Published:Updated:

டாஸ்மாக் நிறுவனத்தின் `அடடே' புத்தாண்டு கணக்கு!

டாஸ்மாக் நிறுவனத்தின் `அடடே' புத்தாண்டு கணக்கு!
டாஸ்மாக் நிறுவனத்தின் `அடடே' புத்தாண்டு கணக்கு!

டாஸ்மாக் நிறுவனத்தின் `அடடே' புத்தாண்டு கணக்கு!

புத்தாண்டுக்காகக் கோயில், சர்ச், குளம் என்று ஒருபக்கம் களைகட்டினாலும்... பார்ட்டி, பீச் என்பதுதான் பிரதானமாகப் பார்க்கப்படுகிறது. முந்தைய நாள் டிசம்பர் 31 மாலையிலிருந்து தொடங்கும் சரக்கு சமாசாரங்கள், அடுத்த நாள் மாலை வரையிலும்கூட முடிவில்லாமல் தொடரும். என்னதான் மூக்குமுட்டக் குடித்தாலும், ‘மச்சி ஸ்டெடியாதாண்டா இருக்கேன்’ என டயலாக் பேசிக்கொண்டே தடுமாறி விழுவதில் இருக்கும் சுகமே அலாதிதான் மதுப்பிரியர்களுக்கு!

`மது என்பது தேவையே இல்லை' என்று ஒருபக்கம் எதிர்பிரசாரங்கள் நடந்துகொண்டிருந்தாலும், 'அது இல்லாட்டி எது' என்கிற ரீதியில் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. அதனால், தீபாவளி, பொங்கல் மற்றும் புத்தாண்டு என்று பண்டிகை நேரத்தில் தன்னுடைய விற்பனை இலக்கை உயர்த்திக்கொண்டே இருக்கிறது தமிழக அரசின் மதுவிற்பனை நிறுவனமான டாஸ்மாக். 

ஊரே இடிந்துவிழுந்தாலும் குடிப்பதை மட்டும் நாங்கள் நிறுத்தவே மாட்டோம் என்பதை நிரூபித்துக்காட்டிய ஆண்டு, கடந்த 2016-ம் ஆண்டின் புத்தாண்டு. ஆம், அதற்கு சில வாரங்களுக்கு முன்புதான், அதாவது 2015 டிசம்பர் 1 அன்று சென்னை, கடலூர், தூத்துக்குடி என்று புரட்டிப்போட்டது வெள்ளம். மக்கள் படாதபாடு பட்டனர். வீடு, உடைமை எனப் பலவற்றையும் இழந்தார்கள் பலரும். ஆனால், அதைத் தொடர்ந்து வந்த புத்தாண்டில்கூட குடித்தார்கள் நம்மவர்கள். அந்த ஆண்டு புத்தாண்டு விற்பனை 170 கோடி ரூபாய். இது முந்தைய ஆண்டைவிட சுமார் 6 கோடி ரூபாய் அதிகம். மற்ற சமயங்களில் ஜாலிக்காக, அந்த ஆண்டு மட்டும் வேதனையை மறக்க குடித்தார்களோ என்னவோ?

அடுத்து, 2016-ம் ஆண்டின் இறுதியில்தான் பண மதிப்பிழப்பு (டிமானிட்டைசேஷன்) நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், கையில் காசில்லாமல் ஆளாளுக்கு அலைபாய்ந்தார்கள். ஏ.டி.எம் வாசல்களில் க்யூ கட்டி நின்றார்கள். 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டு, புதிதாக 2,000 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. அதைக் கண்ணால் பார்ப்பது, கடவுளைப் பார்ப்பதற்கு இணையாக இருந்தது. இதற்கிடையிலும் அந்தப் புத்தாண்டில் (2017) சுமார் 210 கோடி ரூபாய்க்கு குடித்தார்கள். இது, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 40 கோடி ரூபாய் அதிகம். இவர்களுக்கெல்லாம் எந்த 'ரெட்டி'யும் 'பணிவும்' பணம் கொடுத்தார்களோ தெரியவில்லை. 

இந்நிலையில், இந்தப் புத்தாண்டுக்கு (2018) 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மது வகைகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது டாஸ்மாக் நிறுவனம். இது கடந்த ஆண்டு விற்பனையைக் காட்டிலும் சுமார் 10 கோடி ரூபாய் குறைவுதான் என்றாலும், மதுவகைகள் விலை உயர்த்தப்பட்டிருப்பதால், குறைவான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக, ‘பீர்’ வகைகள் கூடுதலாகக் கொள்முதல் செய்யப்பட்டு, கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதற்கிடையே, புத்தாண்டு சமயத்தில் மதுபான வகைகளை விதிகளுக்குப் புறம்பாக விலையை உயர்த்தி விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்பு உணர்வு சங்கம் வலியுறுத்தி உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு