Published:Updated:

நான், எப்படி டாக்டர் அழாம இருக்க முடியும்?

நான், எப்படி டாக்டர் அழாம இருக்க முடியும்?

விகடன் குழுமத்துடன் இணைந்து அரங்கேறியது புனே தமிழ்ச் சங்கத்தின் 13-வது ஆண்டு விழா. புனே, மங்கல்வார் பேத்தில் உள்ள ஹோட்டல் டூரிஸ்ட் இண்டர்நேஷனலில் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புனே தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் பாலாஜி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க... தலைவர் ராஜேஷ் வரவேற்க நிகழ்ச்சி ஆரம்பமானது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மருத்துவர் கு.சிவராமன், ‘பசியாற்றும் பாரம்பர்யம்’ என்ற தலைப்பில் பேசினார். ‘‘ஜூனியர் விகடன் இதழ் சார்பில் கல்லூரி மாணவர்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘தமிழ் மண்ணே வணக்கம்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். இப்போது நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகும் விஷயமும் கிட்டதட்ட இன்னொரு தமிழ் மண்ணே வணக்கம்தான்! இன்று நாம் உண்ணுகிற உணவு ஆரோக்கியமானதா என்று ஒரு முறை உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள். நிச்சயமாக இல்லை. நாம் உண்ணுகிற உணவு இன்று சிதைக்கப்பட்டு, ‘உணவு அரசியலி’ன் பிடியில் சிக்கித் தவிக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நான், எப்படி டாக்டர் அழாம இருக்க முடியும்?

கடந்த வாரத்தில் என்னுடைய மருத்துவமனைக்கு கணவனும் மனைவியும் அவர்களின் மூன்று வயது குழந்தையுடன் வந்திருந்தார்கள். அவர்கள் இருவருமே சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். இருவரும் சேர்ந்து மாதம் இரண்டு லட்சம் சம்பாதிக்கிறார்கள். காதலித்து திருமணம் செய்தவர்கள். அந்தப் பெண்ணுக்காகத்தான் என்னிடம் அப்பாயின்மென்ட் வாங்கியிருந்தார்கள். ‘ரெண்டு மாசமா இவ சரியா சாப்பிடுறதும் இல்லை. தூங்குறதும் இல்லை. எப்பவும் அழுதுகிட்டே இருக்கா டாக்டர்’ என்று சொன்னார் அந்தக் கணவர். என்னம்மா பிரச்னை என்று கேட்டேன். அந்தப் பெண் பதில் எதுவும் சொல்லாமல் அழ ஆரம்பித்துவிட்டார். அவரை சமாதானப்படுத்திப் பேச வைத்தேன். ‘ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இவருக்கு அடிக்கடி தலைவலி வந்துச்சு டாக்டர். கண் டாக்டரைப் போய் பார்த்தோம். அவர் கண்ணில் எதுவும் பிரச்னை இல்லை என்று பொது மருத்துவரைப் பார்க்க அனுப்பி வைத்தார். அங்கேயும் போனோம். ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் மூளையில் புற்றுநோய் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். காலையில் வீட்டில் இருந்து கிளம்பும்போது சந்தோஷமாகத்தான் போனோம். சாய்ந்திரம் இவருக்கு கேன்சர் என்கிறார்கள். எப்படி டாக்டர் தாங்க முடியும்? இத்தனைக்கும் இவருக்கு எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது. இந்தச் சூழ்நிலையில நான், எப்படி டாக்டர் அழாம இருக்க முடியும்’ என்று அவர் சொல்ல... நான் ஆடிப்போனேன். 30 வயதில் எந்தத் தப்பான பழக்கமும் இல்லாத அவருக்கு எப்படி வந்தது கேன்சர்? அதற்கு ஒரே காரணம் நம் சூழலும், உணவும்தான்!

நான், எப்படி டாக்டர் அழாம இருக்க முடியும்?

நம் வீட்டில் கோழிக்கறி சமைத்தால் அதில், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி என்று என்னவெல்லாம் சேர்க்கிறோம் என்பது தெரியும். இப்போது ஒரு கடையில் விற்கப்படும் கோழி வறுவலில் 110 வகையான கெமிக்கல் சேர்க்கிறார்கள். அதில் சேர்க்கப்படும் கெமிக்கல் என்ன..? அது ஏற்படுத்தும் விளைவுகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது. இன்றைய இளைஞர் கூட்டம் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அந்தக் கடையயைத்தான் மொய்க்கிறது. முன்பெல்லாம் சின்ன பாக்கெட்டில் கொடுத்த அந்தக் கோழி வறுவலை இன்று பக்கெட்டில் கொடுக்கிறார்கள். ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து அதை உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். ‘குடும்பத்துடன் சாப்பிடுங்க... குடும்பத்துடன் போய் சேருங்க’ என்று நினைக்கிறார்கள்போல!

அதேபோல பர்க்கரில் சேர்க்கப்படும் ‘மயோனைஸ்’ எப்படி தயாரிக்கிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா? எப்படி தயாரித்தாலும் நமக்கு கவலை இல்லை. பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்க வேண்டும். சுவையாக இருக்க வேண்டும். அப்படி எதைக் கொடுத்தாலும் சாப்பிடத் தயாராக இருக்கிறோம். இதுபோன்ற உடலுக்கு ஒவ்வாத உணவுகள் உடலில் சேரும்போது ஏற்படும் மாற்றத்தினால்தான் கேன்சர் உள்ளிட்ட பல நோய்க்கூட்டங்கள் நம்மைத் தாக்குகின்றன.

குறிப்பிட்ட எண்ணெய்யை உணவில் சேர்த்துக்கொண்டால் ஹார்ட் அட்டாக் வராது என்று விளம்பரப்படுத்துகிறார்கள். ஏன் நம்ம ஊர் எள் எண்ணெயில் இல்லாத சத்துக்களா அந்த எண்ணெயில் இருக்கிறது? குறிப்பிட்ட எண்ணெய்க்கு நம்மைப் பழக்கப்படுத்திவிட்டால் அதற்காக நாளை ஐரோப்பிய நாடுகளிடம் கையேந்தி நிற்க வேண்டும். அதற்காகத்தானே இந்த விளம்பரங்கள். நம்ம ஊர் சிறுதானியங்களில் இல்லாத சத்துக்களே இல்லை. அதனால் தயவுசெய்து நம் குழந்தைகளை நம் ஊர் சிறுதானியங்களை சாப்பிடப் பழக்கப்படுத்துங்கள். அதுதான் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு நீங்கள் சேமித்து வைக்கப்போகும் மிகப்பெரிய சொத்து!’’ என்று முடிக்க கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது.

நிகழ்ச்சியின் நிறைவாகக் கூட்டத்துக்கு வந்திருந்த பலரும் அவர்களின் சந்தேகங்களை மருத்துவர் சிவராமனிடம் கேட்க, நிதானமாக பதில் சொன்னார். இதுவரை மாணவர்கள் மத்தியில் பேசப்பட்ட தகவல்கள் மக்கள் மத்தியிலும் கொண்டு செல்லும் வாய்ப்பாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

- கே.ராஜாதிருவேங்கடம்