Published:Updated:

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைக்கும் திருட்டுக் கும்பல் கைது!

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைக்கும் திருட்டுக் கும்பல் கைது!
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைக்கும் திருட்டுக் கும்பல் கைது!

கடந்த சில வாரங்களாக திருச்சி மாநகரப் பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதற்குக் காரணமானவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிரமாகச் செயல்பட்டாலும், திருடர்கள் சிக்காமல் இருந்துவந்தனர். மேலும், திருச்சி மாநகரத்தில் தனியாகச் செல்லும் பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறிப்புச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், கடந்த 9-ம் தேதி இரவு 8 மணியளவில், திருச்சி கருமண்டபம் காவல் சோதனைச்சாவடி அருகில் மேற்படி தனிப்படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, கிடைத்த தகவல்படி அந்த வழியாக வந்த நபரைப் பிடித்து விசாரித்ததில், அவர் திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த அப்பு என்கிற புருசோத்தமன் என்று தெரியவந்தது. மேலும், அவரிடம் போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில், அவர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் பல திருட்டு, வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

விசாரணையில், கண்டோன்மென்ட் பகுதிகளில் நடைபெற்ற 11 திருட்டு வழக்குகள், 1 வழிப்பறி, 3 இருசக்கர வாகனத் திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் புருஷோத்தமன் சம்பந்தப்பட்டுள்ளதையும், கடந்த 9-ம் தேதி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் பழ வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூபாய் 5 ஆயிரம் பறித்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரைக் கைதுசெய்த போலீஸார், அவரிடமிருந்து சுமார் 28 சவரன் தங்க நகைகளையும், 3 இருசக்கர வாகனங்களையும் கைப்பற்றினர்.

இதேபோல, புருஷோத்தமன் பிடிபட்ட அதே நாளில், திருச்சி பொன்மலை சாய்பாபா கோயில் அருகில் பைக்கில் சென்றுகொண்டிருந்த திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த பிரின்ஸ் மற்றும் கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த ராஜதுரை ஆகியோரை போலீஸார் பிடித்தனர். இந்த இருவர் மீதும், திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் திருச்சி கண்டோன்மென்ட், திருவெறும்பூர் அமர்வு நீதிமன்றம், பெரம்பலூர், பாடாலூர் ஆகிய காவல்நிலையங்களில் பல வழக்குகள் இருந்ததும் தெரியவந்தது.

மேற்படி நபர்கள், கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி செந்தண்ணீர்புரம் பாலம் அருகிலுள்ள பைபாஸ் ரோடு, கே.கே.நகர் பகுதியிலுள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் அருகிலும் மற்றும் திருச்சி ஏர்போர்ட் பகுதியில் உள்ள ஜெயம் மளிகைக் கடை, குளாப்பட்டி ரோடு உள்ளிட்ட இடங்களில் தனியாக இருந்த பெண்களிடம் கழுத்திலிருந்து செயின்களைப் பறித்துச் சென்றதும் அம்பலமானது. அதையடுத்து, அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள சுமார் 10 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. மேலும், அவர்கள் செயின் பறிப்புக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது. கைதுசெய்யப்பட்ட பலே திருடர்கள் இப்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொள்ளையடித்த பொருள்களை விற்றுக் கிடைக்கும் பணத்தில் ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், பல்வேறு மாநில போலீஸாருக்கே தலைவலியாக இருக்கும் திருச்சி ராம்ஜி நகர் திருடர்கள்,  விதவிதமாகக் கொள்ளையடிப்பதில் கில்லாடிகள். ஆனால், இவர்களின் சொந்த ஊரான திருச்சியில் இதுநாள்வரை கைவரிசை காட்டவில்லை. அதுதான் அவர்களின் தொழில் தர்மமாக வைத்திருந்தனர். ஆனால், இப்போது அதை மீறும் வகையில் திருச்சிக்குள்ளேயே கைவரிசை காட்ட ஆரம்பித்துள்ளதாகவும் தற்போது பிடிபட்டுள்ள புருசோத்தமன் ராம்ஜிநகரைச் சேர்ந்தவர் என்பதால், மேலும் உள்ள திருடர்களை கண்காணிக்கவும், பிடிக்கவும், திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் 2 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.