Published:Updated:

கருத்துரிமைக்கு இலக்கியவாதிகள்தான் போராட வேண்டும்!

முற்போக்கு எழுத்தாளர் மாநாட்டில் முழக்கம்

பிரீமியம் ஸ்டோரி

டைப்பாளிகள், ஊடகங்கள் மீதான அடுத்தடுத்த தாக்குதல்கள் நடந்து​வரும் பரபரப்பான சூழலில், மிகுந்த உணர்ச்சிப்​பெருக்கோடு நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் 13-வது மாநில மாநாடு.

கருத்துரிமைக்கு இலக்கியவாதிகள்தான் போராட வேண்டும்!

திருப்பூரில் கடந்த 19-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் சமகால ஆய்வுகள் பிரிவு ஆய்வாளரும், கனடா நாட்டின் யார்க் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை சிறப்புப் பேராசிரியருமான அய்ஜாஸ் அஹமது வந்திருந்தார். ''இப்போது கருத்துச் சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை, தற்போதைய அரசியல் சூழலோடு இணைத்துப் பார்க்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்மச் சிந்தனைகள் ஊறிப்போய் இருப்பதை வெளிப்படுத்தும் ஓர் ஆவணப்படத்தை ஒளிபரப்ப விடாமல் மத்திய அரசே தடை செய்கிறது. ஓவியங்கள், தனி மனிதர்கள் கூறுகின்ற கருத்துகள், எழுத்தாக்கங்கள் என அனைத்தின் மீதும் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. தமிழகத்தில் பெருமாள் முருகன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் மீதும் ஊடகங்கள் மீதும் அண்மை நாட்களில் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் இதன் தொடர்ச்சிதான். பிற்போக்கு சக்திகள் எளிதில் சாதிய உணர்வுகளையும் மதப்பற்றையும் கிளறிவிட்டு மக்களைக் கூறுபோட்டு, அணி பிரிக்கின்றன. இப்படி மக்களைக் கூறுபோடுகிற நடைமுறைகளின் ஒரு பகுதியாகத்தான், தமிழகத்தில் ஓர் எழுத்தாளர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிற வன்முறைச் சூழல் ஏற்படுத்தப்படுகிறது. கலை இலக்கியத் தளத்தில் செயல்பட்டோரும், அதற்கு வெளியே அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டோரும் உயர்த்திப் பிடித்த முற்போக்கான மரபு முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். பகுத்தறிவையும் சமுதாய விடுதலையையும் லட்சியமாகக் கைக்கொண்ட கலை இலக்கியவாதிகளும், மக்களுக்கான இயக்கங்களும் இந்த மரபை மக்களிடையே விரிவாகக்கொண்டு செல்லவும், பிற்போக்கு சக்திகளின் தாக்குதல்களிலிருந்து இந்த மரபைப் பாதுகாக்கவும் உறுதியேற்க வேண்டும்' என்றார்.

மாநாட்டுக்குத் தலைமையேற்ற த.மு.எ.க.ச மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், ''எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகள் 'புண்படுத்து​கின்றன’ என்று சொல்வதே நம்மை அவமதிப்பதாகும். சங்ககாலம் தொட்டு மதச்சார்பின்மை பாரம்பர்யத்தைச் சேர்ந்தவர்கள் நாம். நம் கருத்தைத் தற்காத்துக் கொள்வதற்காகச் சொல்லும் நிலையில் இருந்து, இன்று சமூக விரோத, பிற்போக்கு சாதி, மதவெறி சக்திகளுக்கு எதிர்வினை ஆற்றக்கூடியவர்களாக இருக்கிறோம். ஆனால், இனிமேல் முன்னேறித் தாக்குவோராக நாம் மாறுவோம். கருத்து​களைக் கருத்துகளால் எதிர்கொள்ள முடியாத கோழைகளின் வன்முறைக்கு 'நான் செத்து​விட்டேன்’ என்று சொல்லும் இயக்கம் அல்ல த.மு.எ.க.ச. தடைக்கற்களைத் தாண்டி வந்த சங்கம். மக்கள் செல்வாக்குப் பெற்ற எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் சூப்பர் தணிக்கைச் சட்டம் கொண்டு வந்தபோது, அதை எதிர்த்து யாரும் பேசவே தயங்கியபோது எதிர்த்து களம்கண்டது த.மு.எ.க.ச. அதன்பிறகே திரைத் துறையினர் அதை எதிர்க்க முன்வந்தனர். பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தபிறகு மிக மோசமான தாக்குதல்களைப் பிற்போக்கு சக்திகள் செய்யத் தொடங்கியுள்ளன. அவற்​றுக்கு எதிராக த.மு.எ.க.ச களத்தில் போராடி வருகிறது. இந்தக் கொங்கு மண்ணில்தான் பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் ஆகிய படைப்பாளிகள் தாக்கப்பட்டனர். சாதி மத வெறியர்கள் தங்கள் இஷ்டம்போல் செயல்படுவதற்கு இது ஒன்றும் குஜராத் அல்ல; தமிழ்நாடு. சிங்காரவேலர், பெரியார், ஜீவா, 'அடித்தால் திருப்பி அடி’ எனச் சொல்லிக் கொடுத்த சீனிவாச ராவ் ஆகியோரின் பாரம்பர்யத்தில் வந்தவர்கள் நாங்கள்'' என்று எச்சரித்தார்.

கருத்துரிமைக்கு இலக்கியவாதிகள்தான் போராட வேண்டும்!

கேரள புராகமன கலா சாகித்ய சங்கட்னா தலைவர் வி.என்.முரளி, ''பகுத்தறிவு விமர்சனம் கொண்ட ஜனநாயகத்தைத் தகர்க்க ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கிறது. ஆங்கிலத்தில் 'எம்’ என்ற எழுத்தில் தொடங்கக்கூடிய மார்க்சிஸம், முஸ்லிம், மெக்காலேயிஸம், மெசினிரி, மெட்டீரியலிஸம் எனும் ஐந்து 'எம்’களை, எதிரிகள் என்று அறிவித்து, அவற்றை முற்றிலும் ஒழித்துக் கட்டுவதுதான் தங்கள் வேலை என்று ஆர்.எஸ்.எஸ் சொல்கிறது. ஆர்.எஸ்.எஸ் இந்த நாட்டின் பன்முகத் தன்மைக்கு மிகப்பெரும் எதிரியாக உள்ளது. இன்று முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும். இப்போது இல்லாவிட்டால், வேறு எப்போது செய்வது? நாம் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள்?'' என்றார்.

மாநாட்டில், 'எந்த நிலையிலும் எமக்கு மரணமில்லை. புத்தகங்களே எங்களின் ஆயுதம்’ எனக் கூறி புத்தகங்களைக் கையில் ஏந்தி படைப்பாளிகள் உறுதிமொழி எடுத்தனர்.

கருத்துரிமை என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்பதை அழுத்தமாகச் சொல்லி நிறைவடைந்தது இந்த மாநாடு. அரசியல் உரிமைகளுக்காக இலக்கியவாதிகள் களம் காணத் தயாராகிவிட்டதை உணர்த்தியது இந்த மாநாடு.

ச.ஜெ.ரவி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு