Published:Updated:

நடுத்தெருவில் நடந்த தாலி தகராறு !

கொந்தளித்த பெரியார் திடல்

மிழ்நாட்டில் ‘தாலி’ தவிர்க்க முடியாத விவாதப் பொருள் ஆகிவிட்டது. ‘தாலி’ தேவையா, இல்லையா என்று டி.வி ஒன்றில் விவாதம் ஏற்பாடு செய்யப்பட, அதை எதிர்த்து இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டி.வி அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. உடனே திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ‘தாலி அகற்றும் போராட்டம் நடத்தப் போகிறேன்’ என்று கிளம்பினார். ‘டாக்டர் அம்பேத்கரின்
125-வது பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி அன்று இது நடக்கும்’ என்றும் அறிவித்தார். அதற்கும் இந்து அமைப்பினர் கடுமையான எதிர்ப்பை காட்டினார்கள். உயர் நீதிமன்றம் வரை போனது விவகாரம்!

இந்த நிலையில்...

‘‘நான் அவரை மதிக்கிறேன்; நம்புகிறேன். அவர் என்னை மதிக்கிறார், நம்புகிறார். இதுதான் நல்ல வாழ்விணையருக்கு அழகு. இதைத்தாண்டி தாலி என்கிற ஒன்றைக் கட்டிக்கொள்வது நம்பகத் தன்மையில்லாதது. அதனால், நான் என் தாலியை அகற்றுகிறேன்’’ என்று சொல்லி சென்னை பெரியார் திடலில், 21 பெண்கள் தங்களுடைய கணவர்கள் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் தாலிகளை அகற்றினர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நடுத்தெருவில் நடந்த தாலி தகராறு !

இந்த நிகழ்ச்சி நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, அந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் தடைவிதித்தது. அதை எதிர்த்து திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன், ‘‘திராவிடர் கழகம் யாரையும் கட்டாயப்படுத்தி அவர்களுடைய தாலியை அகற்றவில்லை. அவர்களுக்குச் சொந்தமான இடத்தில் அவர்களுடைய கருத்துகளை பின்பற்றுபவர்களை வைத்து ஜனநாயக முறையில் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இதற்கு, போலீஸ் விதித்த தடை ரத்து செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பை போலீஸ் வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து, கடந்த 14-ம் தேதி தாலி அகற்றும் நிகழ்வு, மாட்டுக்கறி விருந்துக்கு திராவிடர் கழகத்தினர் தயாராயினர். சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்கு நேர் எதிரில் பெரியார் திடல் உள்ளதால், அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டது.

காலை 6 மணிக்கே திராவிடர் கழகத்தினர் பெரியார் திடலில் குவியத் தொடங்கினர். 7.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. அதில் பேசிய பெண் ஒருவர், “பெண்களுக்கு மட்டும் திருமணம் ஆகிவிட்டது என்பதற்காக அணிவதுதான் தாலி என்றால், ஆணுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பதற்கு என்ன அடையாளம்?” என்று சொல்லி தாலியை அகற்றினார். அவரை தொடர்ந்து ஒவ்வொரு பெண்ணாகத் தங்களின் தாலியை அகற்றினர். தங்களது கணவர் வர இயலாத நிலையில், அவர்களின் ஒப்புதலோடும் மனம் உவந்தும் இந்த அடிமைச் சின்னத்தை அகற்றிக் கொள்கிறோம் என்று பெண்கள் தங்களின் தாலிகளை அகற்றினர்.

நடுத்தெருவில் நடந்த தாலி தகராறு !

நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த நேரத்தில், இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் சார்பில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விடம் அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே.வேணுகோபால், அக்னி ஹோத்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு, “சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால், இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கிறோம்” என்று சொல்லி தடைவிதித்தனர்.
அந்த உத்தரவு வருவதற்குள் தாலி அகற்றும் நிகழ்ச்சியை  நடத்தி முடித்தனர் திராவிடர் கழகத்தினர். ஆனால், அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் மற்றும் மாட்டுக்கறி பிரியாணி வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் மீண்டும் தடை விதித்தது. அதனால், பதிவு செய்திருந்தவர்களுக்கு மாட்டுக்கறி பிரியாணி பார்சல் கட்டி கொடுக்கப்பட்டது.

அப்போது கி.வீரமணி, “1933-ம் ஆண்டு முதல் தாலி அகற்றும் நிகழ்ச்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அமைதியாக நிகழ்ச்சியை நடத்தும் எங்களுக்குத் தடை விதிக்கும் அரசு, கலவரம் செய்வோம் என்பவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்கிறது. இந்துத்துவா சக்திகளின் பின்னால் தமிழக அரசு இருக்கிறது என்பதற்கு இது உதாரணம்” என்று குற்றம்சாட்டினார்.

‘‘இந்துத்துவா அமைப்பினர் மதியம் 3 மணிக்கு அந்த ஏரியாவுக்குள் வந்தார்கள். அதுவரை அந்தப் பக்கம் எந்த வாகனத்தையும் போலீஸார் அனுமதிக்கவில்லை. ஆனால், அந்த ஆட்டோக்களை மட்டும் அனுமதித்துவிட்டார்கள். தடுப்பை திறந்து அனுமதித்து விட்டார்கள். அந்த ஆட்டோவில் இறங்கியவர்கள், பெரியார் திடலுக்குள் நுழைய முயற்சித்தார்கள். அப்போது திடல் வாசலில் தி.க.வினரும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் தடுப்பு அமைத்து நின்றுகொண்டு இருந்தனர். ஆட்டோவில் இருந்து இறங்கிய இந்துத்துவா அமைப்பினருக்கும் இவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இரண்டு தரப்புக்கும் அடி விழுந்தது. அப்போது போலீஸ் உள்ளே நுழைந்து தடியடி செய்து கூட்டத்தைக் கலைத்தது. இரண்டு தரப்பிலும் சிலரைக் கைதுசெய்துள்ளார்கள். ‘‘திட்டமிட்டு அந்த ஆட்டோக்களை மட்டும் போலீஸார் உள்ளே அனுமதித்தார்கள்” என்று தி.க-வினர் புகார் சொன்னார்கள்.  இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, பெரியார் படத்தை அவமதிப்பது, கொடும்பாவி எரிப்பது போன்ற காரியங்கள் தொடங்கி உள்ளன. கருத்து மோதல்கள் கல் மோதலாக மாறாமல் தடுக்க வேண்டியது தமிழக அரசின் கையில் உள்ளது!

- ஜோ.ஸ்டாலின்
படங்கள்: வீ.நாகமணி, ஆ.முத்துக்குமார்

ஆணாதிக்கத்தின் சின்னம்!

நடுத்தெருவில் நடந்த தாலி தகராறு !

வழக்கறிஞர் அருள்மொழி இப்படிச் சொல்கிறார்.... ‘‘ஒரு பெண் கணவனை இழந்ததும், அந்தப் பெண்ணின் தாலியை அறுத்து, பொட்டை அழித்து, வளையல்களை உடைத்து நடத்தப்படும் சடங்கு அவளுக்கு எத்தனை வேதனையைத் தரும். குரூரமான அந்தச் சடங்கை இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி ரசித்துக் கொண்டிருக்கும் சிலர், எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள், தங்களுக்கு பூட்டப்பட்ட அடிமைச் சின்னமான தாலியை கணவர் சம்மதத்தோடு அவர்கள் முன்னாலேயே கழற்றியதைப் பார்த்து ஆத்திரப்படுகின்றனர்’’ தாலி என்பது தமிழ் பண்பாடு என்கின்றனர். ஆதாரத்தைக் காட்டச் சொன்னால் இவர்களால் காட்ட முடியவில்லை. மிக பிற்காலத்தில் திணிக்கப்பட்ட சடங்கு அது. ஆணாதிக்கத்தின் சின்னம் என்பதால் அகற்றச் சொல்கிறோம்!’’

“பயந்துபோய் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள்!”

நடுத்தெருவில் நடந்த தாலி தகராறு !

பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர்  ஹெச்.ராஜா: “10 மணிக்கு நிகழ்ச்சி என்று சொல்லிவிட்டு, அதிகாலையில் 6 மணிக்குக் கதவை சாத்திக்கொண்டு, பயந்துபோய் நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார் வீரமணி. ‘இதில் கலந்துகொண்டவர்களின் பின்னணி விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும், என்று நான் சொல்கிறேன். அதை அவரால் செய்ய முடியவில்லை.’’

‘உயிரோடும் உணர்வோடும் கலந்தது!’

நடுத்தெருவில் நடந்த தாலி தகராறு !

தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்: ‘‘உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பெண்களைத் தாலியை கழட்டச் சொன்னால்கூட  அவர்கள், ஒரு மஞ்சள் கயிற்றை எடுத்துக் கழுத்தில் கட்டிக்கொண்டே பின்புதான், தாலியைக் கழட்டித் தருகிறார்கள். மதத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது யாரும் சொல்லிக்கொடுத்தோ இத்தகைய செயலை எவரும் செய்யமாட்டார்கள். பெண்களுக்கு தாலியின் நம்பிக்கை அவர்களுடைய உயிரோடு, உணர்வோடு கலந்திருக்கிறது. பெண்கள் இனத்தை, உணர்வை யாரும் இழிவுபடுத்த முடியாது’’

- ஜெ.பிரகாஷ்