Published:Updated:

‘‘மாணவர்கள் அதிகமானால் கவனம் குறையும்!’’

மதுரையில் ஒரு நன்முறை பள்ளி

இது பள்ளிகள் திறக்கும் காலம். பள்ளிகளில் இடங்களைக் கைப்பற்றும் நேரம். மதிப்பெண்களை மலையளவு குவிக்கும் பிள்ளைகள் அதிகமாக ஆகிவிட்டதால் போட்டிகளும் கடுமையாக இருக்கின்றன. பரிந்துரைக் கடிதங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பள்ளி நிர்வாகங்கள் திணறுவதும் உண்டு. இடம் கிடைக்காதவர்கள், நிர்வாகத்தின் மீது பாய்வதும் ஆங்காங்கே நடந்து கொண்டும் இருக்கிறது. மதுரையில் இருந்து ஓர் உதாரணம்!

இந்த ஆண்டு நடந்த ப்ளஸ் டூ தேர்வில் மதுரை மாவட்ட அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதலிடம் பிடித்த ராம்சந்தர் என்ற மாணவன் படித்தது மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகே  செயல்படும் தியாகராஜர் நன்முறை மேல்நிலைப் பள்ளி. இந்தத் தகவல் வந்த அதே நேரத்தில் ஒரு சர்ச்சையும் கிளம்பியது. ‘‘எங்களுக்கு வேண்டுமென்றே பள்ளியில் இடம் கொடுக்காமல் இந்த நிர்வாகம் அலைக்கழிக்கிறது. அவர்களுக்கு உள்நோக்கம் உள்ளது” என்று சில பெற்றோர்கள் புகார் சொன்னார்கள். அரசு உதவிபெறும் இந்தப்பள்ளியில் 1,680 மாணவர்கள் படிக்கிறார்கள்.

‘‘டிஜிட்டலைஸ் பண்ணப்பட்ட ஆறு ஸ்மார்ட் வகுப்புகள் இங்கு உள்ளன. 40 பேர் மட்டும் அமரக்கூடிய விசாலமான வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வகையான விளையாட்டுகளும் விளையாடக் கூடிய வகையில் மைதானம். குளிர் வசதி செய்யப்பட்டு 60-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களுடன் லேப். ப்ளஸ் டூ மாணவர்களுக்காக ஒரு லேத் ஒர்க் ஷாப் உள்ளே இருக்கிறது. இதில் கற்றுக்கொண்டு இன்ஜினீயரிங் சேர்கிறவர்களுக்கு ரொம்ப ஈஸியாக இருக்கும். மாணவர்கள் கற்று உருவாக்கிய பல பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

‘‘மாணவர்கள் அதிகமானால் கவனம் குறையும்!’’

அங்குள்ள வகுப்பறைகளுக்கு 63 நாயன்மார்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு தனி கவனம் எடுத்து கற்றுக்கொடுக்க தனி வகுப்பறை உள்ளது. அவர்களுக்கென்று சிறப்பு ஆசிரியரும் உள்ளனர். அதனால்தான் இதுபோன்ற வசதிகள் உள்ள பள்ளிகளில் சேர்க்க நினைக்கிறோம்” என்று அந்த வளாகத்தில் நின்று கொண்டிருந்த பெற்றோர்கள் சொன்னார்கள். ‘‘எங்கள் பிள்ளைகளுக்கு ஸீட் கிடைக்குமோ இல்லையோ?” என்ற வருத்தத்துடனும் சிலர் அதில் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

பள்ளி முதல்வர் செந்தில் அரசுவின் கவனத்துக்கு இதனைக் கொண்டு சென்றோம்.

 ‘‘சேவை நோக்கத்துடன் கருமுத்து தியாகராஜ செட்டியாரால் 1957-ல் தொடங்கப்பட்ட பள்ளி இது. தங்களுடைய அறக்கட்டளை மூலம் வருடத்துக்குப் பல லட்சம் ரூபாய் ஒதுக்கி இந்தப் பள்ளிக்கும், மாணவர்களுக்கும் பல சேவைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அரசு சம்பளம் வழங்கும் ஆசிரியர்கள் 20 பேர்தான். 44 ஆசிரியர்களை நிர்வாகமே நியமித்து அதிகமான சம்பளம் கொடுத்து வருகிறது. ஆசிரியர் அல்லாத பணியாளர்களில் அரசு ஊதியம் பெறுபவர் ஒருவர்தான். 10 பேரை நிர்வாகம் நியமித்துள்ளது. ஆசிரியர் பயிற்சி நிறுவனமும் நடத்தி வருகிறோம். அதில் ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர்களை வைத்துத்தான் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கிறோம். அதனால்தான் ஓரளவுக்கு சமாளிக்க முடிகிறது. இந்தப் பகுதியில் நடுத்தரத்துக்கும் கீழே கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள்தான் அதிகம் வருகிறார்கள். மதியம் சத்துணவு வழங்கப்பட்டாலும், காலை உணவு உண்ண முடியாத மிகவும் ஏழை பிள்ளைகளைப் பட்டியல் எடுத்து சிற்றுண்டி தயாரித்து வழங்குகிறோம். மாலையில் சிறப்பு வகுப்புகள் நடைபெறும்போது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் டிபன் வழங்குகிறோம்.

‘‘மாணவர்கள் அதிகமானால் கவனம் குறையும்!’’

சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட குடும்பத்துப் பிள்ளைகளும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்துப் பிள்ளைகளும் இங்கு படிக்கிறார்கள். பார்வைத்திறன் குறைந்த பிள்ளைகளையும் எளிதில் புரிந்துகொள்ளும் திறனின்மை கொண்ட குழந்தைகளையும் (dyslexia) சேர்த்துக்கொண்டு பயிற்சி தருகிறோம். இங்கு படித்த இரண்டு மாற்றுத் திறனாளி மாணவர்களில் சத்யபிரசாத் என்பவர் மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், வெற்றிவேல் என்ற மாணவர் நியூயார்க் பல்கலையிலும் படித்துக் கொண்டிருக்கிறார்.  இந்த ஆண்டு ப்ளஸ் டூ தேர்வில் மதுரை மாவட்ட அரசு உதவிபெறும் பள்ளிகளில் எங்கள் பள்ளிதான் முதலிடம். இதுபோன்ற நல்ல விஷயங்கள் தொடர்வதால் ஆண்டுதோறும் அதிகமான மக்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க விண்ணப்பிக்கிறார்கள். இருந்தாலும் அத்தனை பேரையும் சேர்க்க முடியாது. அதிகமாக பிள்ளைகளைச் சேர்ப்பதால் ஒரு பள்ளிக்கு வருமானம்தான். ஆனால் கல்வித்தரமும் கவனிப்பும் குறைய வாய்ப்பு உள்ளது. அதனால் வகுப்புக்கு 40 பேர் என்பதில் நாங்கள் எந்தச் சமரசமும் செய்வது இல்லை. அரசு இடம் கொடுத்தால் இன்னொரு பள்ளியைக் கட்ட எங்கள் நிர்வாகம் தயாராக உள்ளது. இங்கு மாணவர் சேர்க்கையில் சாதியோ, வசதியோ, சிபாரிசோ பார்ப்பதில்லை. ஓரளவு கேட்பதற்கு பதில் சொல்லத் தெரிந்த மாணவர்களை சேர்த்துக்கொள்கிறோம். ஆறாம் வகுப்புக்கும்,

11-ம் வகுப்புக்கும் நியூ அட்மிஷனுக்கு வருவார்கள். அதில் மொத்த மாணவர்களில் அவர்கள் வாங்கிய மதிப்பெண் அடிப்படையில் சேர்த்துக்கொள்வோம். இதுவரை பள்ளி வளர்ச்சிக்காக எம்.எல்.ஏ., எம்.பி., நிதியுதவியோ, எஸ்.எஸ்.ஏ. மூலம் வழங்கும் நிதியையோ வாங்கியது இல்லை’’ என்றார்.

பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவரான மகாதேவன், ‘‘மாணவர்களை மட்டுமல்ல, பெற்றோர்களையும் மதிக்கும் பள்ளி இதுதான். இந்தப் பகுதியே கூலித்தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. அவர்களின் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க இப்பள்ளிதான் உதவுகிறது. மாணவர்களுக்கு தேவையான அரசு உதவிகள் அனைத்தையும் பள்ளி நிர்வாகமே வாங்கிக் கொடுத்து விடுகிறது’’ என்றார்.

பெற்றோர்களும் மாணவர்களும் விரும்பும் இதுபோன்ற பள்ளிகள் நிறைய வரலாமே!

- செ.சல்மான்
 படங்கள்: பா.காளிமுத்து

அடுத்த கட்டுரைக்கு