'எரிவாயு சம்பந்தமான குறைபாடுகளைச் சரிசெய்துகொள்ளலாம்' கரூர் மாவட்ட ஆட்சியர் தகவல்!

'எரிவாயு சம்பந்தமான குறைபாடுகளைச் சரிசெய்துகொள்ளலாம்' கரூர் மாவட்ட ஆட்சியர் தகவல்!
'கரூர் மாவட்டத்தில், எரிவாயுவைப் பயன்படுத்தும் நுகர்வோர்கள், வரும் 27-ம் தேதி நடைபெறும் எரிவாயு சம்பந்தமான குறைகளை நிவர்த்திசெய்யும் முகாமில் சரிசெய்துகொள்ளலாம்' என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும், மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காணப்படும் குறைகள், நுகர்வோர் பதிவுசெய்த குறைகளின்மீது நடவடிக்கை எடுப்பதில் காணப்படும் எரிவாயு முகவர்களின் மெத்தனப்போக்கு தொடர்பாக வரப்பெறும் புகார்களைப் பெற்று, உரிய நடவடிக்கைகள் எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தைச் சீர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. அதற்கு ஏதுவாக, கரூர் மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்களுடன் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில், எதிர்வரும் 27-ம் தேதியன்று மாலை 3 மணியளவில், நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, எரிவாயு நுகர்வோர்கள், மேற்படி நாளில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.