Published:Updated:

சாக்கடையா காவிரி?

கர்நாடகாவை விளக்கம் கேட்கும் பசுமைத் தீர்ப்பாயம்

தமிழகத்துக்கு வரும் காவிரியில் கர்நாடக மாநிலத்தின் கழிவுநீர் கலக்கப்படுவதைத் தடுக்க உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால், காவிரியில் கழிவு நீர் கலக்கப்படவில்லை என்று மறுக்கிறார், கர்நாடகாவின் சிறு குறு பாசனங்கள் துறை அமைச்சர்.

‘காவிரியில் அனுப்புவது சுத்தமானது அல்ல... கழிவுநீர்! - குமட்டவைக்கும் நிஜம்’ என்ற தலைப்பில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஜூ.வி இதழில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். தமிழக மக்களின் தாகத்தைத் தீர்க்கும் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளுக்கு நேரில் சென்றபோது, காவிரியில் கழிவுநீர் கலப்பதைக் கண்டு அதிர்ந்துபோனோம். அதுபற்றி ஜூ.வி-யில் அந்தக் கட்டுரையை வெளியிட்டோம். அதைத் தொடர்ந்து, காவிரி ஆற்றில் கழிவு நீர் கலக்கிறதா என்பதை ஆய்வுசெய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. காவிரியில் ஆய்வு நடத்திய அதிகாரிகள், தமிழக அரசிடம் அறிக்கை ஒன்றை அளித்தனர்.

சாக்கடையா காவிரி?

அதில், ‘தண்ணீரில் 3 மில்லி கிராம் அளவில்தான் பி.ஓ.டி எனப்படும் பயோ ஆக்சிஜன் டிமாண்ட் இருக்க வேண்டும். ஆனால், 29 மி.கி என்ற அளவில் அது உள்ளது. இது, நிர்ணய அளவைவிட 10 மடங்கு அதிகம். எனவே, அதிக அளவில் மாசு நிறைந்துள்ளது’ என்று அதிகாரிகள் குறிப்பிட்டு இருந்தனர்.

அதை அறிந்து அதிர்ச்சி அடைந்த தமிழக அரசியல் தலைவர்கள், தங்களின் கண்டனக் குரல்களை எழுப்பினர். தி.மு.க தலைவர் கருணாநிதி, காவிரி நீரில் கழிவுநீரைக் கலப்பதால், அதைக் குடிநீருக்காகப் பயன்படுத்தும் தமிழக மக்களுக்கும், தமிழக விவசாயத்துக்கும் நேர்ந்திடும் பேராபத்துகளை கருத்தில் கொண்டு உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி கழிவு நீர் அபாயத்தைத் தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., த.மா.கா, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன. சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த சுதன் என்பவர், தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் காவிரியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கக் கோரி பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

சுதன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விஜய்  தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழக மக்களின் ஜீவாதாரமாக உள்ள காவிரி, டெல்டா பகுதிகளுக்கு மட்டுமின்றி 16 மாவட்டங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்கிறது. கர்நாடகா, பெங்களூரு குடியிருப்புகள், ஹோட்டல்கள், மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், வடிகால்கள் வழியாக காவிரியில் திருப்பி விடப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 148 கோடி லிட்டர் கழிவு நீர், காவிரியில் கலக்கிறது. இதே நிலை நீடித்தால், குடிநீர் ஆதாரங்கள் பாதிப்பதோடு, காவிரியை நம்பியுள்ள டெல்டா பகுதிகளில் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் பாழாகும். எனவே, காவிரியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

சாக்கடையா காவிரி?

மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சொக்கலிங்கம், ‘இது தொடர்பாக கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர், குடிநீர் வாரியம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உட்பட கர்நாடக அரசின் 13 துறையினருக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உட்பட 5 துறையினருக்கும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை உட்பட மூன்று துறையினருக்கும் என 21 துறைகளின் தலைவர்களுக்கு ஜூலை 28-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் சிறு, குறு பாசனங்கள் துறை அமைச்சர் சிவராஜ் தாங்கடாகி இதுபற்றி பேசுகையில், ‘‘பெங்​களூரில் உற்பத்தியாகும் கழிவு நீர் கோரமங்களா, கொரட்டூர் பகுதிகளில் சுத்திகரிக்​கப்பட்டு கோலார் மற்றும் சிக்பல்லாபூருக்கு அனுப்பப்படுகிறது. இதற்காக, நீர் அபிவிருத்தி திட்டத்தின்படி ரூ.42 கோடி செலவில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை பயன்படுத்தும் வகையில் வர்த்தூர் பள்ளத்தாக்கு வழியாக சிக்பல்லாபூரில் வறண்ட நிலையில் உள்ள 26 ஏரிகளிலும் கோலார் மாவட்டத்தில் உள்ள 108 ஏரிகளிலும் நிரப்ப அரசு அனுமதித்து உள்ளது. காவிரியில் கழிவு நீர் கலப்பதில்லை. இதுகுறித்து  தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நோட்டீஸ் இன்னும் அரசுக்குக் கிடைக்கவில்லை. கிடைத்ததும் அதற்கு விளக்கம் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

தேவை விளக்கம் மட்டும் இல்லை... சுத்தமான காவிரி நீரும்தான்!

- வீ.கே.ரமேஷ்
படம்: ரமேஷ் கந்தசாமி

அடுத்த கட்டுரைக்கு