Published:Updated:

ஆட்சியே போனாலும் கவலை இல்லை: மத்திய அமைச்சர் பேட்டி!

விகடன் விமர்சனக்குழு
ஆட்சியே போனாலும் கவலை இல்லை: மத்திய அமைச்சர் பேட்டி!
ஆட்சியே போனாலும் கவலை இல்லை: மத்திய அமைச்சர் பேட்டி!
ஆட்சியே போனாலும் கவலை இல்லை: மத்திய அமைச்சர் பேட்டி!

லக்னோ: நாட்டுக்காக கடினமான முடிவுகளை எடுக்கும்போது ஆட்சியே போனாலும் கவலை இல்லை என்று மத்திய உருக்குத்துறை அமைச்சர் பேனி பிரசாத் வர்மா கூறியுள்ளார்.
 
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடுக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மத்திய உருக்குத்துறை மந்திரி பேனி பிரசாத் வர்மா உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நிருபர்களுக்கு பரபரப்பு பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
உலக பொருளாதார நிலவரம் மோசமான நிலைமையில் இருக்கிறது. இந்தநிலையில், பிரதமர் மன்மோகன்சிங் ரிஸ்க் எடுத்து, அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி கொடுத்துள்ளார்.
 
இதையடுத்து, ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது. சந்தை நிலவரம் முன்னேற்றம் கண்டுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த முடிவு அத்தியாவசியமான மருந்து ஆகும்.
 
அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டதால், சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட மாட்டார்கள். அதற்கு மாறாக, விவசாயிகளுக்கு அவர்களது விளைபொருட்களுக்கு வயலிலேயே நல்ல விலை கிடைக்கும். மக்களுக்கும் மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கும்.
 
இடைத்தரகர்கள்தான், பணவீக்க உயர்வுக்கு முக்கிய காரணம் ஆகும். அவர்கள் பணக்காரர்களாக ஆகிவிட்ட நிலையில், பணவீக்கமும் உயர்ந்து விட்டது. அன்னிய நேரடி முதலீடு மூலமாக அவர்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள். மேலும், வேலையற்ற 3 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
 
எனவே, பொருளாதாரத்தை முன்னேற்ற கடினமான முடிவுகளை எடுக்கும்போது, ஆட்சியே போனாலும் கவலை இல்லை. அன்னிய நேரடி முதலீட்டை எதிர்ப்பதாக கூறும் கட்சிகள், கடந்த காலங்களில் தங்கள் தேர்தல் அறிக்கையிலேயே அதை சேர்த்திருந்தன.
 
கடந்த 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவும், கடந்த 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரசும் தங்கள் தேர்தல் அறிக்கையில் அன்னிய நேரடி முதலீட்டை ஆதரித்து இருந்தன. ஆனால் அதே கட்சிகள் இப்போது அன்னிய முதலீட்டை எதிர்க்கின்றன.
 
இந்த சூழ்நிலையில், மத்திய அரசுக்கு ஆதரவு அளித்து வரும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங்குக்கும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
 
மத்திய அரசுக்கான ஆதரவை மம்தா வாபஸ் பெற்றதால், மத்திய அரசில் அமைதி நிலவுகிறது. இந்த அரசுக்கு மெஜாரிட்டி இருப்பதால், எந்த ஆபத்தும் இல்லை. முழு பதவிக்காலமும் நீடிக்கும். அடுத்த தேர்தல், 2014-ம் ஆண்டுதான் நடக்கும்.
 
இவ்வாறு பேனி பிரசாத் வர்மா கூறினார்.