Election bannerElection banner
Published:Updated:

"நெல்லையில் நடந்த தீக்குளிப்புச் சம்பவம் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்பதையே காட்டுகிறது!" -கடுகடுத்த தமிழிசை!

"நெல்லையில் நடந்த தீக்குளிப்புச் சம்பவம் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்பதையே காட்டுகிறது!" -கடுகடுத்த தமிழிசை!
"நெல்லையில் நடந்த தீக்குளிப்புச் சம்பவம் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்பதையே காட்டுகிறது!" -கடுகடுத்த தமிழிசை!

"நெல்லையில் நடந்த தீக்குளிப்புச் சம்பவம் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்பதையே காட்டுகிறது!" -கடுகடுத்த தமிழிசை!

"திருநெல்வேலியில் கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்த சம்பவம், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை; காவல்துறையின் நடவடிக்கைகள் சரியில்லை என்பதையே காட்டுகிறது" என்று கரூரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம் சாட்டினார்.


 

கரூர்-கோவை சாலையில் உள்ள கொங்கு மண்டபத்தில், பா.ஜ.க மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு முடிந்ததும் பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், "ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நிறுத்தப்பட்டது பற்றி முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அ.தி.மு.க வேட்பாளர்கள், பல கோடி ரூபாய்களை அங்கே புழங்கவிட்டதை விசாரிக்க வேண்டும். அதை எல்லாம் விசாரித்து, நடவடிக்கை எடுத்தபிறகு, ஆர்.கே.நகர் தொகுதிக்குத் தேர்தலை அறிவித்தால், பா.ஜ.க சார்பில் நாங்கள் வேட்பாளரை நிறுத்துவோம். அங்கே முறையாக தேர்தல் நடந்தால், கண்டிப்பாக பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்தான் வெற்றிபெறுவார்.

திருநெல்வேலியில், கந்து வட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்த சம்பவம், கல்நெஞ்சையும் கரையச்செய்யும் கொடுமை.  அவர்களை அந்த நிலைக்குத் தள்ளிய அத்தனை பேரையும் இந்த நேரத்தில் நான் கண்டிக்கிறேன். 2003-ம் ஆண்டு, கந்துவட்டிக் கொடுமையை ஒழிக்க, அப்போதைய அரசால் இயற்றப்பட்ட சட்டத்தை இப்போது உள்ளவர்கள் செயல்படுத்தாததன் விளைவே, இந்த கொடூரச் சம்பவம். திருநெல்வேலியில் சிறுதொழில்கள் அதிகம். அதில் வேலைபார்ப்பவர்கள், குடும்பத்தை ஓட்ட இப்படி கந்துவட்டிக் கும்பலிடம் மாட்டி, அல்லல்படுகிறார்கள். இந்தச் சம்பவத்தில், தமிழக முதலமைச்சரை நான் நேரடியாகவே குற்றம் சாட்டுகிறேன்.

இந்தச் சம்பவம், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்பதையே காட்டுகிறது. காவல்துறை நடவடிக்கைகள் மோசமாக இருக்கின்றன என்பதையும் இது காட்டுகிறது. சட்டம்- ஒழுங்கை காப்பாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது பெய்துவரும் மழையை சேமிக்க அரசு முயல வேண்டும். பாலாற்றில் வெள்ளம் போகும் அளவுக்கு தண்ணீர் வருகிறது. அவற்றைத் தேக்க துணை அணைகள் அமைக்க ஏற்பாடுசெய்ய வேண்டும். அனைத்து நீர்நிலைகளையும் தூர் வாரி, மழைநீரை சேமிக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி பற்றி 'மெர்சல்' படத்தில் விஜய் காட்சி வைத்திருப்பதை நான் இப்போதும் கண்டிக்கிறேன். ஜி.எஸ்.டி இங்கு மட்டுமல்ல, உலகத்தில் 124 நாடுகளில் உள்ளது. இந்த வரிவிதிப்பு மசோதாவை பிரதமர் தன்னிச்சையாக அறிவித்துவிடவில்லை. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி, எதிர்க்கட்சிகள் மற்றும் அனைத்து மாநில நிதி அமைச்சர்களின் ஒப்புதலோடுதான் இந்த வரியை அமல்படுத்தினோம். அதனால், இந்த வரியைப் பற்றி தவறான கருத்துகளை விஜய் படத்தில் தெரிவித்ததை நானோ, ராஜாவோ கண்டித்ததில் என்ன தவறு இருக்கிறது? நடிகர் விஜய் ஒரு பிரபலம். அவர் எந்தக் கருத்தைச் சொன்னாலும் அது அப்படியே மக்கள் மனதில் பதியும். அவர் சொல்வதை அப்படியே மக்கள் நம்பும் அபாயம் இருக்கிறது. அவர், ஜி.எஸ்.டி பற்றி சொல்லியிருப்பது பொய்யான குற்றச்சாட்டு என்பதால், அதை மறுத்துப் பேசும் உரிமை எங்களுக்கு உண்டு. அவருக்கு எப்படி கருத்துச் சொல்ல உரிமை இருக்கிறதோ, அதே அளவு உரிமை, அவர் சொல்கிற பொய்களைப் பற்றி தோலுரித்து விமர்சனம் பண்ணும் கருத்துச் சுதந்திரமும் எங்களுக்கு இருக்கிறது. அந்த அடிப்படையிலேயே விஜய் இட்டுக்கட்டிய பொய்க்குற்றச்சாட்டை மக்கள் முன்பு அம்பலப்படுத்துகிறோம்" என்றார் அதிரடியாக!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு