Published:Updated:

தரைதட்டி நிற்கும் கப்பலை சிறைவைக்க உத்தரவு!

தரைதட்டி நிற்கும் கப்பலை சிறைவைக்க உத்தரவு!
தரைதட்டி நிற்கும் கப்பலை சிறைவைக்க உத்தரவு!
தரைதட்டி நிற்கும் கப்பலை சிறைவைக்க உத்தரவு!

சென்னை: சென்னை துறைமுகம் அருகே தரைதட்டி நிற்கும் கப்பலை சிறைவைக்க  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தரைதட்டிய கப்பலிலிருந்து உயிர் தப்ப முயன்று பலியான பொறியாளர் ஆனந்தன்  என்பவரது சகோதரர்,நஷ்ட ஈடு மற்றும் நீதி விசாரணை கோரி, சென்னை உயர்  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தரை தட்டி நிற்கும் கப்பலை  சிறை வைக்க உத்தரவிடடதோடு, இது தொடர்பாக வருகிற 6 ம் தேதிக்குள் பதில்  அளிக்கும்படி தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கு, நோட்டீஸ் அனுப்பவும்  உத்தரவிட்டது.

முன்னதாக வங்க கடலில் உருவான நீலம் புயல் காரணமாக,சென்னை துறைமுகத்திற்கு சரக்கு  இறக்குவதற்காக வந்த 23 சரக்கு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதாமல் இருக்க  பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம், நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டன.

ஏற்கனவே, பிரதீபா காவேரி என்ற சரக்கு கப்பல் மட்டும் துறைமுகத்தில் இருந்து சுமார்   6 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டு இருந்தது.ஊழியர்களுக்கு சம்பள பாக்கி   இருப்பதால் அந்த கப்பல் பல நாட்களாக அங்கு நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டு   இருந்ததாக கூறப்படுகிறது.

மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு சொந்தமான அந்த கப்பல், பலத்த  புயல் காற்றில் சிக்கியது.புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த கப்பல் அங்கும்   இங்குமாக அலைக்கழித்து இழுத்து வரப்பட்டு,சென்னை பெசன்ட்நகரில் பிரம்ம   ஞானசபைக்கு பின்புறம் எலியட்ஸ் கடற்கரை அருகே கடலில் நேற்று முன் தினம்  பிற்பகல் 3 மணி அளவில் தரைதட்டி நின்றது.

கப்பல் தரை தட்டியதும்,அதில் இருந்த 37 ஊழியர்களில் 21 பேர் உயிர் தப்புவதற்காக   கப்பலில் உள்ள உயிர் காக்கும் 3 சிறிய படகுகள் மூலம் கரைக்கு செல்ல முயன்றனர்.   அவர்கள் கரையை நோக்கி வந்த போது காற்று பலமாக வீசியதால் படகுகள் திடீரென   கவிழ்ந்தன.இதனால் அவர்கள் கடல் நீரில் விழுந்து தத்தளித்தனர்.

இதை கரையில் இருந்து பார்த்த மீனவர்கள் படகுகளில் சென்று கடலில்   தத்தளித்தவர்களில் 16 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.உடனடியாக அவர்கள்   சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக   சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி புதுச்சேரியை சேர்ந்த ஆனந்த் மோகன்தாஸ்  என்ற ஊழியர் பரிதாபமாக இறந்தார்.மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதனிடையே ,படகுகள் மூலம் தப்ப முயன்று  கடலில் விழுந்தவர்களில் 5 பேர்  மாயமான நிலையில்,அவர்களை கடற்படை, கடலோர காவல்படையைச் சேர்ந்த  நீர்மூழ்கி வீரர்கள் மூலம்  தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதில் 3 பேர்களது சடலம்  நேப்பியார் பாலம் மற்றும் துறைமுகம் அருகே கண்டெடுக்கப்பட்டது. காணாமல் போன மேலும் 2 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.