கொசுவால் ரூ.15 லட்சம் அபராதம்! தனியார் பேருந்து நிறுவனத்தை அதிரவைத்த கலெக்டர் ரோகிணி!

கொசுவால் ரூ.15 லட்சம் அபராதம்! தனியார் பேருந்து நிறுவனத்தை அதிரவைத்த கலெக்டர் ரோகிணி!
சேலத்தில், டெங்கு கொசு உற்பத்தியாகியிருந்த தனியார் பேருந்துப் பணிமனைக்கு, மாவட்ட ஆட்சியர் ரோகிணி 15 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடுமையாக இருந்துவருகிறது. டெங்கு காய்ச்சலின் காரணமாக, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலை ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. இருப்பினும் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே தற்போது, மாவட்ட நிர்வாகம் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகிறது. மாவட்ட ஆட்சியர்கள், அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று டெங்கு கொசு குறித்த ஆய்வில் ஈடுபட்டுவருகின்றனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, இன்று காலையில் டெங்கு கொசு ஒழிப்புகுறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சேலத்திலுள்ள எல்.ஆர்.என் என்ற தனியார் போக்குவரத்துப் பணிமனையில் டெங்கு கொசு உற்பத்தியாகியிருந்தது. அதைப் பார்த்த ஆட்சியர், பேருந்து நிறுவனத்துக்கு 15 லட்ச ரூபாய் அபராதம் விதித்தார். ஏற்கெனவே, அந்தப் பேருந்துப் பணிமனையில் கொசு உற்பத்தி இருந்ததால் மாநகராட்சி நிர்வாகம் 2,000 ரூபாய் அபராதம் விதித்திருந்தது. அதற்குப் பிறகும் தண்ணீர் தேங்கியிருப்பதைச் சரிசெய்யாத நிலையில், மாவட்ட ஆட்சியர் 15 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.