வியாபாரத்துக்கான மலராகிவிட்டது.  நீரில்லா குளத்தில் வளரும் தாமரையின் ஏக்கம், குளமெல்லாம் பொறியியல் கல்லூரியாகவோ, மேம்படுத்தப்பட்ட குடியிருப்பாகவோ, பேருந்து நிலையமாகவோ மாறிவிட்டது. இந்தச் சூழலியல் சிதைவைச் சீர்தூக்கிப் பார்க்க சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில்  மார்ச் 15-ம் தேதி 'பொழுதுகள் ஆறு!’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.

பொழுதுகள் ஆறு!

என்ன செய்யப்போகிறார்கள்? நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவனித்து வரும் அந்த அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் கு.சிவராமனிடம் பேசினோம். ''உலகத்து தொன்மை மரபுகளான கிரேக்கமும், ரோமனும் சிந்துவும்கூட கடவுளையும் சடங்குகளையும் முதல் பொருளாக வைத்து இயங்கிய காலத்தில், உலகில் தமிழ்ச்சமூகம் மட்டும்தான் இயற்கையை முதற்பொருளாக்கி, அதை முன்னிறுத்தி, சூழலியல் தத்துவத்தை ஆதாரமாகக் கொண்டு, வாழ்வியலை வைத்திருந்தது. பூமி தன்னைத்தானே சுற்றியதை சிறு பொழுதெனவும், பூமி சூரியனை சுற்றிவந்ததை 6 பிரிவுகளாக்கிப் பெரும் பொழுதெனவும் பேசியது. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என இவ்வாறு பொழுதுகளில், எந்த பூ மலரும்?, எந்த பறவை வலசை வரும்? எந்த இனம் மகிழும்? எந்த  நோய் வருத்தும்? எந்த நிலம் துளிர்க்கும்? எந்த வகை காற்று வீசும்? எனக் கணக்கிட்டுச் சொல்லியுள்ளனர் தமிழர்கள். அந்தச் சூழலுக்கு இசைவான மேம்பட்ட வாழ்வை வாழ்ந்த நம் கூட்டத்தின் தற்போதைய நிலை என்ன? பொழுதுகளை எப்படி சிதைவுபடுத்திக் கொண்டிருக்கின்றோம்? எதை இழந்தோம்? எதைத் தொலைத்தோம்? எது பிடுங்கப்படுகின்றது? எது மறுக்கப்படுகின்றது? எது திணிக்கப்படுகின்றது? என்பதை விசாலமாகப் பார்க்கப்போகிறது இந்தப் பொழுதுகள் ஆறு.

பொழுதுகள் ஆறு!

ஆய்வரங்கத்துக்குப் பின்னே விதைத் திருவிழாவும் இணைய இருக்கிறது. பன்னாட்டு உரக் கம்பெனிகளின் விவசாய அழிவுக் கொள்கைகளை எதிர்த்து நம் மரபு சார்ந்த விதைகளைப் பாதுகாக்கும் பொருட்டும், விதைகள் சேகரிப்பு மற்றும் விதைகள் பரவலாக்குதல் என்கிற அடிப்படையில் விவசாயிகளின் விதைத் திருவிழா இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக இருக்கும்.

பொழுதுகள் ஆறு!

நம்மாழ்வாரின் இயற்கை வேளாண் இயக்கத்துக்குத் தூண்டுகோலாக இருந்த பெர்னாடி கிளார்க் கருத்தரங்கைத் தொடங்கி வைக்கிறார். 'நெல்’ ஜெயராமன் தொடங்கி, சுப.உதயகுமார் சிறப்புரையாற்ற... பாமயன், நக்கீரன், ஒடிசா பாலு, மருத்துவர் ராம், கு.வி கிருஷ்ணமூர்த்தி, அரச்சலூர் செல்வம் ஆகிய சூழலியல் அறிஞர்கள் பேச உள்ளனர். சேரன் குழுவினரின் துடும்பு ஆட்ட இசை நாட்டுப்புற நடன நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. இவ்வளவும் செய்துவிட்டு உணவு படைக்காமல் இருந்தால் அது முறையாக இருக்காது. இயற்கை விவசாயத்தால் விளைவிக்கப்பட்ட சிறுதானிய நச்சற்ற உணவுகளின் விருந்துப் பரிமாறலும் நடக்க இருக்கிறது. இந்த உணவுத் திருவிழாவில் பீர்க்கன் சாமை சோறு, குதிரைவாலி கேசரி, சீரகச்சம்பா காரப்புட்டு, மாப்பிள்ளை சம்பா கத்தரிச்சோறு, சாமை அரிசி பிரியாணி, காட்டுயவுணி அவல் பிரட்டல், பனிவரகு தயிர்ச்சோறு, கேழ்வரகு பாயாசம், நாட்டுக்கோழி வறுவல் நச்சு இல்லாத நல்ல உணவு பரிமாறப் போகிறோம். உணவுத் திருவிழாவுக்கான முன்பதிவு விகடன் இணையதளம் வழியாகவும் நடக்கிறது. 9841624006 என்ற செல்போன் எண்ணின் வழியாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்!'' என்று சொன்னார்.

மாற்றத்துக்கான பொழுது புலரட்டும்!

நா.இள.அறவாழி