Published:Updated:

நெல்லையில் நட்சத்திர ஆமைகள் பறிமுதல்: தோட்டத்தில் வளர்த்த இருவர் கைது!

நெல்லையில் நட்சத்திர ஆமைகள் பறிமுதல்:  தோட்டத்தில் வளர்த்த இருவர் கைது!
நெல்லையில் நட்சத்திர ஆமைகள் பறிமுதல்: தோட்டத்தில் வளர்த்த இருவர் கைது!

நெல்லையில் நட்சத்திர ஆமைகள் பறிமுதல்: தோட்டத்தில் வளர்த்த இருவர் கைது!

நெல்லை மாவட்டத்தில் அரிய வகை ஆமைகளை தொட்டியில் வளர்த்து விற்பனை செய்ய முயற்சி செய்த தந்தை, மகனை வனத்துறையினர் பிடித்து நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவருக்கும் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பொட்டல் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான பண்ணைத் தோட்டம் உள்ளது அதனை கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் மற்றும் அவரது மகன் குஞ்சுமோன் ஆகியோர் கவனித்து வந்தனர். அந்தப் பண்ணையில் ஆடு, கோழி, மாடு ஆகியவை வளர்க்கப்படுகின்றன. அத்துடன், விவசாயமும் பெரும் அளவில் நடைபெற்று வருகிறது.

முண்டந்துறை வனச்சரகம் அருகில் அமைந்துள்ள இந்தப் பண்ணையில் நட்சத்திர ஆமைகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனால் அவற்றைக் கடத்தும் கும்பலைப் பிடிக்கும் எண்ணத்தில் வனத்துறையினர் கடந்த இரு தினங்களாக அந்தப் பண்ணையைக் கண்காணித்து வந்தனர். ஆனால், இதனை அறிந்துகொண்ட கும்பல் அங்கு வராமல் தப்பி ஓட்டம் பிடித்தது. அதனால் வனத்துறையினர் அந்தப் பண்ணையில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினார்கள். 

அதனைத் தொடர்ந்து அங்குள்ள தொட்டி ஒன்றில் தடை செய்யப்பட்ட அரிய வகை ஆமைகளை வளர்ப்பதைக் கண்டுபிடித்தனர். தொட்டியிலிருந்த 9 ஆமைகளைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜேம்ஸ், அவரது மகன் குஞ்சுமோன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வகையான ஆமைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி இருப்பதால், இங்கிருந்து ஏற்கெனவே வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டனவா? என்பது குறித்தும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

அடுத்த கட்டுரைக்கு