Published:Updated:

'பருவத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடிசெய்யுங்கள்'- விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்

'பருவத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடிசெய்யுங்கள்'- விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்
'பருவத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடிசெய்யுங்கள்'- விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்

20,286 ஏக்கர் பாசனம் பெறக்கூடிய புதிய கட்டளை மேட்டு வாய்க்காலை, கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் திறந்ததோடு, நவதானியங்களைத் தூவி விவசாயம் செழிக்க வாழ்த்தினார்.

கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள புதிய கட்டளை மேட்டு வாய்க்காலை, மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் திறந்துவைத்து பாசனத்துக்குச் செல்லும் நீரில் மலர் மற்றும் நவதானியங்களை தூவி, வேளாண்மை செழிக்க வாழ்த்துகளைத் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் விமல்ராஜ் (குளித்தலை), காவிரி வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் பிரபாகர், உதவிப் பொறியாளர்கள் செல்லமுத்து, ஸ்ரீதர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், வட்டாட்சியர் பாலசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், "கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களைச்  சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், காவிரி ஆற்றில் உபவாய்க்காலான மாயனூர் புதிய கட்டளை வாய்க்காலிலிருந்து 20,286 ஏக்கர் நிலபரப்பு பாசனத்துக்காக இன்றுமுதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கி, கடைமடைப் பகுதிகளுக்கு நீர் சென்றடைந்து, பின்னர் வாய்க்காலின் முகப்புப் பகுதி விவசாயிகள் நீரைப் பயன்படுத்தி, அனைவரும் பயன்பெற வேண்டும். உரிய காலத்தில் பருவத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடிசெய்து பயனடைய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.