Published:Updated:

கந்துவட்டியால் தற்கொலைக்குத் தள்ளப்படும் குடும்பங்கள்..! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கந்துவட்டியால் தற்கொலைக்குத் தள்ளப்படும் குடும்பங்கள்..! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்
கந்துவட்டியால் தற்கொலைக்குத் தள்ளப்படும் குடும்பங்கள்..! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

கந்துவட்டியால் தற்கொலைக்குத் தள்ளப்படும் குடும்பங்கள்..! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நெல்லை மாவட்டத்தில் மீண்டும் கந்து வட்டி கலாச்சாரம் தலைதூக்கத் தொடங்கி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த 4 பேரில் மூவர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

வேலை வாய்ப்பில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் நெல்லையும் ஒன்று. இங்கு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் அதிகம் இல்லாததால் மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலைமை உள்ளது. மழை பொய்த்துப் போவது, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இருப்பது போன்ற காரணங்களால், பிழைப்புத் தேடி பலர் வெளி மாநிலங்களுக்குச் சென்று கூலிவேலை செய்து வருகின்றனர். 

பெண்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியத் தொழிலான விவசாயம் பொய்த்துப் போன நிலையில், கட்டுமானத் தொழிலில் கூலி வேலைக்குச் சென்று வந்தனர். ஆனால், பத்திரப் பதிவுத் துறையில் நிலவும் குழப்பத்துக்கு முடிவு எட்டப்படாத நிலையில், அந்தத் தொழிலும் நலிவடைந்து விட்டது. இதனால் குடும்பச் செலவு, குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், மருத்துவச் செலவு போன்றவற்றுக்காக கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். 

இதனைப் பயன்படுத்தும் கும்பல், அப்பாவி மக்களிடம் மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, நாள் வட்டி, வார வட்டி என பல்வேறு வகைகளில் வட்டி வசூலிக்கின்றனர். பாளையங்கோட்டையைச் சேர்ந்த கோபால் ஆசாரி என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் சயனைடு விஷம் அருந்தி உயிரிழந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கந்து வட்டிக் கொடுமையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கடந்த சில வருடங்களுக்கு முன்னர், புளியங்குடியைச் சேர்ந்த இரும்பு வியாபாரி குமார் கந்து வட்டி கொடுமையால் தனது மனைவி மற்றும் இருகுழந்தைகளுடன் விஷம் குடித்தார். இதில், குமார் உயிரிழந்தார். ஆலங்குளத்தில் சுமை தூக்கும் தொழிலாளியான லிங்கம் அவரது மனைவி தங்கம், மகள்கள் மணியரசி, இளவரசி ஆகியோர் விஷம் அருந்தினர். நெல்லை டவுனில் கோமதி என்பவர் கந்து வட்டி கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். 

நெல்லை டவுனில் கார் மெக்கானிக்கான நல்லகண்ணு, அவரது மனைவி சொர்ணலதா, மகள் திவ்யலட்சுமி ஆகியோர் கந்து வட்டி கொடுமை தாங்கமுடியாமல் விஷம் குடித்தனர். இதில் திவ்யலட்சுமி மட்டுமே உயிர் பிழைத்தார். இது போல கந்து வட்டி கும்பலில் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வள்ளியூரைச் சேர்ந்த பாபு இளங்கோ என்ற ஆசிரியர் கந்து வட்டிக்காரர்களின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். 

நெல்லை மாநகரைப் பொறுத்தவரையில் மார்க்கெட், பஸ் நிலையம் என எந்தவொரு இடத்தின் வியாபாரமாக இருந்தாலும் அதை தீர்மானிப்பது கந்து வட்டிக்காரர்கள்தான். நாள் வட்டி செலுத்தியே பல வியாபாரிகள் அசலையும் இழந்து வருகின்றனர். பீடித் தொழிலில் கூட தற்போது வட்டி பீடி முறை வந்து விட்டது. இதனால், நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் சம்பாதிக்கும் தொழிலாளர்கள் 50 ரூபாயைக் கூட குடும்பத்துக்குச் செல்விட முடியாத அவலம் உள்ளது. 

இந்த நிலையில், கந்து வட்டி கொடுமையை சமாளிக்க முடியாத கூலித் தொழிலாளியான இசக்கிமுத்து தனது மனைவி சுப்புலட்சுமி மகள்கள் மதி சரண்யா, அட்சய பரணிகா ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திலேயே மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதில் சிகிச்சைப் பலனின்றி சுப்புலட்சுமியும், குழந்தைகள் மது சரண்யா, அட்சய பரணிகா ஆகியோர் உயிரிழந்து விட்டனர். 

இசக்கி முத்துவும் உயிருக்குப் போராடி வருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்திற்கு காரணமாக இருந்த கந்து வட்டி கும்பலைச் சேர்ந்த முத்துலட்சுமி அவரது கணவர் தளவாய், மாமனார் சோனாக்காளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மீண்டும் இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் தலை தூக்கும் கந்து வட்டி கலாச்சாரத்தை ஒழிக்க முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு