சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கில், இன்னும் 6 வார கால அவகாசத்தில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியா, 3 ஆயிரத்து 554 கடல் மைல் தூரத்துக்கு கடற்கரையைகொண்டு பல்வேறு நாடுகளோடு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கி வருகிறது. இந்தியக் கடல் வணிகம் கிழக்கு, மேற்குக் கரைகளுக்கு இடையேயும் நெடுங்காலமாக நடந்துவருகிறது. ஆனால் கிழக்கு, மேற்குக் கரைகளை இணைத்து, கப்பல் போக்குவரத்துப் பாதை அமையப்படாத நிலையே இருந்துவருகிறது. இந்த நிலையில், மேற்குக் கரையோரங்களில் இருந்தும், மேற்கத்திய நாடுகளில் இருந்தும் கிழக்குக் கரையோரத் துறைமுகங்களுக்கு வரவேண்டிய கப்பல்கள், இலங்கையைச் சுற்றி நீண்ட பாதையைக் கடக்கவேண்டியுள்ளது.
இதற்காக, ’சேது சமுத்திரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால், நாட்டின் குறிப்பிடத்தக்க பொருளாதார மேம்பாட்டுக்கு உதவக்கூடும். தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கனவான பாம்பன் பாலம் வழியில் அமைக்கக்கூடிய சேது சமுத்திரத் திட்டத்தை அரசு முனைந்து செயல்படுத்தும். இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, தமிழகத்தின் தென்மாவட்டங்களும் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டமும் பெருமளவில் பொருளாதார நன்மைகளை அடைவதோடு, ஏராளமான வேலை வாய்ப்பையும் பெறும்’ என நீண்ட நாள்களுக்கு முன்னர் மத்திய அரசின் சார்பில் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சேது சமுத்திரத் திட்டம் மதம், பாரம்பரியம் எனப் பல பரிமானங்களைக்கொண்டு விளங்கியதால், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றக்கோரி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். பல காலமாக நீடித்துவந்த இந்த வழக்கில், தற்போது உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவில், சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கில், இன்னும் 6 வார கால அவகாசத்துக்குள் தீர்ப்பு வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.