Published:Updated:

சுகாதாரமற்றுக்கிடக்கும் மதுரை ஆட்சியர் அலுவலகம்! - நடவடிக்கை எடுக்கப்படுமா?

சுகாதாரமற்றுக்கிடக்கும் மதுரை ஆட்சியர் அலுவலகம்! - நடவடிக்கை எடுக்கப்படுமா?
சுகாதாரமற்றுக்கிடக்கும் மதுரை ஆட்சியர் அலுவலகம்! - நடவடிக்கை எடுக்கப்படுமா?

தமிழகம் முழுவதும் டெங்கு தாக்கம் அதிகமானதற்கு காரணம் சுகாதாரக் கேடான பகுதிகள் எனக் கண்காணிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுவருகிறது. மிகவும் சுகாதரமற்றுக்கிடக்கும் இடங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக, தமிழகத்தில்  மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில்தான் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது எனச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மதுரை டெங்கு ஆய்வுக்கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில்  மதுரை மாவட்டம் முழுதும் பல்வேறு இடங்களுக்குச் சென்ற மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவராவ் சுகாதாரமற்ற இடங்களுக்கு அதிக அளவு அபராதம் விதித்துவருகிறார். ஆனால், அவரது அலுவலகத்திலேயே பல இடங்கள் சுகாதாரமற்று கிடப்பதால் கொசுக்கள் உருவாகும் சூழல் உள்ளது எனக் குற்றச்சாட்டு எழுகிறது. சில வாரங்களுக்கு முன் தனது அலுவலகத்தைச் சுத்தம் செய்யும்போது வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்துக்குப் பின்புறம் இருந்த சில இடங்களைச் சுத்தம் செய்யச்சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், இன்று வரை அப்பகுதியில் சுத்தம் செய்யப்படாமல் பழைய மதுபாட்டில்கள், குப்பைகள் என்று ஒரு லாரி நிரம்பும் அளவுக்கு குப்பைகள் சுகாதாரமற்ற முறையில் கிடக்கிறது. மக்கள் வந்துபோகும் இது போன்ற இடங்களில் சுகாதரமற்று கிடப்பது ஆபத்து எனச் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டிவருகின்றனர் .

ஊர் முழுவதும் சென்று பைன் போடும் கலெக்டர் சாருக்கு யார் ஃபைன் போடுவது என்றும் கேள்விகளும் எழும்புகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கேட்டதற்கு, `நான் இதை ஏற்கெனவே பார்க்கச் சொல்லிருந்தேன்; இன்னும் சுத்தம் செய்யாமல் இருப்பது வேதனை அளிக்கிறது இன்றே இதைச் சுத்தம் செய்ய வடக்கு மண்டல தாசில்தாருக்கு உத்தரவிடுகிறேன்' எனத் தெரிவித்தார்.