Published:Updated:

‘‘சினிமா, அரசியல், ஆன்மிகம் மூன்றும் பின்னிப் பிணைந்தவை!’’

மதுரை ஆதீனம் கண்டுபிடிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மதுரை ஆதீனம் தன்னுடைய மடத்தை எப்போதும் பரபரப்பாக வைத்திருப்பதிலும் ஊடக வெளிச்சத்தில் எப்போதும் இருக்கவேண்டும் என்பதிலும் மிகவும் திட்டமிட்டு செயல்படுபவர்.

சில ஆண்டுகளுக்கு முன் நித்யானந்தாவை இளைய ஆதீனமாக அறிவித்தது, அதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடந்தது, பின்பு, நித்யானந்தாவால் தன் உயிருக்கு ஆபத்து என்று அலறியது, அதற்கு பின் வைஷ்ணவி, கஸ்தூரி என்ற இரண்டு சகோதரிகளை மடத்தின் நிர்வாகத்தைக் கவனிக்க நியமித்தது, அதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் அவர்களுக்குத் தன் செலவில் திருமணம் நடத்தி வைத்தது என்று இப்படி தொடர்ச்சியாக சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் இடையே பீடுநடைபோட்டு வந்தவர் ஆதீனம். பல்வேறு இந்து அமைப்புகள் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்தி, அதன் விளைவால் ஆதீன மடத்தை அரசே ஏற்று நடத்தும் சூழல் ஏற்பட்டபோது, டக்கென்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தன்னை அந்தக் கட்சியின் பிரசாரகராக மாற்றிக்கொண்டார். அந்த அவதாரத்துக்குப் பின் அவருக்கு எதிரான போராட்டங்கள் நின்றன.

‘‘சினிமா, அரசியல், ஆன்மிகம் மூன்றும் பின்னிப் பிணைந்தவை!’’

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகத் தீவிர பிரசாரம் செய்தார். ஜெ. சிறை சென்றபோது அதை கண்டித்து, தான் மடாதிபதி என்பதை மறந்து பல போராட்டங்களில் கலந்துகொண்டார். மீண்டும் ஜெ. முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சிக்குத் தன்னை அழைத்ததை பெரும் பாக்கியமாக நினைத்த அவர்,  தற்போது கவலையெல்லாம் மறந்து உற்சாக நிலைக்கு வந்துவிட்டார். ஆதீனத்துக்கு அம்மாவிடம் செல்வாக்கு இருக்கிறது என்று நினைத்து, கட்சிக்காரர்கள் முதல் கான்ட்ராக்டர்கள் வரை பலரும் அவரைக் காண வருகிறார்கள். இந்த நிலையில்தான், நடிகர் சங்க பிரச்னையைத் தீர்த்து வைக்கிறேன் என்று களத்தில் இறங்கிவிட்டார் ஆதீனம். கடந்த 7-ம் தேதி ராதாரவி, நளினி உள்ளிட்ட குழுவினர் ஆதீனத்தை சந்தித்து ஆதரவு கேட்டனர். நடிகர் சங்கத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஆதீனம் எப்படி ஆதரிக்க முடியும் என்ற கேள்வி எழுந்தவுடன், ‘‘அது ஆதரவு அல்ல... ஆசி! சரத்குமார் அணிதான் வெற்றி பெறும். அதுதான் இறைவனின் கூட்டணி(!)’’ என்று ஆதீனம் சொன்னார்.

அடுத்து கடந்த 18-ம் தேதி மதுரை சென்ற சரத்குமார், நெடுஞ்சாண்கிடையாக ஆதீனத்தின் காலில் விழுந்து வணங்கினார். தன்னுடைய அன்றாட பூஜைகளை மறந்து ஒரு மணி நேரம் சரத்துக்கு பின்னால் அமர்ந்து தூங்குவதும் விழிப்பதுமாக இருந்தார் ஆதீனம்.

அப்போது நம்மிடம் பேசிய ஆதீனம், ‘‘நடிகர் சங்க விவகாரத்தில் தூதுவராகச் செயல்பட்டு பிரச்னையை சுமுகமாக முடிக்க இருக்கிறேன். சினிமா, அரசியல், ஆன்மிகம் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. அதனால்தான், சந்நிதானமாக இருக்கும் நான், அரசியல் பேச வேண்டியதாகிறது; சினிமாவைப்பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது. இது எல்லாமே இறைவனின் கட்டளை’’ என்றவரிடம், ‘‘திருஞானசம்பந்தரால் ஆதீன மடம் உருவாகி பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. சினிமா தோன்றி 150 வருடங்கள்தான் ஆகின்றன. அப்புறம் எப்படி சாமி, சினிமாவுக்கும் ஆதீனத்துக்கும் தொடர்பு ஏற்படும்?’’ என்று நாம் கேட்டோம்.

‘‘சினிமா, அரசியல், ஆன்மிகம் மூன்றும் பின்னிப் பிணைந்தவை!’’

‘‘சினிமா துறையில் இருக்கும் பெரும்பாலானவர்கள் என் ஆசி பெற்றவர்களே. குறிப்பாக, நடிகர்கள் சிவகுமார், விஷால், நாசர், சரத்குமார், ராதாரவி உட்பட அத்தனை பேரும் என் மீது அன்புகொண்டவர்கள். நான் சொன்னால் அவர்கள் எதையும் மீற மாட்டார்கள். நடிகர் சங்க கட்டடம் கட்டுவதில்தான் பிரச்னை. அதை நிறுத்திவிட்டால் எல்லோரும் சமாதானமாகிவிடுவார்கள். சரத் மீண்டும் தலைவராக வெற்றி பெறுவார்’’ என்று குழப்பியடித்தார்.

இதற்கு மறுநாள் விஷால் அணியினர் அதிரடியாக மதுரைக்கு வந்து சேர்ந்தனர். இவர்கள் ஆதீனத்தை சந்திக்க செல்கிறார்கள் என்று யாரோ வதந்தியைப் பரப்ப, ஆதீனமும் மடத்திலேயே இருந்தார். ஆனால், பாண்டியன் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த விஷால் அணி, காரசாரமாக சரத், ராதாரவியை காய்ச்சி எடுத்து பேட்டி கொடுக்க, ‘‘ஆதீனத்தை சந்திக்க செல்வீர்களா’’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘அவரின் ஞானதிருஷ்டி பவரால் என்னவெல்லாம் நடந்தது என்று எங்களுக்குத் தெரியும். அதனால், அவரை சந்திக்க வேண்டிய அவசியமில்லை’’ என்று சிரித்துக்கொண்டே நடிகர் பொன்வண்ணன் கூற, எல்லோரும் சிரித்துவிட்டார்கள்.

‘‘சினிமா, அரசியல், ஆன்மிகம் மூன்றும் பின்னிப் பிணைந்தவை!’’

இதையெல்லாம் டி.வி-யில் பார்த்துக்கொண்டிருந்த ஆதீனம், ஜெர்க் ஆகி, அப்செட் நிலைக்கு சென்றுவிட்டார். அதற்குப்பின் விஷால் டீம் சுண்ணாம்புக்காரத் தெருவில் இருக்கும் நாடக நடிகர் சங்கத்துக்குச் சென்றனர். இவர்கள் அனைவரும் சரத் - ராதாரவியின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், அப்படியெல்லாம் இல்லை என்பதுபோல் பட்டாசு வெடித்து, சிறப்பான வரவேற்பு கொடுத்தார்கள்.

1926-ல் இந்தியாவில் முதன்முதலாக மதுரையில் உருவாக்கப்பட்ட நாடக நடிகர் சங்கத்தில் மொத்தம் 400 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 170 பேருக்கு வாக்குகள் உள்ளன.

இதுபற்றி நாடக நடிகர் சங்கத்தின் தலைவர் மோகன், ‘‘இனி நடிகர் சங்க பொறுப்புக்கு யார் வந்தாலும், எங்களைப் போன்ற நாடக நடிகர்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் போட வேண்டும்’’ என்றார். அவரிடம், கருணாஸ், நாசர், கார்த்தி, பொன்வண்ணன், விஷால் ஆகியோர் நீண்ட நேரம் பேசிவிட்டு அவர்களுக்கு பல பொருளாதார உதவிகளைச் செய்வதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.

இவர்களுக்கு நாடக நடிகர்கள் கொடுத்த வரவேற்பை தொலைக்காட்சியில் பார்த்த சரத் தரப்பினர், உடனே ஆதீனத்தைத் தொடர்புகொண்டு, ‘‘அங்குள்ள நாடக நடிகர்களின் வாக்குகள் நமக்குத்தான் வேண்டும். அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்’’ என்று சொன்னார்கள். இதனால் தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு நிர்வாகி, மதுரையில் தங்கியபடி அங்குள்ள ஒவ்வொரு வாக்கையும் எப்படி வாங்குவது என்று திட்டமிட்டு வருகிறார். நாடக நடிகர்களில் எந்தெந்த சாதியினர் இருக்கிறார்களோ அந்த சமுதாய தலைவர்களைப் பிடித்து, அவர்களை மனம் மாற்றும் ஏற்பாட்டையும் ஆதீனம் முடுக்கிவிட்டுள்ளார்.

விஷால் அணியின் பின்னால் தி.மு.க உள்ளது என்பதை சரத் அணியினர் மறைமுகமாகச் சொல்லி வந்தனர். அதையும் ஆதீன மடத்தில் வைத்துச் சொன்னால், முதல்வர் காதுக்குப் போகும் என்று நினைத்துத்தான் அன்று அங்கு வைத்து பிரஸ் மீட் கொடுத்தார் சரத். ஆர்.கே.நகர் தேர்தல் நிலவரத்தைக் கவனித்துக்கொண்டிருக்கும் முதல்வர் இந்தப் பிரச்னையைக் கண்டுகொள்ளவில்லையாம்.

‘மதுரை ஆதீனம் ரொம்ப ஓவராகப் போகிறார்’ என்று விசனப்பட்ட மதுரை மாவட்ட தி.மு.க-வினர், ஆதீனத்துக்கு எதிராக ஆஃப் ஆகிக் கிடக்கும் பழைய பிரச்னைகளைக் கிளப்பிவிட இருக்கிறார்களாம். நடிகர்கள் வருகை தருவதைப் பார்த்து ‘ஹேப்பி அண்ணாச்சி’யாக இருந்த ஆதீனத்துக்கு இனிமேல் குடைச்சல் ஆரம்பம் என்று சொல்கிறார்கள்.

- செ.சல்மான்
படங்கள்: எம்.விஜயகுமார், ஈ.ஜெ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு