Published:Updated:

தூத்துக்குடியில் சினிமாவை மிஞ்சிய சம்பவம்; ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்

தூத்துக்குடியில் சினிமாவை மிஞ்சிய சம்பவம்; ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்
தூத்துக்குடியில் சினிமாவை மிஞ்சிய சம்பவம்; ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்

தூத்துக்குடியில், கொலைவழக்கை விசாரிக்கச் சென்ற எஸ்.ஐ மற்றும் காவலர்மீது அரிவாள் வெட்டு விழுந்ததால், ரவுடிமீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி ரவுடியைப் பிடித்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகிலுள்ள அத்திமரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர்மீது இரட்டைக் கொலை வழக்கு உட்பட ஐந்து கொலை வழக்குகளும், கொலைமுயற்சி வழக்கும், கொள்ளை, வழிப்பறி உட்பட பல்வேறு குற்ற வழக்குகளும் உள்ளன. கடந்த இரண்டு நாள்களுக்கு முன், இவர்மீது முத்தையாபுரம் காவல்நிலையத்தில் ஒரு கொலைமுயற்சி வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த முத்துக்குமாரை போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், அத்திமரப்பட்டியில் உள்ள முத்துக்குமாரின் வீட்டுக்கு அவர் வந்துள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தனிப்படை எஸ்.ஐ. ரென்னிஸ் மற்றும் போலீஸார் அவரைப் பிடிப்பதற்காக அங்கு சென்றனர். அந்தக் கிராமத்திலுள்ள அம்மன் கோயில் பனங்காட்டுப் பகுதியில் ஒளிந்திருந்த முத்துக்குமாரைப் பார்த்த போலீஸார், அவரை சரணடையச் சொல்லி கூறியுள்ளனர். ஆனால், முத்துக்குமார் தன்னிடம் இருந்த அரிவாளால் போலீஸாரைத்  தாக்கியுள்ளார். இதில், எஸ்.ஐ. ரென்னிஸுக்கு கையிலும், போலீஸ் முத்துராஜனுக்கு உடலிலும் காயம் ஏற்பட்டது. ரவுடியிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, எஸ்.ஐ. ரென்னிஸ், ரவுடி முத்துக்குமாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அதில், ஒரு குண்டு முத்துக்குமாரின் இடது தொடையில் பாய்ந்ததும் தப்பிக்க வழியில்லாமல் கீழே விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து, குண்டடிபட்ட முத்துக்குமாரை போலீஸார் கைதுசெய்தனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த எஸ்.ஐ. ரென்னிஸ் உட்பட  இரண்டு போலீஸார் மற்றும் ரவுடி முத்துக்குமார் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட எஸ்.பி. மகேந்திரன் தலைமையிலான போலீஸார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சினிமாவை மிஞ்சும் வகையில் போலீஸாரை ரவுடி தாக்கியதும், ரவுடிமீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவமும் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.