Published:Updated:

“நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள்தானா?”

குமுறும் மாற்றுத்திறன் மகளிர்

ஊனமுற்ற உடலமைப்போடு பிறந்தாலும் எங்கள் மனதுக்கு ஊனமில்லை. எங்களுக்கு உரிய பாதுகாப்பும் உதவிகளும் கிடைக்க வேண்டும் என்கிற முழக்கங்களோடு 15-வது மகளிர் மாநில மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார்கள், சமுதாய அனைத்து மாற்றுத்திறன் மகளிர் வாழ்வுரிமை அமைப்பினர். 

மாநிலத் தலைவியான லலிதாம்பிகை, ‘‘மாற்றுத்திறன் மகளிரான எங்களின் திறமையை ஊக்குவித்து உரிய உதவிகளைச் செய்தால் எங்களின் வாழ்வாதாரம் மேம்படும். மனவளர்ச்சிக் குன்றிய குழந்தைகளை வைத்துக்கொண்டு எத்தனையோ ஏழைத் தாய்மார்கள் வாழவே சிரமப்படுகிறார்கள். அவர்களின் ஏழ்மை நிலையை கருத்தில்கொண்டு, அரசு மாநிலம் முழுவதும் பல்வேறு சுயதொழில் பயிற்சிகளையும் தொழில் தொடங்க வேண்டிய உதவிகளையும் தடையின்றிச் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாரியத்தில், மாற்றுத்திறன் பெண் சேவையாளர்களை பணியமர்த்திட வேண்டும். அப்போதுதான் மாற்றுத்திறன் மகளிர் தங்கள் பிரச்னைகளை எளிதில் அங்கு முன்வைக்க முடியும்’’ என்றார்.

“நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள்தானா?”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

துணைத் தலைவியான ரேமா ரவி, ‘‘கை, கால் சுகத்தோடு இருக்கிறவர்களே மாடிப்படிகளில் ஏறி இறங்குவதற்குச் சிரமப்படுவார்கள். மாற்றுத்திறனாளிகளான எங்கள் நிலைமையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். பல மருத்துவமனைகளில் மாடிகளுக்குச் செல்ல சாய்தள வசதி கிடையாது. அரசு மருத்துவமனைகளில் எங்களுக்குச் சரியான மருத்துவ வசதி கிடைப்பது இல்லை. காது கேளாத, வாய் பேச முடியாத, பார்வையற்ற எங்களின் பலரது பிரச்னைகளைப் புரிந்துகொண்டு சிகிச்சை அளிக்கக்கூடியவர்கள் அங்கு இல்லை. மருந்து, மாத்திரை பெறுவதிலும் பரிசோதனைக்குச் செல்லும் இடங்களிலும் எங்களுக்கு வழிகாட்டவோ, உதவி செய்யவோ யாரும் இல்லை. மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்கு என தனியே பணியாளர்களை நியமித்தால் எங்களுக்குப் பேருதவியாக இருக்கும்’’ என்றார்

“நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள்தானா?”

ஆதங்கத்தோடு. மாநிலச் செயலாளரான மகேஸ்வரி, ‘‘பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் இன்று பெருமளவில் நிகழ்த்தப்படுகின்றன. அதிலும் மாற்றுத்திறனாளிப் பெண்கள் இந்தக் கொடுமைகளுக்கு ஆளாகும்போது அவர்களின் நிலை மிகுந்த வேதனைக்குரியது. குறிப்பாக, மனநிலை குன்றிய மாற்றுத்திறனாளி பெண்கள் இதில் சிக்கித் துன்புறும்போது, எதிர்த்து தன்னைக் காத்துக்கொள்ள இயலாதவர்களாகவும் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமையை சொல்லத் தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள். 

மாற்றுத்திறன் மகளிரை பாலியல் ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ, சித்ரவதை செய்து இழிவுபடுத்துதல் போன்ற கொடுமைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மாற்றுத்திறன் மகளிருக்கென, ‘சிறப்பு சமூகப் பாதுகாப்புக் கொள்கை’ மகளிர் ஆணையத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டு சட்டரீதியான பாதுகாப்புக் கிடைத்திட வேண்டும்.

பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளி மகளிருக்கு மூன்று சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, சொத்துரிமை என எல்லாவற்றிலும் நாங்கள் முக்கியத்துவம் இன்றி இருக்கிறோம். நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள்தானா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. பொது இடங்களில் தனியாக எங்களுக்கேற்ற கழிப்பறை வசதி இல்லாததால் நாங்கள் படும் வேதனை சொல்லில் அடங்காது’’ என்று பொருமித் தள்ளினார்.

மாநிலப் பொருளாளரான அருணாதேவி, ‘‘மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு, முழு பங்களிப்பு, உரிமைப் பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்த 1995-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இன்றுவரை அமல்படுத்தாமல் செயலற்றுக்கிடக்கிறது. அதனை உடனடியாகச் செயல்படுத்துதல் வேண்டும். மாற்றுத்திறன் மகளிரை ஏமாற்றி எய்ட்ஸ் நோய் உள்ளவர்களுக்குத் திருமணம் செய்துவைக்கும் கொடுமைகளிலிருந்தும் பாதுகாப்பு வேண்டும். பெண்களுக்கான அரசு வழங்கும் திருமண உதவிகள் அனைத்தும் மாற்றுத்திறன் மகளிருக்குத் திருமணம் முடிந்ததும் எல்லாமே பொருட்களாக இல்லாமல் காசோலையாக வழங்கப்பட வேண்டும்’’ என்றார்.

மாற்றுத்திறன் மகளிர் வாழ்வில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

- பி.ரியாஸ் அஹமது
படங்கள்: வீ.நாகமணி