Published:Updated:

கலெக்டர் உட்பட அரசு அதிகாரிகளை வறுத்தெடுத்த அமைச்சர் மணிகண்டன்!

கலெக்டர் உட்பட அரசு அதிகாரிகளை வறுத்தெடுத்த அமைச்சர் மணிகண்டன்!
கலெக்டர் உட்பட அரசு அதிகாரிகளை வறுத்தெடுத்த அமைச்சர் மணிகண்டன்!

ராமநாதபுரம் மாவட்டத்தில், கட்சியின் நிர்வாகிகள் முதல் அதிகாரிகளிடமும் கோபத்தைக் காட்டுவதை அமைச்சர் மணிகண்டன் வழக்கமாகக்கொண்டுள்ளார். இன்று நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட  அதிகாரிகளை சகட்டுமேனிக்குத் திட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில், மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. மாணவர்கள், காலையிலிருந்து நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க, மிகத் தாமதமாகக் கலந்துகொண்ட அமைச்சர் மணிகண்டன், டென்ஷனோடு மைக்கில் பேச வந்தார். ‘’மாவட்ட நிர்வாகமே சரியில்லை, எந்த வேலையும் ஒழுங்காக நடக்கவில்லை, அங்கன்வாடிப் பணியாளர்கள் இன்டர்வியூ முடிந்து நீண்ட நாள்களாகியும் போஸ்டிங் போடவில்லை,  ஊர்தி ஓட்டுநர் போஸ்டிங் போடவில்லை, இப்படிப் பணி நியமனங்களுக்கு உத்தரவு போடாமல், மாவட்ட அதிகாரிகள் இழுத்தடித்துவருகிறார்கள். இதையெல்லாம் கலெக்டர் கவனிக்கிறாரா தெரியவில்லை’’ என்று  கலெக்டரைப் பார்த்து கடுமையாகப் பேசினார். இதனால், கலெக்டர் முகம் கறுத்துவிட்டது. அவரால் பதில் கூற முடியவில்லை.

அங்கு வந்திருந்த அரசு அலுவலர்கள், அமைச்சரின் பேச்சால் டென்ஷனானார்கள். இதைப் பற்றி நம்மிடம் பேசிய கட்சியினர்,  ‘’அங்கன்வாடி, ஊர்தி ஓட்டுநர் உட்பட 3000 பணியிடங்களுக்கு அமைச்சர் தரப்பில் இரண்டு முதல் 4 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இப்போதுள்ள சூழலில், அமைச்சரின் சிபாரிசுக்கெல்லாம் வேலை போட்டுக்கொடுத்தால்,  அதிகாரிகள் பதில் சொல்லவேண்டிவரும். அதனால், சரியான நபரைத் தேர்வுசெய்ய காலதாமதமாகிறது. பணம் கொடுத்தவர்கள் அமைச்சர் தரப்பைக் கேட்பதால், பொதுமேடையில் தன் ஆத்திரத்தைக் காட்டியுள்ளார்’’ என்கிறார்கள்.